விசாகப்பட்டினத்தில் இட வசதி இல்லை- ‘விக்ராந்த்’ கப்பல் சென்னையில் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது .
பிரதமர் மோடி நேற்று முன்தினம் கொச்சியில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான விக்ராந்த் போர் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த கப்பல் 18 அடுக்குகளுடன் 262 மீட்டர் நீளத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டதாகும். இந்த கப்பலில் 34 போர் விமானங்களை நிறுத்தி வைப்பதற்கு வசதி உள்ளது. அந்த போர் விமானங்கள் ஏறி, இறங்குவதற்காக 2 கால்பந்து மைதானங்கள் அளவுக்கு பிரமாண்டமான ஓடுபாதையும் உள்ளது. விக்ராந்த் போர் கப்பல் ஏற்கனவே கடலில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. தற்போது இந்திய கடல் எல்லையின் முக்கிய பாதுகாப்பு அரணாக இந்த கப்பல் மாறி பணியை தொடங்கியுள்ளது.
கொச்சி கடற்படை தளத்தில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல் தற்போது அரபிக்கடல் பகுதியில் இருக்கிறது. அடுத்து அந்த கப்பல் இந்திய பெருங்கடல் பகுதிக்கு செல்லும் என்று தெரியவந்துள்ளது. விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலை விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை தலைமை பகுதியில் நிறுத்தி வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் விசாகப்பட்டினம் கடற்படை துறைமுகத்தில் நீளமான விக்ராந்த் போர் கப்பலை நிறுத்துவதற்கு தற்போது போதுமான வசதிகள் இல்லை.
அங்கு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் நிறைவு பெறுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும் என்று தெரியவந்துள்ளது. எனவே அதுவரை விக்ராந்த் விமானம் தாங்கி போர் கப்பலை வேறு துறைமுகத்தில் நிறுத்த ஆலோசிக்கப்பட்டு வந்தது.
பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் விக்ராந்த் விமானம் தாங்கி போர் கப்பலை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. காட்டுப்பள்ளியில் உள்ள துறைமுகம் எல் அன் டி நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இதனால் அந்த நிர்வாகத்துடன் இந்திய கடற்படை அதிகாரிகள் பேச்சு நடத்தி வந்தனர். அதன் அடிப்படையில் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலை நிறுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே காட்டுப்பள்ளி துறைமுகம் மிகப்பெரிய கப்பல்களை கையாளும் வகையில் ஆழமான அமைப்பை கொண்டது.
இதனால்தான் காட்டுப்பள்ளி துறைமுகத்தை இந்திய கடற்படை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு இந்த துறைமுகத்தில் விக்ராந்த் விமானம் தாங்கி போர் கப்பல் நிறுத்தி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியாவிலேயே போர் கப்பல்களை பழுது பார்ப்பதில் சிறப்பான துறைமுகமாக காட்டுப்பள்ளி துறைமுகம் சாதனை படைத்துள்ளது.
சமீபத்தில் கூட அமெரிக்காவின் மிகப்பெரிய போர் கப்பல் இந்த துறைமுகத்தில்தான் பழுதுபார்க்க அனுப்பி வைக்கப்பட்டது. இதன்மூலம் மற்ற நாடுகளும் தங்களது போர் கப்பல்களை காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு அனுப்பி பழுது பார்க்க பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.