
திருச்சியில் நடைபெற்று வரும் புத்தக திருவிழா கண்காட்சியில் ரூ.1 கோடிக்கு மேல் புத்தகம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருச்சி மாவட்ட நிர்வாகம், மத்திய கல்வி அமைச்சகம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா ஆகியவை சார்பில் திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் “திருச்சி புத்தக திருவிழா” என்ற பெயரில் பிரமாண்ட புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்த புத்தக திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கியது வருகிற 25-ந்தேதி வரை நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் அரசு மற்றும் தனியார் அரங்குகள் என 161 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த புத்தகத் திருவிழாவில் 90-க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.
இதில் ரூ.10 முதல் ரூ.1000 வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் புத்தகங்கள் கிடைக்கும். இங்கு விற்கப்படும் அனைத்து நூல்களுக்கும் 10 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் நாள்தோறும் 20 ஆயிரம் வாசகர்கள் வரை வந்து பார்த்து புத்தகம் வாங்க அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது வரை ரூ.1 கோடிக்கு மேல் புத்தம் விற்பனையாகி உள்ளதாக திருச்சி மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. அனைத்து நிகழ்வுகளுக்கும் அனுமதி இலவசம். இந்த புத்தகத் திருவிழாவிற்கு வந்து செல்லும் புத்தக பிரியர்களுக்கு அடிப்படை வசதிகளான உணவுக்கூடம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர், கழிவறை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது