பெங்களூருவில் காரில் வந்த டாக்டர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி,காரிலிருந்து இறங்கி 3 கி.மீ. ஓடிச்சென்று அறுவை சிகிச்சை செய்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் கோவிந்த் நந்தகுமார் பெங்களூரி
ருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் குடல் மற்றும் இரைப்பை மருத்துவராகப் பணிபுரிகிறார். அவர் பணிபுரியும் மருத்துவமனையில் நீண்ட நாள்களாக பித்தப்பை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி அவசரமாக அந்த அறுவை சிகிச்சையைச் செய்ய தனது காரில் சென்று கொண்டிருந்தார் டாக்டர் கோவிந்த் நந்தகுமார்.
பெங்களூரு நகரம் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிக்கது. அங்கே சாலையில் கொஞ்ச தூரம் வாகனத்தில் கடக்க வேண்டும் என்றாலும் அதிக நேரம் எடுக்கும். சில வாரங்களாகப் பெய்த கனமழையால் நகரின் பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சர்ஜாபூர்-மரதல்லி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார் டாக்டர் நந்தகுமார். தாமதமானால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்தப் பெண் நோயாளிக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்தார். நோயாளியைக் காப்பற்ற விரைவாக ஒரு முடிவை எடுத்தார். அதன்படி, தனது காரை விட்டு இறங்கி மருத்துவமனையை நோக்கி ஓடத் தொடங்கினார்.
மூன்று கிலோமீட்டர் தூரத்தை, 45 நிமிடங்களில் ஓடி, மருத்துவமனையை அடைந்தார். சரியான நேரத்தில் அந்த அறுவை சிகிச்சையைச் செய்து, நோயாளியை பாதிப்பில் இருந்து மீட்டார்.
தனது ஓட்டத்தின் ஒரு சிறிய வீடியோ க்ளிப்பை அவர் வெளியிட, அது சமூக வலைதளங்களில் வைரலானது.
இது குறித்து டாக்டர் நந்தகுமார் கூறும்போது, “நான் ஒவ்வொரு நாளும் மத்திய பெங்களூரிலிருந்து பெங்களூரின் தென்கிழக்கில் உள்ள சர்ஜாபூர் மணிப்பால் மருத்துவமனைக்குப் பயணம் செய்கிறேன். அறுவை சிகிச்சைக்கு சரியான நேரத்தில் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். நான் சென்றதும் அறுவை சிகிச்சையை ஆரம்பிக்க என் குழு தயாராக இருந்தது. அதிக போக்குவரத்தைப் பார்த்ததும் காரிலிருந்து இறங்கி, யோசிக்காமல் மருத்துவமனையை நோக்கி ஓடினேன். நோயாளிக்கு மயக்க மருந்து செலுத்த என் மருத்துவக் குழுவினர் தயாராக இருந்தார்கள். அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நோயாளி சரியான நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார” என்றார் மகிழ்ச்சியுடன்.
மருத்துவரின் இந்தச் செயலுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.