வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 10 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.
சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். செப்.10 முதல் 12ம் தேதி வரை 3 நாட்கள் தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ஓமலூரில் 10 செ.மீ., சோளிங்கர் 8, விழுப்புரம், வடபுதுப்பட்டு, ஏற்காட்டில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
குமாரி கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். லட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தி கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மேற்கூறிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என வானிலை மையம் கூறியுள்ளது.