தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா மரணம்..

Published:

871182 - 2026

தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவரும், திமுக தேர்தல் பணிக்குழு தலைவருமான சேடப்பட்டி முத்தையா (வயது 77) மதுரையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3 மாதங்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்னாள் அவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா(77) சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலமானார்.இவர் கடந்த 1991 முதல் 1996 வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தார்.

1977, 1980, 1984, 1991 ஆகிய 4 முறை சேடப்பட்டி சட்டமன்ற தொகுதியிலிருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் சேடப்பட்டியார் என அழைக்கப்பட்டார்.பெரியகுளம் மக்களவை தொகுதி உறுப்பினராக 2 முறை பதவி வகித்த சேடப்பட்டி முத்தையா, 1999-இல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

16637482663057 - 2026

அதனைத் தொடர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். திமுகவில் தேர்தல் பணி குழு தலைவராக கடந்த 16 ஆண்டு காலமாக  பொறுப்பு வகித்தார்.சேடப்பட்டி முத்தையாவுக்கு சகுந்தலா என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

இவருடைய இளைய மகன் மு.மணிமாறன் திமுகவின் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது இறுதிச் சடங்கு திருமங்கலத்தை அடுத்த குன்னத்தூர் பகுதியை அடுத்த முத்தப்பன்பட்டியில் அவரது தோட்டத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேடப்பட்டி முத்தையா மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசியல் களத்தில் சேடப்பட்டியார் என மதிப்புடன் அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக் குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகவும் துயருற்றேன்.

நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சேடப்பட்டி முத்தையா, தமிழ்நாடு சட்டப்பேரவையின் தலைவராக 1991 – 1996 ஆண்டுகளில் பணியாற்றியுள்ளார். கடந்த 2006ம் ஆண்டு, தலைவர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் தம்மை இணைத்துக் கொண்ட சேடப்பட்டி முத்தையா, அப்போது முதல் கட்சியின் வளர்ச்சிக்காகவும், மேன்மைக்காகவும் தொடர்ந்து பங்காற்றி வந்தார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

அண்மையில் மதுரை சென்றிருந்த போது, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேடப்பட்டி முத்தையாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தேன். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் மறைவுற்ற செய்தி, தற்போது வந்தடைந்து வேதனையைத் தந்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img