மற்ற மாநிலங்களை விட மின் கட்டணம் குறைவு என மக்களை ஏமாற்ற வேண்டாம்- தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டணங்களை உயர்த்தியுள்ள அரசு தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. மக்களிடம் கருத்து கேட்கும் முன்பே மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளதாக இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் பேட்டியளித்துள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் தின்டுக்கல்லில் அரசு வழங்கிய இலவச டி.வி., மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.
அதனை தலையில் சுமந்தவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த இந்து மக்கள் கட்சியினர் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அதன் பின்னர் அக்கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது,
தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டணங்களை உயர்த்தியுள்ள அரசு தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள மின்துறை அமைச்சர் குஜராத், ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களை விட தமிழகத்தின் மின் கட்டணம் குறைவு என கூறுகிறார். இதைச் சொல்லி மக்களிடம் இருந்து தப்பித்து விட முடியாது.
கடந்த 16 மாதங்களில் தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து வருகிறது. மின் வாரியம் ஊழல் வாரியமாக மாறியுள்ளது. முதல்-அமைச்சர் மின் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மக்களிடம் கருத்து கேட்கும் முன்பே மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளனர். இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும். இந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசாவை கைது செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் தி.மு.க. மீது அதிருப்தியில் உள்ள நிலையில் மக்களை திசை திருப்பும் முயற்சியில் இது போல் பேசியுள்ளார். கட்சியில் கனிமொழி எம்.பி. புறக்கணிக்கப்படுகிறார். முதல்-அமைச்சரின் மனைவி துர்கா, மருமகன் சபரீசன் ஆகியோரை மனதில் வைத்து ஆ.ராசா இவ்வாறு பேசி இருக்க கூடும். எனவே இந்த பேச்சுக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர்தான் கோபமடைய வேண்டும். தி.மு.க.வில் 1 கோடி இந்துக்கள் உள்ளனர் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். அவ்வாறு உள்ள போது ஆ.ராசா பேசியது அவர்களை அவமதிப்பது போல் அமையும். எனவே அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
