இலவசம் வழங்கும் திட்டம் தொடர்பான வழக்கு விசாரணையில் தி.மு.க.தான் புத்திசாலியான கட்சி என்று நினைக்க வேண்டாம்- என உச்சநீதிமன்ற நீதிபதி பரபரப்பு கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்குவதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரமணா முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் தி.மு.க. சார்பில் ஏற்கனவே ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இலவசங்களை வழங்க ஆதரவு நிலைபாட்டுடன் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி ரமணா தி.மு.க. வக்கீல் வில்சனிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இலவசங்கள் என்றால் என்ன? நலத்திட்டங்கள் என்றால் என்ன? என்பதை எங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. கிராமங்களில் இருப்பவர்களுக்கு மாடு வழங்குவது, மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்குவது ஆகியவற்றை நலத்திட்டங்கள் என்று நாங்கள் புரிந்து கொள்கிறோம். உங்கள் கட்சிதான் (தி.மு.க.) புத்திசாலித்தனமான, மிகவும் சாதுர்யமான, கட்சி என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.
நாங்களாக இந்த வரம்புக்கு வர வேண்டாம் என்று நினைத்திருந்தோம். நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்த்து இருந்தோம். இவ்வாறு நீதிபதி ரமணா கேள்வி எழுப்பினார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.
