

தமிழகத்தில் நாளை புரட்டாசி மாதபிறப்பு வரும் நிலையில் கேரளாவில் ஜோதிட கணிப்பு படி இன்று புரட்டாசி மாதம் பிறந்ததால் கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் இன்று புரட்டாசி மாத பூஜை வழிபாடுகள் விமர்சையாக நடைபெற்றது.தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் செப் 21ம் தேதி இரவு நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் 41 நாட்களுக்கு முன்பிருந்தே பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிக்க வேண்டும். பக்தர்கள் பாரம்பரிய கடினமான காட்டுவழிப் பாதையிலும் செல்கின்றனர். அத்துடன் கோவிலை அடைய சற்று சிரமம் குறைவான பம்பை நதி வழிப் பாதையிலும் பயணிக்கின்றனர்.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் புனிதப்பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலை ஐயப்பன் கோவிலாகும்.
பரசுராமர் கடலுக்கு அடிப்பகுதியிலிருந்து கேரள நிலத்தை சபரிமலையின் உயரத்திற்கு எழுப்பி அவரே ஐயப்ப சுவாமியின் திருவுருவத்தை சிலையாக செதுக்கி பிரதிஷ்டை செய்தாக தல வரலாறு கூறுகிறது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் இங்கு மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை நடைபெறும். அது தவிர மாத பிறப்பு நாட்களில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த ஆகஸ்ட் மாதம் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற புத்தரிசி பூஜை நடைபெற்றது. இதனையடுத்து திருவோண பூஜைக்காக கடந்த 6ஆம் தேதி நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் 10ஆம் தேதி வரை நடைபெற்றன.
புரட்டாசி மாத பூஜைக்காக வெள்ளிக்கிழமை மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் செப் 21வரை இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். அதை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். மேலும் தினசரி நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். நிலக்கல்லில் இதுதொடர்பான ஆய்வு நடைபெறும்.
இன்று 17ஆம் தேதி முதல் முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் 21ஆம் தேதி இரவு நடை அடைக்கப்படும்.
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பம்பை நதியில் தண்ணீர் அதிகமாக செல்கிறது.பக்தர்கள் ஆர்வத்துடன் புனித நீராடி விட்டு மலையேறி ஐயனை தரிசனம் செய்தனர்.
