தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி செல்ல உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காத நிலை உள்ளது. இந்நிலையில், டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இது தொடர்பாக பேச முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இன்று இரவு 9.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். நாளை காலை 10.30 மணிக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கரை சந்திக்கிறார்.
11.30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளார். நாளை மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவை தொகைகள், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிப்பது, ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்தம், நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட தமிழ்நாட்டின் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தமிழகத்துக்கு தேவையான புதிய திட்டங்கள் குறித்தும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமர் கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவிக்க உள்ளார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமரை சந்தித்துவிட்டு நாளை இரவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
