
ஒரு வந்தே பாரத் ரெயில் தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த ரயிலை சென்னை -செங்கோட்டை -சென்னை இடையே எட்டு மணிநேரத்தில் செல்லும் வகையில் இயக்க தென்காசி விருதுநகர் மாவட்ட பொதுமக்கள் வர்த்தகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் அதிக வேகமாக ஓடக்கூடிய “வந்தே பாரத்” ரெயில் சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகிறது. 160 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடிய இந்த ரெயிலில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதுவரையில் பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற் சாலையில் இருந்து 3 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. 2 ரெயில்கள் வடக்கு ரெயில்வேக்கும் 1 ரெயில் மேற்கு ரெயில்வேக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஐ.சி.எப்-ல் இருந்து 27 ரெயில்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதில் ஒரு வந்தே பாரத் ரெயில் தற்போது தயாராக உள்ளது.
இந்த நிலையில் தெற்கு ரெயில்வேக்கு ஒரு வந்தே பாரத் ரெயிலை ரெயில்வே வாரியம் ஒதுக்கியுள்ளது. தெற்கு ரெயில்வேக்கு 16 பெட்டிகளை கொண்ட ஒரு வந்தே பாரத் ரெயில் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்று இதுவரை இறுதி செய்யப்படவில்லை. பேசின் பாலம் ரெயில்வே பணிமனையில் இதற்கான பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சென்னைக்கு 5-வது அல்லது 6-வது வந்தே பாரத் ரெயில் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர், அல்லது மதுரை அல்லது கோவை ஆகிய ஏதாவது ஒரு நகரத்திற்கு இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறிவரும் நிலையில் இந்த ரயிலை சென்னை-செங்கோட்டை-சென்னை இடையே பகல் இரவு ரயிலாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது இந்த வழியில் இயங்கும் பொதிகை , சிலம்பு,கொல்லம் விரைவு ரயில் எப்போதும் பயணிகளை முழுமையாக நிரப்பி செல்கிறது. குற்றாலம் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.ராஜபாளையம் சங்கரன்கோவில் சிவகாசி என மிகப்பெரிய தொழில் நகரங்களும் மதுரை சங்கரன்கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் தென்காசி திருச்சி ஆன்மீக ஸ்தலங்களும் இந்த வழியில் உள்ளன.இதனால் துரிதமாக செல்லும் பயணிகள் வர்த்தகர்கள் மாணவர்கள் ஞ்சா சுற்றுலா செல்வோர் நலன் கருதி முக்கிய நகரங்களில் மிக குறைந்த நிறுத்தங்களுடன் செல்லும் வகையில் சென்னை -செங்கோட்டை-சென்னை இடையே பகல் இரவு ரயிலாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.