― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்2047ல் பாரதத்தை வல்லசராக்க சூளுரைப்போம்: பிரதமரின் 76வது சுதந்திர தினவிழா பேருரை!

2047ல் பாரதத்தை வல்லசராக்க சூளுரைப்போம்: பிரதமரின் 76வது சுதந்திர தினவிழா பேருரை!

- Advertisement -
modiji in fort2

2047ல் பாரதத்தை வல்லசராக்க சூளுரைப்போம் என்று தேசப்பணியில் அர்ப்பணிக்க நாட்டு மக்களை உற்சாகப்படுத்தும் எழுச்சி உரை தமிழில்!

சுதந்திர தினத்தின் 75 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தில், எனது அருமை நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்! இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் மட்டுமின்றி, உலகில் தாய்நாட்டை நேசிக்கும் இந்தியர்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும், நமது மூவண்ணக்கொடி பெருமிதத்துடனும், மரியாதை மற்றும் மகிமையுடன், பட்டொளி வீசி பறப்பதை காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. நமது சுதந்திரத்தின் அமிர்தபெருவிழாவைக் கொண்டாடும் நேரத்தில், எனதருமை இந்தியர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் ஆகும். புதிய உறுதிப்பாடு மற்றும் புதிய வலிமையுடன், புதிய பாதையை நோக்கி முன்னேறிச் செல்வதற்கான புனிதமான தருணம் இது.

நமது விடுதலை வேட்கையில், அடிமைத்தன காலம் முழுவதும் போராட்டத்திலேயே கழிந்துவிட்டது. இந்தியாவின் எந்தப் பகுதியும் அல்லது எந்த காலகட்டமும், பல நூற்றாண்டு கால அடிமைத்தனத்திற்கு எதிரான சுதந்திரப் போராட்ட காலத்தை தொடாமல் விட்டதில்லை. மக்கள் கொடுமைகளைத் தாங்கிக்கொண்டு, தங்களுக்குத் தாங்களே தியாகம் செய்ததுடன், உயிர்த் தியாகமும் செய்துள்ளனர். இத்தகைய துணிச்சல்மிக்க இதயங்கள், மற்றும் ஒவ்வொரு பெரிய மகான்களின் பெரிய தியாகத்திற்கும், தலைவணங்கி மரியாதையை செலுத்த இதுவே சரியான தருணம் ஆகும். அவர்கள் கனவுகண்ட அம்சங்களையும், அவர்களது எதிர்பார்ப்புகளையும், தீர்க்கமான உறுதிப்பாட்டுடன் நிறைவேற்றுவதற்கு உறுதியேற்பதற்கும் இதுவே உரிய தருணம் ஆகும். பாபுஜி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பாபாசாஹேப் அம்பேத்கர், வீர் சாவர்க்கர் போன்று, தங்களது வாழ்நாள் முழுவதையும் நாட்டிற்காக அர்ப்பணித்த மாமனிதர்களுக்கு, நாட்டுமக்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். கடமையை நிறைவேற்றுவதே அவர்களது வாழ்நாள் பணியாக இருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடித்தளத்தை தகர்த்த மங்கள் பாண்டே, தாத்தியா தோபே, பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு, சந்திர சேகர ஆசாத், அஸ்பாகுல்லாகான், ராம்பிரசாத் பிஸ்மில் மற்றும் இவர்களை போன்ற எண்ணற்ற புரட்சியாளர்களுக்கு, இந்த நாடு பெரிதும் நன்றிக்கடன் பட்டுள்ளது. அதேபோன்று, இந்தியப் பெண்களின் வலிமையை பறைசாற்றிய ராணி லட்சுமி பாய், ஜல்கரிபாய், துர்கா பாபி, ராணி கைடின்லியு, ராணி சென்னம்மா, பேகம் ஹசரத் மஹால், வேலு நாச்சியார், தீரமிக்க பெண்களுக்கும் இந்த நாடு, நன்றிக்குரியதாகும். இந்தியாவின் ‘மகளிர் சக்தி’- மகளிர் சக்தியின் உறுதிப்பாடு என்ன? தியாகம் புரிந்த துணிச்சல் மிக்க எண்ணற்ற பெண்களை நினைவுகூரும்போது, ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் அடைகிறோம்.

சுதந்திரத்திற்காக போரிட்டதுடன், சுதந்திரத்திற்கு பிறகு நாட்டை கட்டமைக்க அரும்பணியாற்றிய டாக்டர் ராஜேந்திர பிரசாத், பண்டித நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், ஷியாம பிரசாத் முகர்ஜி, லால்பகதூர் சாஸ்திரி, தீன்தயாள் உபாத்யாயா, ஜெயபிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா, ஆச்சாரியா வினோபா பாவே, நானாஜி தேஷ்முக், சுப்பிரமணிய பாரதி போன்ற எண்ணற்ற மாமனிதர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் இதுவே சரியான தருணம்.

சுதந்திர போராட்டத்தை பற்றி நாம் பேசும்போது, வனப்பகுதிகளில் வசிக்கும் நமது பழங்குடியின சமுதாயத்தினரின் பங்களிப்பையும் நாம் மறந்துவிட முடியாது. பகவான் பிர்சா முண்டா, சித்து-கன்கு, அல்லூரி சீதா ராமராஜ், கோவிந்த் குரு போன்றோர், தாய் நாட்டிற்காக வாழ்ந்து மடிவோம் என்ற உறுதிப்பாட்டுடன், தொலைதூர வனப்பகுதிகளிலிருந்து சுதந்திர போராட்டத்திற்காக குரல் கொடுத்து, வனப் பகுதியில் வசித்த சகோதர, சகோதரிகள், தாய்மார்கள் மற்றும் இளைஞர்களை ஈர்த்தனர். நமது சுதந்திர போராட்டம் பல்வேறு அம்சங்களை கொண்டது நாட்டிற்கு கிடைத்த நல்வாய்ப்பாகும். நாராயண குரு, சுவாமி விவேகானந்தா, மகரிஷி அரவிந்தர், குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் போன்ற தலைசிறந்த மனிதர்கள், இந்தியாவின் மூலை முடுக்குகள் மற்றும் அனைத்து கிராமங்களையும் விழித்தெழ செய்து அதனை உயிர்ப்புடன் வைத்திருந்ததும் ஒரு அம்சமாகும்.

‘அமிர்தப் பெருவிழா’–வை நாடு எவ்வாறு கொண்டாடியது என்பதை கடந்த ஓராண்டு முழுவதும் நாம் நேரில் பார்த்தோம். 2021-ல் தண்டி யாத்திரையிலிருந்து அது தொடங்கியது. சுதந்திரத்தின் ‘அமிர்தப் பெருவிழா’ குறிக்கோள்களுக்கான வாய்ப்புகளை விரிவுப்படுத்தும் விதமாக, இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மூலை முடுக்குகளில் எல்லாம் மக்கள் நிகழ்ச்சிகளை நடத்தினர். குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக, இதுபோன்ற பிரமாண்டமான விழா விரிவான முறையில் நடத்தப்பட்டது வரலாற்றில் இதுவே முதன் முறையாகும். மறக்கப்பட்ட அல்லது சில காரணங்களுக்காக வரலாற்றில் இடம்பெற முடியாத, மாமனிதர்களை நினைவுகூரவும் நாடு முழுவதும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அத்தகையை அரிய மாவீரர்கள் மற்றும் சிறந்த மனிதர்களை, தன்னலமற்ற, துணிச்சல் மிக்கவர்களுக்கு நாடு தற்போது மரியாதை செலுத்துகிறது. இதுபோன்ற சிறந்த மனிதர்களுக்கு ‘அமிர்தப் பெருவிழா’ காலத்தில் மரியாதை செலுத்துவதற்கு இதுவே உரிய வாய்ப்பாகும்.

ஆகஸ்ட் 14ம் தேதியான நேற்று, தேசப்பிரிவினையால் ஏற்பட்ட ஆழமான காயத்தை, ‘பிரிவினை துயர நினைவு தினமாக’ இந்தியா கனத்த இதயத்துடன், நினைவுகூர்ந்தது. மூவண்ணக்கொடிக்கு பெருமை சேர்ப்பதற்காக கோடிக்கணக்கான மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தனர். தாய் நாட்டின் மீதான நேசத்தால், அவர்கள் பெரும் துயரத்தை அனுபவித்தபோதிலும், அவர்கள் பொறுமையை இழக்கவில்லை. இந்தியா மீதான நேசத்துடன், புது வாழ்க்கையை தொடங்குவது என்ற அவர்களது மனஉறுதி ஊக்கமளிப்பதாகவும், போற்றுதலுக்குரியதாகவும் இருந்தது.

இன்று நாம், ‘சுதந்திர தின அமிர்தப்பெருவிழா’-வை கொண்டாடும் வேளையில், நாட்டிற்காக வாழ்ந்து மடிந்த, நாட்டிற்காக கடந்த 75 ஆண்டுகளில் தங்களது வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள், நாட்டை பாதுகாத்தவர்கள் மற்றும் நாட்டின் உறுதிப்பாட்டை நிறைவேற்றியவர்கள்; அவர்கள் ராணுவத்தினராக இருந்தாலும் சரி, காவல்துறையினர், உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள், மத்திய- மாநில ஆட்சியாளர்கள் என அனைவரின் பங்களிப்பையும் நினைவு கூர்வதற்கும் இது ஒரு வாய்ப்பாகும். கடந்த 75 ஆண்டுகளில் பல்வேறு சவால்களுக்கு இடையிலும், நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல தங்களால் இயன்ற அளவு, பாடுபட்ட கோடிக்கணக்கான மக்களின் பங்களிப்பையும், இன்று நாம் நினைவுகூர்கிறோம்.

எனது அருமை நாட்டு மக்களே, கடந்த 75 ஆண்டுகால பயணம், ஏற்ற இறக்கங்கள் மிகுந்தது. நல்ல நேரங்களிலும், மோசமான தருணங்களிலும் நாட்டு மக்கள் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர்; அதற்கான முயற்சிகளை மேற்கொண்டனரே தவிர, அவற்றை விட்டுவிடவில்லை. உறுதிப்பாடுகள் மங்கிப்போக செய்யவும் இல்லை. காலனி ஆதிக்கத்தில் இருந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகள், இந்தியா மீதும், இந்திய மக்களின் மனதிலும் ஆழமான காயத்தை ஏற்படுத்தியபோதிலும், மக்கள் பொறுமை காத்து புத்தெழுச்சி பெற்றனர். சுதந்திர போராட்டத்தின் இறுதி காலக்கட்டத்தில், நாட்டை அச்சுறுத்தவும், ஏமாற்றி, விரக்தி அடைய செய்வதற்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. நாடு சுதந்திரம் பெற்று, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வெளியேறி விட்டால், நாடு சிதறுண்டு போவதுடன், மக்கள் உள்நாட்டு போரில் மடிவதோடு, இந்தியா இருண்ட காலத்திற்கு தள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இது இந்திய மண் என்பதை அவர்கள் அறியவில்லை. பல நூற்றாண்டுகள் ஆனாலும், தாக்குப்பிடிக்கும் அளவற்ற திறமையும், வலிமைமிக்க ஆட்சியாளர்கள் வெளியேறினாலும் செல்வாக்குடன் திகழும் திறன் இந்த நாட்டிற்கு உள்ளது. இதுபோன்ற, அபார திறமை மற்றும் புத்தெழுச்சியின் விளைவாக நமது நாடு, உணவு பிரச்சனை அல்லது போர் போன்ற எண்ணற்ற பாதிப்புகளுக்கிடையேயும் வலிமையான தேசமாக உருவெடுத்துள்ளது. அப்பாவி மக்களை, கொன்று குவித்த தீவிரவாத நடவடிக்கைகள் போன்ற சவால்களையும் நாம் வெற்றிகரமாக முறியடித்துள்ளோம். மறைமுக யுத்தங்கள், இயற்கை சீற்றங்கள், வெற்றிகள் மற்றும் தோல்விகள், நம்பிக்கை மற்றும் விரக்தி போன்றவற்றை எதிர்கொண்டபோதிலும் நாம் நிலைகுலைந்து விடவில்லை. இதுபோன்ற படுமோசமான நிலையிலும், இந்தியா அயராது முன்னேறியுள்ளது. இந்தியாவுக்கு பெரும் சுமையாக இருக்கும் என கருதப்பட்ட பன்முகத் தன்மை, நாட்டின் விலை மதிப்பற்ற சக்தி என நிரூபணமாகியுள்ளது, நாட்டின் வலிமைக்கு இதுவே வலுவான சான்றாகும்.

வலிமையான கலச்சாரம் மற்றும் நற்பண்புகள், இந்திய மக்களின் மனம் மற்றும் ஆன்மாவில் ஆழமாக வேரூன்றி மிகுதியாக உள்ளதையும், இந்திய ஜனநாயகத்தின் தாயகம் என்பதையும் உலகம் அறிந்திருக்கவில்லை. ஜனநாயக பண்புகளை மனதில் கொண்டு, உறுதிப்பாட்டுடன், அதனை தீர்க்கும் போது, உலகின் சக்தி வாய்ந்த நாடுகளையும் அழிவுப்பாதையில் தள்ளிவிடலாம். ஜனநாயகத்தின் தாயகமான இந்தியா, இந்த விலைமதிப்பற்ற வலிமையை பெற்றுள்ளது என்பதை, அனைவருக்கும் பறைசாற்றியுள்ளது.

எனது அருமை நாட்டு மக்களே,

எதிர்பார்ப்புகள், ஆசைகள், ஏற்றத்தாழ்வுகளுக்கிடையேயும், கடந்த 75 ஆண்டுகளில், அனைவரது முயற்சியாலும் நாம் இந்த நிலையை எட்டியுள்ளோம் 2014-ல் எனதருமை நாட்டு மக்கள் எனக்கு இந்த பொறுப்பை வழங்கினர், சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் இந்தியரான எனக்கு, செங்கோட்டை கொத்தளத்திலிருந்து எனதருமை நாட்டு மக்களின் புகழ்பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனினும், இன்று நான், அறிந்திருப்பது எல்லாம் உங்களிடமிருந்து அறிந்து கொண்டவைதான். உங்களது மகிழ்ச்சி மற்றும் துயரங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் நாடு எப்படி இருக்க வேண்டும் என, நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் என்னால் உணர முடிகிறது. உங்களது கனவுகளில், எதை நான் தழுவினாலும், இதுவரை புறக்கணிக்கப்பட்ட மற்றும் நலிந்து பிரிவினருக்கு அதிகாரமளிப்பதற்காக, எனது பதவிக்காலம் முழுவதையும் நான் பாடுபட்டு வருகிறேன். ஆனாலும், ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, பாதிக்கப்பட்ட, நலிந்த பிரிவினர், பழங்குடியினர், பெண்கள். இளைஞர்கள், விவசாயிகள் அல்லது மாற்றுத்திறனாளிகள் என அனைவரின் முன்னேற்றத்திற்காகவும் நான் பாடுபடுகிறேன். இந்தியாவின் கிழக்கு அல்லது மேற்கு, வடக்கு அல்லது தெற்கு, கடற்கரை பகுதிகள் அல்லது இமயமலை சிகரங்கள் என அனைத்து பகுதிகளிலும் மகாத்மா காந்தியின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற நான் என்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன். கடைக்கோடியில் உள்ளவர்களுக்கும் அதிகாரம் அளித்து அவர்களை மேம்படுத்துவது என்ற மகாத்மாவின் குறிக்கோளை நிறைவேற்ற நான் உறுதிப்பூண்டுள்ளேன். சுதந்திரம் அடைந்த பின், பல தசாப்தங்களாக பெற்ற அனுபவத்தின் காரணமாக, இதன் பலனை, கடந்த எட்டு ஆண்டுகளில் நான், கண்டுவருகிறேன். 75 ஆண்டு கால பெருமையை குறிக்கும் விதமாக, இன்று நாம் அமிர்தப்பெருவிழாவை கொண்டாடுகிறோம். இந்த அமிர்த காலத்தின் முதல் காலைப்பொழுதில், அதிகாரம் பெற்ற தேசத்தை காணும் போது, பெருமிதம் நிறைந்தவனாக இருக்கிறேன்.

எனதருமை நாட்டு மக்களே,

இந்தியர்கள் முன்னேற்றத்தை விரும்பும் சமுதாயமாக உருவெடுத்துள்ள, பேரதிருஷ்டத்தை நான் காண்கிறேன். முன்னேற்றத்தை விரும்பும் சமுதாயம், எந்த ஒரு நாட்டிற்கும் மிகப்பெரிய சொத்தாகும். இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து பிரிவினரும், சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும், எதிர்ப்பார்ப்புகள் உள்ளவர்களாக இருப்பது நமக்கு பெருமிதம் அளிக்கிறது.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகின்றனர், மாற்றத்தைக்காண விரும்புகின்றனர், ஆனால், அதற்காக காத்திருக்க தயாராக இல்லை. இந்த மாற்றங்களை தமது வாழ்நாளிலேயே காண விரும்புவதுடன், இதனை நிறைவேற்றுவதை தமது கடமையின் ஒரு பகுதியாக கருதுகின்றனர். வேகம், முன்னேற்றத்தையும், விரும்புகின்றனர். 75 ஆண்டுகளில், செழித்தோங்கியுள்ள கனவுகள் அனைத்தும் தமது கண் முன்பாக நிறைவேறுவதை காணவும் ஆவலாக உள்ளனர். இது சிலருக்கு, பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். ஏன் எனில், சமுதாயம் முன்னேற்றத்தை விரும்பினால், அரசாங்கமும் கத்தி முனையில் நடக்கவேண்டிய நிலை ஏற்படுவதுடன், காலத்திற்கேற்ப மாறவேண்டிய சூழலும் ஏற்படும். மத்திய அரசு, மாநில அரசு அல்லது உள்ளாட்சி அமைப்பு என எதுவாக இருந்தாலும், எத்தகையை ஆட்சிமுறை என்பது ஒரு பிரச்சனையே அல்ல, முன்னேற்றத்தை விரும்பும் இந்த சமுதாயத்தின் விருப்பத்தை பூர்த்தி செய்ய அனைவரும் முயற்சிப்பார்கள் என்பதிலும், இதனை நிறைவேற்றுவதற்காக நாம் நீண்ட காலம், காத்திருக்க தேவையில்லை என்றும் நான் நம்புகிறேன். முன்னேற்றத்தை விரும்பும் நமது சமுதாயம் நீண்டகாலமாக காத்திருக்கிறது. ஆனால், தற்போது அவர்கள், தங்களது எதிர்கால் சந்ததியினரும் இதுபோன்ற காத்திருப்புடன் வாழ்வதை விரும்பவில்லை, எனவே, இந்த ‘அமிர்த காலத்தின்’ முதல் விடியல், முன்னேற்றத்தை விரும்பும் இந்த சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான பல பொன்னான வாய்ப்புகளை நமக்கு அளித்துள்ளது.

எனதருமை நாட்டு மக்களே,

சமீபத்தில், அதுபோன்ற, அனுபவமிக்க, கூட்டு பொறுப்புணர்வு மற்றும் புத்தெழுச்சி மிக்க சக்தியை நம்மால் காணமுடிந்தது. அதுபோன்ற கூட்டுணர்வின் எழுச்சி, நமது சுதந்திர போராட்டத்திற்கான ஒரு அமிர்தம் என்பதோடு, தற்போது அது பாதுகாத்து பராமரிக்கப்படுகிறது. இது, தீர்மானமாக மாறியிருப்பதுடன், முயற்சிகள் முடிவடைந்து சாதனைகளை காண முடிகிறது. கூட்டுணர்வுகளை எழுச்சியுற செய்வதும் இத்தகைய மறுமலர்ச்சியும் நமது மாபெரும் சொத்துக்களாகும்.

இந்த மறுமலர்ச்சியை காணுங்கள். 10 ஆகஸ்ட் வரை, நாட்டிற்குள் இருந்த சக்தியைக்கூட யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் கடந்த 3 நாட்களாக மூவண்ணக்கொடி பயணத்தை நாடு கொண்டாடும் முறை, சமூக அறிவியலின் முன்னணி வல்லுனர்களால்கூட, மதிப்பிட முடியவில்லை. இது மறுமலர்ச்சி மற்றும் உணர்வுமிக்க தருணமாகும். மக்கள் இன்னும் இதை புரிந்துகொள்ளவில்லை. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் ‘மக்கள் ஊரடங்கை’ அனுசரித்தபோது, இந்த உணர்வை நம்மால் உணர்ந்துகொள்ள முடிந்தது. கையொலி எழுப்பியும், பாத்திரங்களை தட்டியும், ஒலி எழுப்பி, கொரோனா முன்கள பணியாளர்களுடன் தோளோடு தோள் நின்றபோது, நாட்டில் இத்தகையை உணர்வு காணப்பட்டது. கொரோனா முன்கள பணியாளர்களுக்காக விளக்கேற்றியபோதும், நாடு இத்தகைய உணர்வை உணர்ந்தது. கொரோனா காலக்கட்டத்தில் தடுப்பூசியை செலுத்துவதா, வேண்டாமா, தடுப்பூசிகள் பயனளிக்குமா இல்லையா? என ஒட்டுமொத்த உலகமும், குழப்பத்தில் தவித்தது. அந்த காலகட்டத்தில், 200கோடி தடுப்பூசிகளை செலுத்தியதன் மூலம், நம் நாட்டின் கிராமங்களில் உள்ள ஏழை மக்கள் கூட, உலகை வியப்பில் ஆழ்த்தினர். இது தான், உணர்வு; இதுதான் நமது திறமை, அதுவே நம் நாட்டிற்கு தற்போது புதிய வலிமையை அளித்துள்ளது.

எனதருமை சகோதர, சகோதரிகளே,

ஒரு முக்கியமான ஆற்றலை என்னால் காண முடிகிறது. சுதந்திரத்தின் பல பத்தாண்டுகளுக்கு பின்னர் இந்தியாவை பொறுத்தவரை உலகத்தின் போக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகம் இந்தியாவை பெருமையுடனும், எதிர்பார்ப்புடனும் நோக்குகிறது. பிரச்சனைகளுக்கு தீர்வு காண உலகம் இந்தியாவை எதிர்நோக்கியுள்ளது. உலகத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், அதன் சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவை நமது கடந்த 75 ஆண்டு கால பயணத்தின் அனுபவமாகும்.

நாம் முன்னேறிச்செல்லும் வழியை உலகம் கவனித்து வருவதுடன், ஒரு புதிய நம்பிக்கையையும் கொண்டுள்ளது. எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது என்பதை உலகம் உணரத்துவங்கியுள்ளது. இதனை விருப்பம், மீட்சி, உலகின் எதிர்பார்ப்பு ஆகிய 3 சக்திகளாக நான் காண்கிறேன். இன்று இதனை நாம் முற்றிலுமாக ஏற்றுக்கொள்கிறோம். விழிப்புணர்வில் நமது மக்களுக்கு பெரிய பங்கு உள்ளது. பல பத்தாண்டு கால அனுபவத்திற்கு பின்னர் 130 கோடி நாட்டு மக்களும், நிலையான அரசு, அரசியல் நிலைத்தன்மையின் சக்தி, கொள்கைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். கொள்கைகளில் நம்பிக்கை உருவாக்கம் உலகத்திற்கு காட்டப்பட்டுள்ளது. உலகமும் இதனை இப்போது உணர்ந்துள்ளது. அரசியல் நிலைத்தன்மை, கொள்கைகளில் வலிமை, விரைந்து முடிவெடுத்தல், உலகளாவிய நம்பிக்கை ஆகியவை இருக்கும் போது, ஒவ்வொருவரும் வளர்ச்சியின் பங்குதாரராக மாறுவார்கள்.

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற மந்திரத்துடன் நாம், நமது பயணத்தைத் தொடங்கினோம். ஆனால் படிப்படியாக நாட்டு மக்கள் இதில், அனைவரும் முயற்சிப்போம், அனைவரின் நம்பிக்கையை பெறுவோம் என மேலும் வண்ணத்தை சேர்த்தனர். ஆகவே நமது கூட்டு சக்தி மற்றும் கூட்டு வளத்தை நாம் காண்கிறோம். விடுதலையின் அமிர்தப்பெருவிழா ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகளை கட்டமைக்கும் பிரச்சாரமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்தையும் சேர்ந்த மக்கள் இந்த பிரச்சாரத்தில் சேர்ந்து தங்களது சேவைகளை வழங்கி வருகின்றனர். அவர்களது சொந்த முயற்சிகளுடன் தங்களது கிராமங்களில் நீர் சேமிப்பு பிரச்சாரத்தை பெருமளவில் மேற்கொண்டுள்ளனர். ஆகவே சகோதர, சகோதரிகளே, தூய்மை பிரச்சாரமாக இருந்தாலும், ஏழைகளின் நலனுக்கு பாடுபடுவதாக இருந்தாலும், நாடு இன்று முழுவேகத்துடன் முன்னேறி சென்று கொண்டிருக்கிறது.

ஆனால் சகோதர, சகோதரிகளே, விடுதலையின் அமிர்தகாலத்தில், நமக்கு நாமே தட்டிக்கொடுத்து கொண்டு நமது 75 ஆண்டு கால பயணம் குறித்து பெருமை பேசுவதை தொடர்வோமானால், நமது கனவுகள் அடித்துச் செல்லப்படும். ஆகவே கடந்த 75 ஆண்டு காலம் அற்புதமாக இருந்தாலும், பல்வேறு சவால்கள், நிறைவேறாத கனவுகள் ஆகியவை இன்றும் உள்ளன. நாம் விடுதலையின் அமிர்தகாலத்தில் நுழையும் போது அடுத்த 25 ஆண்டு காலம் நாட்டுக்கு மிக முக்கியமானதாகும். அதனால் தான் இன்று நான் 130 கோடி நாட்டு மக்களின் வலிமை, அவர்களது கனவுகள், அவர்களது முடிவுகள் ஆகியவற்றை செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து நான் பேசுகிறேன். அடுத்த 25 ஆண்டுகளுக்கு 5 இலக்குகள் மீது நாம் கவனம் செலுத்தவேண்டும். உங்களது தீர்மானம் மற்றும் வலிமையின் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். விடுதலைப் போராட்ட வீரர்களின் அனைத்து கனவுகளையும் இந்த 5 இலக்குகள் மூலம் 2047-ம் ஆண்டு நாடு சுதந்திரத்தின் நூற்றாண்டை கொண்டாடும் போது நாம் அடைய வேண்டும்.

5 இலக்குகள் பற்றி பேசும் போது, முதல் இலக்கு பெரிய முடிவுடன் நாடு முன்னேறி செல்வதாகும். இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக ஆக்குவதே அந்த பெரிய இலக்காகும். இதைக்காட்டிலும் குறைவாக நாம் எண்ணக்கூடாது. இரண்டாவதாக, நமது எண்ணங்களில், பழக்கவழக்கங்களில் ஒரு சிறிதும் அடிமைத்தனத்தை கொண்டிருக்கக் கூடாது. அதை இப்போதே வெட்டி எறிந்துவிட வேண்டும். நூற்றாண்டுகளாக இருந்து வந்த இந்த அடிமைத்தனம் நமது உணர்வுகளை கட்டிப்போடுவதற்கு வழிவகுத்துவிடுவதுடன், திசை திருப்பும் சிந்தனைகளை உருவாக்கிவிடும். எனவே இந்த அடிமை மனப்போக்கில் இருந்து நம்மை நாமே விடுவித்துக்கொள்ள வேண்டும். இது நமது இரண்டாவது இலக்காகும்.

மூன்றாவதாக நமது பாரம்பரியம் மற்றும் மரபுகள் குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் பொற்காலத்தை இந்தியாவுக்கு வழங்கியது இதே மரபுதான். இந்த செழுமையான பாரம்பரியம் காலம் காலமாக இருந்து வந்துள்ளது. இது தற்போது புதியவற்றை மேற்கொண்டுள்ளது. எனவே இந்தப் பாரம்பரியம் குறித்து நாம் பெருமை கொள்ளவேண்டும்.

நான்காவது முக்கிய இலக்கும் சமஅளவில் முக்கியத்துவம் கொண்டதுதான். அது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு. 130 கோடி மக்களுக்கிடையே நல்லிணக்கமும், நல்லெண்ணமும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒற்றுமை வலுவுடன் இருக்கும். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பது கனவுகளை நனவாக்குவது நான்காவது இலக்காகும்.

ஐந்தாவது இலக்கு, மக்களின் கடமையாகும். இதில் பிரதமராக இருந்தாலும், முதலமைச்சராக இருந்தாலும் விதிவிலக்கு இருக்க முடியாது. ஏனெனில் அவர்களும் பொறுப்பான குடிமக்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கும் நாட்டின் மீதான கடமைகள் உள்ளன. அடுத்த 25 ஆண்டு காலத்தில் இந்த கனவுகளை நாம் எட்டுவதற்கு இந்த லட்சியம் அவசியமாகும்.

எனதருமை நாட்டுமக்களே, உங்களது கனவுகள் பெரிதாக இருக்கும் போது, உங்களது தீர்மானமும் பெரிதாக இருக்கும். எனவே முயற்சிகளும் பெரிதாக இருக்க வேண்டும். வலிமை எப்போதும் பெரிய அளவுக்கு வலுசேர்க்கும். 40-42 ஆண்டு காலத்தை நினைவுகூர்ந்தால், கொடிய பிரிட்டிஷ் ஆட்சியின் பிடியில் நாடு சிக்கியிருந்ததை எண்ணிப்பார்ப்பது கடினமாக இருக்கும். சில கைகள் துடைப்பத்தை எடுத்தன. சிலர் நூல் நூற்பதை மேற்கொண்டனர். பலர் சத்யாகிரகப்பாதையை தேர்ந்தெடுத்தபோது, சிலர் தங்கள் நிலையை எண்ணி வருந்தினார்கள், அதே நேரத்தில் சிலர் புரட்சிப்பாதையையும் மேற்கொண்டனர். இவர்கள் ஒவ்வொருவரது தீர்மானமும் விடுதலை என்ற மிகப்பெரிய முடிவாகவே இருந்தது. இந்தப் பெரிய லட்சியத்தை அடைந்து அவர்கள் விடுதலையை நமக்காக வாங்கிக் கொடுத்துள்ளனர். நாம் தற்போது சுதந்திரமாக இருக்கிறோம். நமது லட்சியம் சிறிதாக இருந்திருந்தால், இன்றும் நாம் அடிமைத்தனத்தில் உழன்று கொண்டிருந்திருப்போம். மகத்தான எழுச்சி மற்றும் பெரிய கனவுகளால் நாம் விடுதலையைப் பெற்றுள்ளோம்.

எனதருமை நாட்டுமக்களே, இந்த 76-வது சுதந்திர தினத்தின் காலைப் பொழுதில் நாம் விழிக்கும்போது, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக்க நாம் உறுதிபூணவேண்டும். 25 வயதுக்கு உட்பட்ட இன்றைய இளைஞர்கள், சுதந்திரத்தின் பெருமை மிகு நூற்றாண்டு விழாவை காண்பார்கள். அப்போது உங்களுக்கு 50, 55 வயது இருக்கக்கூடும். உங்களது வாழ்க்கையில் பொன்னான காலமாக அது இருக்கும் எனப்பொருள். இந்த 25, 30 ஆண்டுகளில் இந்தியாவின் கனவுகளை நிறைவேற்றுவதாக இருக்கும். உறுதிமொழி எடுத்துக்கொண்டு என்னுடன் நடந்து வாருங்கள். நண்பர்களே, மூவர்ணக்கொடியுடன் உறுதிமொழி எடுத்து நாம் அனைவரும் முழுபலத்துடன் சேர்வோம். எனது நாடு வளர்ந்த நாடாகவேண்டும் என்பது நமது தீர்மானமாக இருக்க வேண்டும். வளர்ச்சியின் ஒவ்வொரு அளவுகோலும் மக்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதரையும், அவரது நம்பிக்கையையும், விருப்பங்களையும் நாம் நிறைவேற்ற வேண்டும். எப்போதெல்லாம் இந்தியா மிகப்பெரிய தீர்மானங்களை எடுக்கிறதோ, அப்போது அவற்றை அது செயல்படுத்தி வந்துள்ளது.

எனது முதலாவது உரையின் போது, நான் தூய்மையைப் பற்றி பேசிய போது நாடு முழுவதும் அதனை ஏற்றுக்கொண்டது. ஒவ்வொருவரும் அவரவருக்கு இயன்றவகையில் தூய்மையை நோக்கி பயணித்தனர். இப்போது அசுத்தத்தை அனைவரும் வெறுக்கின்றனர். இதை இந்த நாடு மேற்கொண்டது, செய்து வருகிறது, வருங்காலத்திலும் இதனை தொடரும். உலகம் ஒரு குழப்பத்தில் இருந்த போது இந்த நாடு தான் 200 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் கடந்து அனைத்து முந்தைய சாதனைகளையும் முறியடித்தது. நாம் வளைகுடா நாடுகளை எரிசக்திக்காக சார்ந்துள்ளோம். உயிரி எண்ணெய் நோக்கி நாம் எவ்வாறு முன்னேறுவது என்பதை முடிவு செய்துள்ளோம். 10 சதவீத எத்தனால் கலப்பு மிகப்பெரிய கனவு போன்றதாகும். பழைய அனுபவங்கள் இதற்கு வாய்ப்பு இல்லை என்பதை காட்டின. ஆனால் நாடு குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே 10 சதவீத எத்தனால் கலப்பு என்னும் கனவை நனவாக்கியுள்ளது.

சகோதர, சகோதரிகளே, 2.5 கோடி மக்களுக்கு குறுகிய காலத்திற்குள் மின்சார இணைப்பு வழங்குவது மிகச்சிறிய பணியல்ல. ஆனால் நாடு அதை செய்தது. இன்று நாடு லட்சக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணியை வேகமாக செய்து வருகிறது. திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்க இந்தியாவில் தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனதருமை நாட்டுமக்களே, நாம் உறுதி எடுத்துக்கொண்டால் நம்மால் நமது இலக்குகளை அடைய முடியும் என்பதை அனுபவம் கூறுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்காக இருந்தாலும், நாட்டில் புதிய மருத்துவக்கல்லூரிகளை கட்டும் நோக்கமாக இருந்தாலும் மருத்துவப் பணியாளர்களை உருவாக்குவதாக இருந்தாலும், ஒவ்வொரு துறையிலும் வேகம் அதிகரித்துள்ளது. அதனால் தான் அடுத்த 25 ஆண்டுகளுக்கு மிகப்பெரிய இலக்குகள் தேவை என நான் கூறுகிறேன். அது நமது வாழ்க்கையாகவும், நமது உறுதியாகவும் இருக்க வேண்டும்.

இரண்டாவதாக, அடிமை மனப்பான்மை மற்றும் நாட்டின் போக்கு குறித்து நான் குறிப்பிட்டேன். சகோதரர்களே, எவ்வளவு காலத்திற்கு உலகம் நமக்கு சான்றுகளை வழங்கி கொண்டிருக்கும்? உலகின் சான்றிதழ்களுடன் எத்தனை காலத்திற்கு வாழ முடியும்? நாம் நமது தர நிர்ணயத்தை தீர்மானிக்க வேண்டாமா?, 130 கோடி மக்களை கொண்ட நாடு, இதனை செய்ய முடியாதா? எந்த சூழ்நிலையிலும் பிறரைப்போல நாம் முயற்சித்திருக்கக்கூடாதா? நமது சொந்த ஆற்றலுடன் வளர வேண்டும் என்பது நமது மனப்பான்மையாக இருக்க வேண்டும். அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை வேண்டும் என்று நாம் விரும்பினோம். அந்த அடிமைத்தனம் ஏழுகடல்களுக்கு அப்பால் நமது மனதில் இன்னும் இருக்கலாமா? பல சுற்று விவாதங்களுக்கு பின்னர், கருத்துப்பரிமாற்றங்களுக்கு பின்னர் புதிய தேசிய கல்விக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளதை நான் நம்பிக்கையோடு பார்க்கிறேன். அதில் குறிப்பிட்டுள்ள திறன் என்பது அடிமைத்தனத்தில் இருந்து நம்மை விடுவிக்கும் ஆற்றலை வழங்கும். சில நேரங்களில் நமது திறமை, மொழி தளையால் கட்டப்படுவதை நாம் காண்கிறோம். இது அடிமை மனப்போக்கின் விளைவாகும். நமது நாட்டின் ஒவ்வொரு மொழி குறித்தும் நாம் பெருமைகொள்ள வேண்டும். நமக்கு ஒருமொழி தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் அது நமது நாட்டின் மொழி என்பதில் நாம் பெருமை கொள்ளவேண்டும். இந்த மொழி நமது முன்னோர்களால் உலகிற்கு அளிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

இன்று டிஜிட்டல் இந்தியா கட்டமைப்பை நாம் காண்கிறோம். ஸ்டார்டப்களை கண்டுவருகிறோம். யார் இவர்கள்? இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களில் அல்லது கிராமங்களில் வாழும் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்களின் திறமையை இது வெளிக்கொணர்வதாகும். புதிய கண்டுபிடிப்புகளுடன் நமது இளைஞர்கள் உலகிற்கு முன்னால் வந்துள்ளனர். நாம் காலனி ஆதிக்க மனப்போக்கை கைவிட வேண்டும். மாறாக நமது திறமைகள் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்.

இரண்டாவதாக நமது பாரம்பரியம் குறித்து பெருமைகொள்ள வேண்டும். நமது மண்ணுடன் நாம் தொடர்பு கொள்ளும் போது நம்மால் உயரத்தில் பறக்க முடியும். நாம் உயர பறக்கும் போது, உலகத்தின் பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை வழங்க முடியும். நமது பாரம்பரியம், கலாச்சார பெருமையை எடுத்துக்கொள்வதில் தாக்கத்தை நாம் காண்கிறோம். இன்று உலகம் முழுமையான மருத்துவ சிகிச்சை பற்றி பேசுகிறது. இதை பேசும் போது, இந்தியாவின் யோகா, ஆயுர்வேதம், இந்தியாவின் முழுமையான வாழ்க்கை முறை ஆகியவற்றை அது உற்றுநோக்குகிறது. இதுதான் உலகிற்கு நாம் வழங்கியிருக்கும் மரபாகும். இதன் தாக்கத்தை உலகம் உணர்ந்துள்ளது. நமது வலிமையை நாம் இப்போது காணலாம். இயற்கையுடன் எவ்வாறு வாழ்வது என்பதை அறிந்தவர்கள் நாம். இயற்கையை எவ்வாறு நேசிக்க வேண்டும் என்பது நமக்கு தெரியும். இன்று உலகம் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளது. உலகம் வெப்பமயமாதல் பிரச்சனைக்கு தீர்வுகாணும் மரபை நாம் கொண்டிருக்கிறோம். இதனை நமது முன்னோர்கள் நமக்கு அளித்துள்ளனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை, வாழ்க்கை இயக்கம் பற்றி நாம் பேசும் போது, உலகத்தின் கவனத்தை நாம் ஈர்க்கிறோம். நமக்கு இந்த சக்தி உள்ளது. நெல்லும், சிறுதானியங்களும் நமது வீட்டுப்பொருட்களாகும். இதுதான் நமது பாரம்பரியம். கடின உழைப்பால் நமது சிறு விவசாயிகள் தங்களது சிறிய வயல்களில் நெல்லை விளைவிக்கின்றனர். இன்று சர்வதேச அளவில் சிறுதானிய ஆண்டை உலகம் கொண்டாடும் அளவுக்கு நகர்ந்துள்ளது. இது நமது பாரம்பரியத்தை உலகம் முழுவதும் பாராட்டுவதையே காட்டுகிறது. இது குறித்து நாம் பெருமை அடையலாம். உலகத்துக்கு கொடுப்பதற்கு நம்மிடம் நிறைய உள்ளது.

சமூக உளைச்சல் என்று வரும்போது, மக்கள் நமது குடும்ப மதிப்புகளை பற்றிப்பேசுகின்றனர். தனிப்பட்ட நபரின் உளைச்சல் என்று வரும் போது, மக்கள் யோகா பற்றி பேசுகின்றனர். கூட்டு பதற்றம் என்று வரும் போது, இந்தியாவின் குடும்ப முறை குறித்து மக்கள் பேசுகின்றனர். கூட்டுக் குடும்பமுறை ஒரு பெரும் சொத்தாகும். பல நூற்றாண்டுகளாக நமது அன்னையர்களும், சகோதரிகளும் செய்த தியாகத்தின் பலனால் கூட்டுக்குடும்ப முறை ஒரு மரபை ஏற்படுத்தியது. இதுதான் நமது மரபு. இந்த பாரம்பரியம் பற்றி நாம் எவ்வாறு பெருமைகொள்ளாமல் இருக்க முடியும்? ஒவ்வொரு உயிரினத்திலும் நாம் சிவனை காண்கிறோம். ஒவ்வொரு மனிதனிடத்திலும் பகவான் நாராயணனை காண்பவர்கள் நாம். பெண்களை நாராயணி என நாம் அழைக்கிறோம். தாவரங்களிலும் பக்தியை நாம் காண்கிறோம். நதிகளை நாம் தாயாக கருதுகிறோம். ஒவ்வொரு கல்லிலும் சங்கரனை காண்கிறோம். இதுதான் நமது சக்தி. ஒவ்வொரு நதியையும் அன்னை வடிவில் காணும் ஆற்றலை நாம் கொண்டுள்ளோம். இத்தகைய சுற்றுச்சூழல் சார்ந்த வாழ்க்கை முறை நமது பெருமையாகும். இந்தப் பாரம்பரியம் பற்றி நாம் பெருமைகொள்ளும்போது உலகமும் அதுபற்றி பெருமைகொள்கிறது.

சகோதர, சகோதரிகளே,

உலகமே ஒரே குடும்பம் என்னும் மந்திரத்தை உலகத்திற்கு வழங்கியவர்கள் நாம். ஒரு சக்தியை பல பெயர்களில் வணங்கும் நம்பிக்கை கொண்டவர்கள் நாம்.

உன்னைவிட புனிதமானவன் என்ற மனப்போக்கில் இன்று உலகம் சுழன்று வருகையில் ஒருவரை ஒருவர் தாழ்த்தி, மற்றொருவர் முன்னேறும் மனப்போக்கு அதிகரித்து வருகிறது. இது அனைத்து மோசமான விளைவுகளுக்கும், மன அழுத்தங்களுக்கும் காரணமாகும். இதற்கு தீர்வு காணும் அறிவு நம்மிடம் உள்ளது. நமது அறிஞர்கள் முழுமையான உண்மை ஒன்று தான். அது பல வடிவங்களில் காணப்படுகிறது என்று கூறியுள்ளனர். இதுதான் நமது பெருமை. “உனக்கு வெளியில் இருக்கும் அனைத்தும் உனக்குள்ளும் இருக்கிறது” என்று கருதுபவர்கள் நாம். பிரபஞ்சத்தில் உள்ளவை ஒவ்வொரு உயிரினத்திலும் உள்ளது என்ற இந்த அறிவுப்பூர்வமான சிந்தனையை கொண்டவர்கள் நாம்.

உலகத்தின் நலனை காணும் மக்களாக நாம் உள்ளோம். கூட்டு நன்மை, தனிப்பட்ட நன்மை என்ற பயணத்தில் நமது மக்களுக்காக மட்டுமல்லாமல், உலகமே மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று கருதுபவர்கள் நாம். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்பதே நமது பாரம்பரியமாகும். எனவே நமது பாரம்பரியத்தை மதித்து நடக்க கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் கனவுகளை நனவாக்குவதற்கு இந்த உறுதிப்பாடு அவசியமாகும்.

எனதருமை நாட்டு மக்களே..

மற்றொரு முக்கியமான விஷயம்.. வேற்றுமையில் ஒற்றுமை. மிகவும் பரந்த நம் நாட்டின் பன்முகத் தன்மையை நாம் கொண்டாட வேண்டும். பல்வேறு மரபுகள் மற்றும் சமயங்கள் ஒன்றிணைந்த அமைதியான சகவாழ்வு நமது கர்வம். நம்மை பொறுத்தவரை, அனைவரும் சமம். யாரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் கிடையாது. இந்த உணர்வு நமக்கு முக்கியமானது. ஒவ்வொரு வீட்டிலும், மகனும், மகளும் சமம் என்ற உணர்வை உண்டாக்கினால்தான், ஒற்றுமைக்கு அடித்தளம் அமையும். அவ்வாறின்றி, தலைமுறை, தலைமுறையாக பாலினப் பாகுபாட்டை விதைத்தால், நாட்டில் ஒற்றமை உணர்வை ஏற்படுத்த முடியாது. பாலின சமத்துவம் என்பது நமது முதல் தேவை. ஒற்றுமை குறித்து பேசும்போது, இந்தியா ஏன் ஒரேயொரு அளவீடு அல்லது தரநிலையை கொண்டிருக்கவில்லை. என்னுடைய அனைத்து முயற்சிகளும், என் எண்ணம், கற்பனை, செயல்வடிவம் அனைத்துமே, ‘முதலிடத்தில் இந்தியா’ என்பதையே நோக்கமாக கொண்டுள்ளது. இதன் வாயிலாக நம் அனைவருக்கும் ஒற்றுமைக்கான வழி திறக்கப்படும். நண்பர்களே, நம் அனைவரையும் ஒற்றுமையில் இணைக்க நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய மந்திரமும் இதுதான். நம் சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை போக்க முடியும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. உழைப்பாளிகளை மதிக்க வேண்டும் என்ற, ஷ்ரமேவ் ஜெயதேவ் கொள்கையை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் என் சகோதர, சகோதரிகளே..

நீடிக்கும் எனது வலியையும் நான் செங்கோட்டையிலிருந்து பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். என் வலியை வெளிப்படுத்தாமல் என்னால் இருக்க முடியவில்லை. செங்கோட்டையின் மேடையில் இருக்கும்போது, அதனை வெளிப்படுத்துவது பொருத்தமாக இருக்காது என்றாலும், என் நாட்டு மக்களுக்கு அதை தெரியப்படுத்துவேன். நாட்டு மக்கள் முன் மனம் திறந்து பேசவில்லையெனில், நான் வேறெங்கு சொல்வேன்..? நான் பகிர்ந்து கொள்ள நினைப்பது என்னவென்றால், நமது அன்றாட பேச்சு, செயல்களில் ஒரு வக்கிரத்தன்மையை காண முடிகிறது என்பதை சொல்வது வேதனை அளிக்கிறது. நம் அன்றாட வாழ்வில் மகளிரை இழிவுப்படுத்தும் சொற்களை, வாக்கியங்களை நாம் பேசி வருகிறோம். நம் வாழ்வில், பெண்களை இழிவுபடுத்தும் அனைத்தையும் அகற்றி விடுவோம் என்று உறுதிமொழியை நாம் எடுக்க முடியாதா..? இந்த தேசத்தின் கனவுகளை நனவாக்குவதில் பெண்களின் மிகப்பெரிய பங்கு இருக்கும், இந்த சக்தியை நான் பார்க்கிறேன். அதனால், நான் அதனை வலியுறுத்துகிறேன்.

எனதருமை நாட்டு மக்களே..

நான் இப்போது, குடிமக்களின் ஐந்து முக்கியக் கடமைகளை பற்றி பேசப் போகிறேன். உலகில் முன்னேற்றம் அடைந்த நாடுகளை நாம் புரிந்துக் கொள்ள முயற்சிக்கும்போது, அனைத்தும் ஏதாவது ஒருவகையில் சாதனைகளை செய்திருக்கும். ஒன்று ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை. மற்றொன்று, கடமையில் பக்தி நிலை. தனிமனிதன், குடும்பம், சமூகம், தேசம் என அனைத்திலும் வெற்றி இருக்க வேண்டும். இதுவே, அடிப்படையான பாதை மற்றும் அடிப்படையான உயிர் சக்தி.

24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்குவது அரசாங்கத்தின் கடமை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு மின்சாரத்தை சேமிப்பது என்பது குடிமகனின் கடமையாகும். ஒவ்வொரு பயிருக்கும் தண்ணீர் அளிப்பது என்பது அரசின் பொறுப்பு மற்றும் கடமை, என்றாலும், ஆனால், ‘ குறைந்த நீர், நிறைந்த சாகுபடி’ என்பதை உணர்ந்து தண்ணீரை சேமிப்பதன் மூலம் முன்னேறுவோம் என்ற குரல் நம் ஒவ்வொரு வயலில் இருந்தும் ஒலிக்க வேண்டும்.

நண்பர்களே..

காவல்துறையினராக இருந்தாலும், குடிமக்களாக இருந்தாலும், ஆட்சியாளர்களாக இருந்தாலும், நிர்வாகியாக இருந்தாலும், குடிமக்களுக்கான அடிப்படை கடமைகளை செய்யாமல் இருக்க முடியாது. ஒரு குடிமகன் தனது கடமையை சரியாக செய்தால் விரும்பும் இலக்கை முன்கூட்டியே அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.

எனதருமை நாட்டு மக்களே..

இன்று மகரிஷி அரவிந்தரின் பிறந்தநாள். அவரது பாதங்களை நான் வணங்குகிறேன். ஆனால், “உள்நாட்டு உற்பத்தி மூலம் தன்னிறைவடைவோம்” என்று அழைப்பு விடுத்த மாபெரும் மனிதரை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதுதான் அவரது மந்திரம். எத்துணை நாளைக்கு நாம் பிறரை சார்ந்திருக்க முடியும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம் நாட்டுக்கு உணவு தானியம் தேவைப்படும்போது, பிறரிடம் கையேந்த முடியுமா..? நமக்கான உணவுத் தேவையை நாமே பூர்த்தி செய்வோம் என்று முடிவெடுத்தபோது, நாடு அதை நிரூபித்துக் காட்டியதா? இல்லையா? நாம் ஒரு தீர்மானத்தை எடுத்தால் அது சாத்தியமாகும். எனவே, ‘தற்சார்பு இந்தியா’வை அடைய ஒவ்வொரு குடிமகனும், அரசும், சமுதாயமும் பொறுப்பாகிறது. ‘தற்சார்பு இந்தியா’ என்பது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலோ அல்லது ஒரு திட்டமோ அல்ல. அது சமூகத்தின் மக்கள் இயக்கம். அதனை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும்.

என் நண்பர்களே.., சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஒலியை கேட்டுள்ளோம். இந்த ஒலியை கேட்பதற்காக எங்கள் காதுகள் ஏங்கின. 75 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்முறையாக செங்கோட்டையில் பறக்கும் மூவண்ணக் கொடிக்கு, இந்தியாவில் தயாரித்த பீரங்கி வணக்கம் செலுத்தியுள்ளது. இந்த ஒலியால் ஈர்க்கப்படாத, இந்தியர்கள் யாரேனும் இருக்க முடியுமா..? என் அன்பான சகோதர, சகோதரிகளே, இன்று நம் நாட்டு ராணுவ வீரர்களை எனது இதயத்திலிருந்து வாழ்த்த விரும்புகிறேன். ராணுவ வீரர்கள் தன்னம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் இதனை ஏற்றுக் கொண்டதற்காக நான் தலை வணங்குகிறேன். ராணுவ வீரர் ஒருவர், தனது கைகளில் தனது மரணத்தை சுமக்கிறார். வாழ்வுக்கும், மரணத்துக்குமிடையே இடைவெளி இல்லாபோதும், அவர் உறுதியுடன் நிற்கிறார். நம் நாடு, பாதுகாப்புக்கான 300 பொருட்களை இறக்குமதி செய்யக் கூடாது என்று பட்டியலிட்டு, முடிவெடுத்தது என்பது சாதாரணமானதல்ல.

இந்த முடிவில், ‘தற்சார்பு இந்தியா’ என்ற கனவை ஆலமரமாக மாற்றும் ஒளிமயமான எதிர்காலத்துக்கான விதையை என்னால் காண முடிகிறது. எனது ராணுவ அதிகாரிகளுக்கு வணக்கம்..! வணக்கம்..!! வணக்கம்..!!!

5 முதல் 7 வயது வரையுள்ள சிறிய குழந்தைகளுக்கும் நான் வணக்கம் செலுத்த விரும்புகிறேன். தேசம் மீதான உணர்வு விழித்துக் கொண்டது. 5 முதல் 7 வயது வரையுள்ள குழந்தைகள், வெளிநாட்டு பொம்மைகளுடன் விளையாட விரும்பவில்லை என்று சொன்னதாக, பல குடும்பங்களிலிருந்து கேள்விப்பட்டிருக்கிறேன். 5 வயது குழந்தை இந்த தீர்மானத்தை எடுக்கும்போது, அதில் தன்னம்பிக்கை இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கிறது.

ஒரு லட்சம் கோடி, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தைப் பற்றி பேசும்போது, தங்கள் அதிர்ஷ்டத்தை பரிசோதிப்பதற்காக உலகம் முழுவதுமிருந்து மக்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள். புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வரும் அவர்கள், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறார்கள். உற்பத்தி மையமாக இந்தியா மாறி வருகிறது. இது தன்னம்பிக்கை இந்தியாவுக்கான அடித்தளத்தை ஏற்படுத்துகிறது. செல்பேசி உள்ளிட்ட மின்னணு பொருட்களின் உற்பத்தியாக இருந்தாலும், இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது. நாம் பிரம்மோஸ் ஏவுகணையை விண்ணில் ஏவும்போது, எந்த இந்தியன் பெருமைப்படாமல் இருக்க முடியும்..? இன்று நமது வந்தே பாரத், மெட்ரோ ரயில் பெட்டிகள் உலகையே கவரும் பொருளாக மாறியுள்ளன.

எனதருமை நாட்டு மக்களே..

எரிசக்தி துறையில் நாம் இப்போது தன்னிறைவு அடைய வேண்டும். ஆற்றல் துறையில் நாம் எவ்வளவு நாட்களுக்கு பிறரை சார்ந்திருக்க முடியும்..? சூரிய எரிசக்தி, காற்றலை எரிசக்தி, ஹைட்ரோஜன் எரிவாயு மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் நாம் தன்னிறைவு அடைய வேண்டும்.

என் அருமை மக்களே..

இயற்கை விவசாயமும் தன்னிறைவு பெற வேண்டியது அவசியம். இன்று நானோ உரத்தொழிற்சாலைகள் நாட்டில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளன. ஆனால், ரசாயனமற்ற விவசாயமும், இயற்கை விவசாயமும் தன்னிறைவு இந்தியாவுக்கு ஊக்கமளிக்கும். இன்று பசுமை திட்டங்கள் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் மிக வேகமாக திறக்கப்பட்டுள்ளன. இந்தியா தனது கொள்கைகள் மூலம், பொதுவெளிக்கான இடத்தை திறந்துள்ளது. உலகிலேயே, இந்தியா ஆளில்லா விமானங்களுக்கான முற்போக்குக் கொள்கைகளை கொண்டுள்ளது. இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புக்கான கதவுகளை திறந்து விட்டுள்ளது.

எனதருமை சகோதர, சகோதரிகளே..

தனியார் துறையினரையும் முன்வருமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். உலகில் நாம் ஆதிக்கம் செலுத்த வேண்டும். உலக நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில், இந்தியா பின்தங்காமல் இருக்க வேண்டும் என்பது தன்னிறைவு பெற்ற இந்தியாவின் கனவுகளில் ஒன்று. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களாக இருந்தாலும், ‘குறைபாடு இல்லாத – பாதிப்பு இல்லாத’ நமது தயாரிப்புகளை உலகிற்கு எடுத்து செல்ல வேண்டும். சுதேசி குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும்.

எனதருமை நாட்டு மக்களே..

இன்றுவரை நம் மதிப்புமிக்க லால்பகதூர் சாஸ்திரியின், ‘ராணுவ வீரர்களுக்கு வணக்கம், விவசாயிகளுக்கு வணக்கம்’ என்ற பொருள்படும், ‘ஜெய்ஜவான், ஜெய்கிசான்’ என்ற உற்சாகம் மிக்க அழைப்புக்காக நாம் அவரை எப்போதும் நினைவில் கொள்கிறோம்.

பின்னர், அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், விஞ்ஞானிக்கு வணக்கம் செய்வோம் என்ற பொருள்படும், ஜெய்விக்யான் என்ற இணைப்பைச் சேர்த்தார். அதற்கு நாம் அதிக முக்கியத்துவம் அளித்தோம். ஆனால், தற்போதைய காலகட்டத்தில், கண்டுபிடிப்புகளுக்கு வணக்கம் செய்வோம் என்பதை நாம் சேர்க்க வேண்டியுள்ளது.

ராணுவ வீரர்களுக்கு வணக்கம், விவசாயிகளுக்கு வணக்கம், விஞ்ஞானிகளுக்கு வணக்கம், கண்டுபிடிப்புகளுக்கு வணக்கம்

நமது தேசத்தின் இளைஞர்கள் மீது நான் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளேன். உள்நாட்டு கண்டுபிடிப்புகளுக்கு அவர்கள் ஒரு சாட்சி. யூபிஐ-பீம் செயலிகள், இணையவழிக் கட்டணம் போன்றவற்றின் மூலம் நமது நிதி பரிவர்த்தனை தொடர்பான வெற்றி கதைகளை நாம் உலகிற்கு காட்டியுள்ளோம். இன்று 40 சதவீத நிதிப் பரிவர்த்தனைகள் இணையம் மூலம் நமது இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியா உலகிற்கு ஒரு புதிய திறனை வெளிப்படுத்தியுள்ளது.

என்னருமை மக்களே..

இன்று நாம் அனைவரும் 5ஜி தொழில்நுட்ப உலகிற்குள் நுழைய தயாராக இருக்கிறோம். உலகளாவிய இலக்குகளை எட்டுவதற்கு நீங்கள் நீண்டநாள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு கிராமத்தின் கடைசி மைல்தூரம் வரை ஆஃப்டிகல் ஃபைபர் சென்றடைவதை நாங்கள் உறுதி செய்கிறோம். டிஜிட்டல் இந்தியா என்ற கனவு, கிராமப்புற இந்தியா வாயிலாக நிறைவேறும் என்று நான் உறுதியாக தெரிவித்து கொள்கிறேன். இன்று இந்தியாவின் கிராமப்புறங்களில் நான்கு லட்சம் பொதுசேவை மையங்கள், அந்த கிராமத்து இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளதை கேட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். கிராமப்புறங்களில் நான்கு லட்சம் இணையவழி தொழில்முனைவோர்கள் உருவாகி வருவதையும், கிராமப்புற மக்கள் அனைத்து சேவைகளையும் இணையம் மூலம் பெற பழகி வருவதையும் நாம் பெருமையாக கருதலாம். தொழில்நுட்ப மையமாக மாறி வரும் இந்தியாவின் சக்தி இதுதான்.

செமிகண்டக்டர்களை உருவாக்கும் டிஜிட்டல் இந்தியா இயக்கம் என்பது, 5ஜி தொழில்நுட்ப யுகத்தில் நுழைந்து, ஆஃப்டிகல் ஃபைபர் வலையமைப்புகளின் நன்மையை பரப்புவது, நம்மை நவீனமாகவும், வளர்ச்சி பெற்றதாகவும் நிலைநிறுத்துவது மட்டும் கிடையாது. ஆனால், இந்த மூன்று பணிகளால் இது சாத்தியமானது. கல்வி சூழலில் முழுமையான மாற்றம், மருத்துவ உள்கட்டமைப்பில் புரட்சி, மற்றும் விவசாயத் தொழிலில் முன்னேற்றம் உள்ளிட்டவை டிஜிட்டல் மயமாக்கல் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.

நண்பர்களே..

இந்தியா மனிதகுலத்துக்கான தொழில்நுட்ப இயக்கமாக மாறும் என்பதை என்னால் கணிக்க முடிகிறது. இது தொழில்நுட்பத் துறையில் ஒரு மைல்கல். தொழில்நுட்பத் துறையில் இந்தியா உலகளவில் பட்டியலிடப்படும் ஒரு நாடாக உள்ளது. இதில் பங்கேற்கும் திறமை எங்களிடத்தில் உள்ளது.

நமது புதுமையான திட்டங்கள், தொழில்காப்பகங்கள், புத்தொழில்கள், ஒரு புதிய துறையை உருவாக்கி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை திறந்து விட்டுள்ளன. விண்வெளிப் பயணமோ, ஆழ்கடல் பயணமோ, விண்ணைத் தொட வேண்டுமோ, ஆழ்கடலை தொட வேண்டுமா இவைகளை நோக்கி முன்னேறுவதன் மூலம் நாம் புதிய இலக்குகளை நோக்கி முன்னேறி வருகிறோம்.

எனதருமை நாட்டு மக்களே..

இதனை நாம் மறந்து விடக்கூடாது. பல நூற்றாண்டுகளாக இந்தியா இதை பார்த்து வருகிறது. நாட்டில் சில பணிகளுக்கு மாதிரி வேலைகள் தேவை. நாம் பெரிய உயரங்களை எட்ட வேண்டும். ஆனால், அதேசமயம், ஒரு நாடாக உயரங்களை அடைய நினைக்கும்போது, அடித்தளம் வேரூன்றி இருப்பது அவசியம்.

இந்திய பொருளாதாரத்தின் சாத்தியம் என்பது, அடித்தட்டு மக்களுடைய பலத்தை பொறுத்தது. எனவே, நமது சிறு விவசாயிகள், தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், குடிசைத் தொழில்கள், குறுந்தொழில்கள், தெருவோர வியாபாரிகள், வீட்டுத் தொழிலாளர்கள், தினக்கூலிகள், ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுநர்கள் மற்றும் பேருந்து சேவை வழங்குபவர்கள் போன்றவர்களின் திறனை உணர்ந்து நாம் வலுப்படுத்த வேண்டும். அதிகாரம் பெற வேண்டிய மக்கள் இவ்வாறு வலுப்படுத்தப்படுவது, இந்தியாவின் ஆற்றலுக்கு உத்தரவாதம் அளிக்கும். எனவே நமது பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமான சக்தியான இவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திசையில் நம் முயற்சிகள் தொடர்கின்றன.

எனதருமை நாட்டு மக்களே,

75 ஆண்டுகால அனுபவம் நமக்கு இருக்கிறது. இந்த 75ஆண்டுகளில் நாம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி முடித்துள்ளோம். புதிய கனவுகளை காணும் அதே நேரத்தில் 75 ஆண்டுகால அனுபவத்தில் பல கொள்கை முடிவுகளை எடுத்துள்ளோம். ஆனால் அமிர்த காலம் என்று அழைக்கப்படும் வரவுள்ள 25 ஆண்டுகளில் நமது மனித வளத்தின் மிகச் சரியான பலன் எதுவாக இருக்க முடியும்?

இயற்கை வளத்தின் மிகச் சரியான பலன் எப்படி இருக்கும் இந்த லட்சியங்களுடன் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். எனது கடந்த கால அனுபவங்களை வைத்து சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன். சட்டத்துறையில் பணியாற்றும் மகளிரின் சக்தியை வழக்காடு மன்றங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஊரகப் பகுதிகளில் பொதுமக்களின் பிரதிநிதிகளாக திகழ்பவர்களையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். கிராமங்களில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நமது மகளிர் சக்தியானது அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுவதை நாம் காண முடிகிறது. அறிவுத்திறன் மற்றும் அறிவியல் திறனில் நமது நாட்டின் மகளிர் சக்தி, உச்சத்தில் இருப்பதையும் கண்டு வருகிறோம். காவல்துறையிலும் கூட நமது மகளிர் சக்தியானது மக்களைக் காக்கும் பணியில், மகத்தான கடமையை ஆற்றி வருகிறார்கள். வாழ்வின் அனைத்துத் தரப்பிலும் அது விளையாட்டு மைதானமாக இருந்தாலும் சரி, போர்க்களமாக இருந்தாலும் சரி நமது நாட்டின் மகளிர் சக்தி, புதிய வலிமையோடும் புதிய நம்பிக்கையோடும் முன்வருவதைக் காண இயல்கிறது. தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் என அனைவரும் வரவிருக்கும் 25 ஆண்டுகளில், கடந்த 75 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், நாட்டின் பயணத்தில், பல்வேறு நிலைகளில் மகளிர் சக்தியின் பங்களிப்பானது கூடுதலாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். எனவே, இந்த பங்களிப்பு என்பது அளவிட இயலாததாக இருக்கும். நாம் வைத்திருக்கும் அளவீடுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். இந்த கருத்திற்கு நாம் முக்கியத்துவம் அளிப்பதோடு நமது புதல்வியருக்கு சரியான வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் வசதிகளையும் உருவாக்கித் தருவதன் மூலமாக, அவர்கள் நமக்கு அதைவிடவும் கூடுதலாக ஆதாயத்தை திருப்பி அளிப்பார்கள். அவர்கள் நாட்டை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வார்கள். அமிர்த காலத்தின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு இந்த மகளிர் சக்தி போதுமான வரையில் தனது முயற்சிகளையும், பங்களிப்பையும் வழங்குமேயானால், அந்த கடினமான பணி தனது கடின தன்மையை இழப்பதோடு, எதிர்பார்க்கும் காலத்தைவிட முன்கூட்டியே அந்த கனவுகளை நிறைவேற்ற இயலும். நமது கனவுகள் இதன் காரணமாக முனைப்பானதாகவும் உயிரோட்டம் மிக்கதாகவும், பிரகாசமாக ஒளிர்வதாகவும் அமையக்கூடும்.

ஆகவே நண்பர்களே நாம் நமது கடமைகளை உணர்ந்து முன்னேறுவோம். இந்த நேரத்தில், நமது நாட்டில் கூட்டாட்சி கட்டமைப்பை வழங்கும் வகையில் நமது அரசியல் சாசனத்தை வடிவமைத்த சிற்பிகளுக்கு நான் நன்றி செலுத்திக் கொள்கிறேன். அதில் கூறப்பட்டுள்ள தத்துவங்களின் அடிப்படையில் நாம் ஒருவரோடு ஒருவர் தோளோடு தோள் நின்று பணியாற்றினால் மட்டுமே அமிர்த காலத்திற்கான கனவுகளை நாம் நிறைவேற்ற இயலும். திட்டங்கள் மாறுபடலாம், பணியாற்றும் விதம் மாறுபடலாம், ஆனால் நமது இலக்குகள் மாறாது. தேசத்திற்கான கனவுகள் மாறாது.

இத்தகைய சகாப்தத்தை நோக்கி நாம் முன்னேறுவோம். நான் குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது நமது கொள்கைகளுக்கு ஒவ்வாத அரசு மத்தியில் பதவியில் இருந்ததை நான் நினைவு கூர்கிறேன். ஆனால், குஜராத்தின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்ற மந்திரத்தை அப்போது கடைப்பிடித்து வந்தேன். நாட்டின் வளர்ச்சி என்பது நமது இதயத்தின் அடிநாதமாக இருக்க வேண்டும், நாம் எங்கிருந்த போதிலும், நாட்டின் முன்னெடுத்துச் செல்வதில், தலைமைப் பொறுப்பு ஏற்று பலதுறைகளில் உதாரணமாக விளங்கிய பல மாநிலங்கள் நமது நாட்டில் உண்டு. இந்த பாணியானது நமது கூட்டாட்சித் தத்துவத்திற்கு வலு சேர்க்கிறது. ஆனால், இன்று கூட்டுறவு அடிப்படையிலான கூட்டாட்சித் தத்துவமும், அதே நேரத்தில் கூட்டுறவு அடிப்படையிலான போட்டி மனப்பான்மையுடன் கூடிய கூட்டாட்சித் தத்துவத்திற்கு அவசியம் ஏற்பட்டுள்ளது. வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால் போட்டி அவசியம்.

ஒவ்வொரு மாநிலமும், தான் முன்னேறிச் செல்வதாக உணரவேண்டும், அதாவது பந்தயத்தில் முந்துவதற்காக கடினமாக உழைத்து முன்னேற முயற்சிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட மாநிலம் 10 நற்காரியங்களைச் செய்திருந்தால், இதர மாநிலங்கள் 15 நற்காரியங்களைச் செய்ய முன் வரவேண்டும். ஒரு மாநிலம் ஒரு பணியை 3 ஆண்டுகளில் நிறைவேற்றி முடித்திருந்தால், அதே பணியை பிற மாநிலங்கள் 2 ஆண்டுகளில் நிறைவேற்ற துடிக்க வேண்டும். மாநிலங்கள் மற்றும் அரசின் ஒவ்வொரு துறைகளுக்கு இடையிலான இத்தகைய போட்டி மனப்பான்மை, வளர்ச்சியின் உச்சத்திற்கு நம்மை இட்டுச் செல்வதாக அமைந்திருக்கும்.

எனதருமை நாட்டு மக்களே,

25 ஆண்டுகால அமிர்த காலத்தைப் பற்றி பேசுகையில், ஏராளமான சவால்களும், தடைகளும், பிரச்சினைகளும், இருக்கின்றன என்பதை நான் அறிவேன். இவற்றை நான் குறைத்து மதிப்பிடவில்லை. இதற்கான வழிகளை கண்டறிந்து தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள எத்தனித்திருப்போம். ஆனால், இங்கே, இப்போது இரண்டு முக்கியமான விஷயங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க இருக்கிறேன். கருத்துத் தெரிவிக்க ஏராளமான விஷயங்கள் இருந்த போதிலும் கால அவகாசத்தை முன்னிட்டு இரண்டு முக்கியமான விஷயங்கள் குறித்து மட்டும் தற்போது பேச உள்ளேன். இத்தகைய சவால்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிகளை நாம் சிந்திக்கவில்லை என்றால் 25 ஆண்டுகால நீண்ட அவகாசம் இருந்தபோதிலும் கூட அது தவறாகிவிடக் கூடும் என்று நான் நம்புகிறேன். ஆகையால் எல்லாவற்றையும் பற்றி கருத்துத் தெரிவிப்பதைக் காட்டிலும், இரண்டு முக்கிய விஷயங்கள் குறித்து மட்டும் கவனம் செலுத்த விழைகிறேன். அவற்றில், ஒன்று ஊழல், மற்றொன்று அதிகாரத்தில் வாரிசு ஆதிக்கம். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மக்கள் வறுமையால் வாடிக் கொண்டிருக்கும் நிலையில், வாழ்வதற்கு நிலையான இடம் ஒன்று இல்லாது இருக்கும் நிலையில், மற்றொரு புறம், தவறான வழியில் சேர்த்து வைத்த பணத்தை எங்கே மறைத்து வைத்திருப்பது என்று தெரியாத பிரிவினரும் இருக்கிறார்கள். இது சரியான சூழல் இல்லை. ஆகவே, ஊழலுக்கு எதிராக நமது வலிமையை எல்லாம் ஒன்றுதிரட்டி போராட வேண்டியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் நன்மைக்காக பணியாற்றுகையில், தவறான கரங்களுக்கு சென்றுகொண்டிருந்த இரண்டு லட்சம் கோடி ரூபாயை நவீன உத்திகளான நேரடி பணபரிமாற்றத் திட்டம் ஆதார் மற்றும் கைபேசி உதவியோடு தடுத்து நிறுத்தியுள்ளோம். முந்தைய ஆட்சியின் போது நாட்டின் வங்கிகளிலிருந்து கடன் பெற்று விட்டு நாட்டைவிட்டே தப்பிச் சென்ற நபர்களின் சொத்துக்களை முடக்கி, அவர்களிடமிருந்து கடன் தொகையை திரும்பப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். சிலர் சிறைக்கு செல்லும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டைக் கொள்ளையடித்தவர்கள், அந்த சொத்துக்களை திருப்பி அளித்தாக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

சகோதர சகோரிகளே,

ஊழலுக்கு எதிரான மிக முக்கியமான கட்டத்தை நாம் எட்டியுள்ளோம் என்பதை நான் கண்கூடாக உணர்கிறேன். மிகப் பெரும் தலைகள் கூட, இதிலிருந்து தப்ப இயலாது. இந்த உந்துதலோடு இந்தியா தற்போது ஊழலுக்கு எதிரான தீர்க்கமான ஒரு கால கட்டத்தில், அடியெடுத்து வைக்கிறது. பெரும் பொறுப்புகளுடன் இந்தக் கருத்தை நான் செங்கோட்டை கொத்தளத்திலிருந்து பறைசாற்றுகிறேன். சகோதர சகோரிகளே, ஊழல்வாதிகள் இந்த நாட்டை, கரையான்களை போல் செல்லரிக்கச் செய்கிறார்கள். நான் இதற்கு எதிராக போராட வேண்டும், அந்தப் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் இறுதியாக அதற்கு முற்றுப்புள்ளியும் வைக்கவேண்டும். ஆகவே எனதருமை 130 கோடி நாட்டு மக்களே என்னை ஆசீர்வதியுங்கள், என்னை ஆதரியுங்கள். இந்தப் போராட்டக் களத்தில் இறங்குவதற்கு உங்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாடி நான் இங்கு வந்துள்ளேன். இந்தப் போரில் இந்தியா வெற்றி வாகை சூடும் என்று நான் நம்புகிறேன். சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை இத்தகைய ஊழல் காரணமாக பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இது போன்ற சாதாரண மக்கள் கவுரவத்துடனும், கண்ணியத்துடனும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். எனதருமை நாட்டு மக்களே, நாட்டில் நிலவும் அருவருக்கத்தக்க ஊழல், அனைவரும் அறிந்ததாக., அனைவரும் கருத்துத் தெரிவிக்கதக்கதாக இருந்தபோதிலும், சில நேரங்களில் ஊழல்வாதிகளுக்கு காட்டப்படும் பெருந்தன்மையான போக்கு மிகவும் கவலை அளிப்பதாகவும். எந்த நாடும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லாமல் இருப்பதையும் காண்கிறோம்.

நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஊழல்வாதி என்று முத்திரைக் குத்தப்பட்டு சிறைவாசத்திற்கும் அனுப்பப்பட்டு சிறையிலே நாட்களைக் கழித்துக் கொண்டு இருக்கும் நிலையிலும் தங்களைப் பற்றி புகழாரத்தைச் சூட்டிக்கொண்டு தங்கள் நிலையை உயர்த்திக் காட்டிக் கொள்ளும் கூச்சமற்ற நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். குப்பைகளுக்கு எதிராக நமக்கு வெறுப்பு ஏற்படாத வரையில் தூய்மை குறித்த விழிப்புணர்வு நமக்கு ஏற்படப்போவதில்லை. ஊழல் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராக நமக்கு வெறுப்பு ஏற்படாத வகையில், அவர்களை சமூக அவலமாக கருதி அவர்களை புறக்கணிக்காத வரையில் இத்தகைய மனப்பாங்கில் மாற்றம் ஏற்படாது. ஆகையால்தான் நாம் ஊழலைப் பற்றியும், ஊழல்வாதிகளைப் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

முக்கியத்துவம் அளித்து விவாதிக்கப்பட வேண்டிய மற்றொரு கருத்து, வாரிசுகளுக்கும் உறவினர்களுக்கும் சலுகை அளிக்கும் போக்கு. நான் இது போல வாரிசுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் போக்குக் குறித்து பேசும் போது, அது அரசியில் ரீதியிலானது என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். நிச்சயமாக அப்படி அல்ல, துரதிருஷ்டவசமாக பிற துறைகளிலும் இந்தப் போக்கு நிலவுகிறது. குடும்ப ரீதியிலான வாரிசு ஆதரவு போக்கு பல துறைகளில், படர்ந்து பரவியுள்ளது. இது நமது நாட்டின் வளமைமிக்க திறமைகளை பெருமளவில் பாதிக்கிறது. நமது நாட்டின் எதிர்கால ஆற்றல் வளம் இதனால் பாதிப்புக்குள்ளாகிறது. வாரிசு ஆதரவு காரணமாக உண்மையிலே தகுதி வாய்ந்த நபர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அவர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள். இது ஊழலுக்கும் மிகச் சிறந்த காரணியாக அமைகிறது. தகுதி இருந்தும் முறைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகள் வாயிலாக வாய்ப்புகளை தரஇயலாத தகுதி வாய்ந்த நபர்கள் வேலை கிடைப்பதற்காக ஊழல் வழிமுறைகளில் ஈடுபடுகிறார்கள். நாம் அனைவரும் கடுமையாக உழைத்து வாரிசு ஆதரவு போக்கிற்கு எதிராக அது குறித்த விழிப்புணர்வை பெற்று செயல்பட வேண்டும். இத்தகைய முயற்சிகளால் மட்டுமே நாம் நமது பல்வேறு அமைப்புகளின் எதிர்காலத்தை பாதுகாக்க இயலும் என்பதோடு, முறையான நடவடிக்கைகளை ஊக்குவிப்பது தொடர்பாக நமது எதிர்கால சந்ததியினரிடம் நேர்மறையான எண்ணங்களை விதைக்க இயலும். நமது நாட்டின் பல்வேறு துறைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு இது அவசியமாகிறது. அதே போல அரசியலிலும் கூட வாரிசு ஆதரவுப் போக்கு நாட்டின் வளமான எதிர்காலத்திற்கு அநீதி இழைத்திருக்கிறது. இத்தகைய போக்கு அந்த குறிப்பிட்ட குடும்பத்திற்கு மட்டுமே பலன் அளிப்பதாக இருக்கிறது என்பதை தவிர நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல.

ஆகவே, செங்கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடியின் கீழே நின்று கொண்டு இந்திய அரசியல் சாசனத்தை நினைவில் கொண்டு எனதருமை நாட்டு மக்களே, திறந்த மனதுடன் நான் கூறவிழைவது என்னவென்றால், நாம் அனைவரும் இந்திய அரசியலை பரிசுத்தமாக்கவும், தூய்மைப்படுத்தவும் நமது நாட்டின் பல்வேறு துறைகளை தூய்மையாக மாற்றவும், நமது நாட்டை குடும்ப ஆதரவு மனநிலையிலிருந்து மாற்றி தகுதி அடிப்படையிலானதாக உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும். முன் எப்போதைக் காட்டிலும் இந்தக் கருத்துக்கு தற்போது கூடுதல் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால், இந்த சமூக சூழலில், தன்னை முன்நிறுத்த தனது குடும்ப உறுப்பினர் யாரும் இல்லையே என்ற எண்ணத்துடன் தனக்கு தகுதி இருந்தும், போட்டியில் தன்னால் வெற்றி பெற இயலவில்லையே என்ற ஆதங்கமும் எல்லோர் மனதிலும் ஏற்றம் பெற்றிருக்கும். இத்தகைய மனப்பான்மை நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல.

எனது நாட்டின் இளைய சமுதாயமே, உங்களது ஒளிமயமான எதிர்காலத்திற்காக, உங்களது கனவுகளுக்காக, வாரிசு ஆதரவு போக்குக்கு எதிரான போரில் உங்களின் ஆதரவை எதிர்நோக்கியுள்ளேன். வாரிசு அரசியலுக்கு எதிரான போராட்டத்தில் உங்கள் ஆதரவை நான் நாடுகிறேன். இதை நான் எனது அரசியல் சாசன பொறுப்புணர்வாக கருதுகிறேன். ஜனநாயக பொறுப்புணர்வும் கூட. இந்த செங்கோட்டை கொத்தளத்திலிருந்து உதிர்க்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றிற்கும் இருக்கும் சக்தி குறித்து நான் நம்பிக்கைக் கொண்டுள்ளேன். ஆகவே, இந்த வாய்ப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டுமாய் உங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். கடந்த சில நாட்களில் விளையாட்டுத்துறையில் பெற்ற பாராட்டுக்களை நாம் அனைவரும் கண்டோம். கடந்த காலத்தில் நம்மிடம் இது போன்ற திறமைகள் இருக்கவில்லை என்பது இல்லை அர்த்தம். விளையாட்டு உலகில் நமது புதல்வர்களும், புதல்விகளும் இதற்கு முன்பாக சாதனை எதுவும் புரியவில்லை என்பதல்ல விளக்கம். ஆனால், அவர்கள் வாரிசு ஆதரவு சூழலில் புறந்தள்ளப்பட்டார்கள் என்பதே வருத்தத்திற்குரிய நிஜம். இப்படிப்பட்ட நிலை நிலவியதன் காரணமாக போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர், வீராங்கனைகளிடம் கூட நாட்டிற்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற உத்வேகம் இல்லாமல் இருந்தது. ஆனால், விளையாட்டுத்துறையில் வெளிப்படைத்தன்மை மீட்சி அடைந்த பிறகு,தகுதி அடிப்படையில், அவர்கள் தேர்வு செய்யப்பட்டபோது, விளையாட்டு மைதானங்களில் திறமைக்கு மதிப்பு வழங்கப்பட்ட போது நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மூவர்ணக் கொடி பல்வேறு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் உயர ஏற்றப்படுவதையும், தேசிய கீதம் பல்வேறு சர்வதேச மைதானங்களில் இசைக்கப்படுவதையும் கேட்கும் போது பெருமிதமாக உள்ளது.

வாரிசு ஆதரவு மற்றும் குடும்ப அரசியலில் இருந்து விடுதலை பெறும் போது யாரும், பெருமையோடு நாட்டிற்காக தங்கள் பங்களிப்பை வழங்குகிறார்கள் அதனால் இத்தகைய வெற்றி வாய்ப்புகள் நம்மை வந்தடைகின்றன. எனதருமை நாட்டு மக்களே ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன, சந்தேகமில்லை. இந்த நாட்டின் முன் கோடிக்கணக்கான சவால்கள் நிறைந்திருக்கின்றன என்றால், கோடிக்கணக்கான தீர்வுகள் இருக்கின்றன. 130 கோடி மக்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். லட்சியத்தோடு அதை நிறைவேற்றும் உறுதியோடு 130 கோடி மக்களும் ஒரு அடியை முன்னெடுத்து வைத்தால் இந்தியா 130 கோடி அடிகள் முன்னேறும். இத்தகைய திறனுடன் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். இதுதான் அமிர்த காலத்தின் முதல் சூரியோதயம். ஒவ்வொரு தருணத்தையும் நாம் இந்த 25 ஆண்டுகளில் நினைவில் கொள்ளவேண்டும். தாய்நாட்டிற்காக அனுதினமும், ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு துளி வாழ்வையும், நமது சுதந்திர போராட்ட வீர்ர்களுக்கான உண்மையான அஞ்சலியாக வாழ்ந்து காட்ட வேண்டும். கடந்த 75 ஆண்டுகளாக நாட்டை இவ்வளவு தூரம் கொண்டு சேர்த்ததற்காக பாடுபட்டோர் மீதான நினைவுகள் பயனுள்ளதாக இருக்கும்.

புதிய வாய்ப்புகள், புதிய தீர்வுகள் மற்றும் தன்னம்பிக்கையுடனான முன்னேற்றம் ஆகியவற்றுடன் அமிர்த காலத்தை துவக்குமாறு நான் எனது நாட்டு மக்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா தற்போது அமிர்த காலமாக மாறியுள்ளது, ஆகவே, அனைவரது முயற்சி அமிர்த காலத்திற்கு மிகவும் அத்தியாவசியமானது. அனைவரது முயற்சி மிகச் சிறந்த முடிவுகளை அளிக்க உள்ளது. இந்திய அணி என்ற உணர்வு நமது நாட்டை முன்னேற்றத்தின் பாதையில் அழைத்துச் செல்ல உள்ளது. இந்த இந்திய அணி 130 கோடி நாட்டு மக்களுடன் அனைத்துக் கனவுகளையும் நனவாக்கும் வகையில் ஒரே அணியாக முன்னேற்றப் பாதையில் பீடு நடை போட உள்ளது. இந்த நம்பிக்கையுடன் என்னோடு சேர்ந்து கூறுங்கள்

ஜெய் ஹிந்த்
ஜெய் ஹிந்த்
ஜெய் ஹிந்த்
ஜெய் ஹிந்த்
பாரத் மாதா கி ஜே
பாரத் மாதா கி ஜே
பாரத் மாதா கி ஜே
பாரத் மாதா கி ஜே
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
நன்றிகள் பல

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version