- Ads -
Home சற்றுமுன் தமிழகத்தில் 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கிய திட்டத்தை திமுக அரசு நிறுத்தி விட்டது-இபிஎஸ்..

தமிழகத்தில் 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கிய திட்டத்தை திமுக அரசு நிறுத்தி விட்டது-இபிஎஸ்..

தமிழகத்தில் ரூ.52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி அவர்களது வீடுகளில் விளக்கேற்றியது அ.தி.மு.க. அரசு. அந்த திட்டத்தையும் தி.மு.க. அரசு தற்போது நிறுத்திவிட்டதாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க. சார்பில் இன்று நடந்த கண்டன பொதுக்கூட்டம் இபிஎஸ் பேசினார்.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் 32 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே இயக்கம் அ.தி.மு.க. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கி, புரட்சிதலைவி அம்மா சிறப்பான ஆட்சியை தந்தார். அம்மா மறைவிற்கு பிறகு நான் முதல்வராகி சிறப்பான ஆட்சி தந்தேன். அந்த வகையில் அதிக நாட்கள் ஆட்சி செய்த இயக்கம் அ.தி.மு.க..

அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் ஏற்றம் பெற்றது. முதன்மை மாநிலமாக தமிழகம் மாறியதற்கு அடித்தளமிட்டது அ.தி.மு.க. அரசு தான். இன்றைக்கு மு.க.ஸ்டாலின் திராவிட மாடல், திராவிட மாடல் என்று மூச்சுக்கு 300 தடவை சொல்கிறார். அப்படி என்ன திராவிட மாடல் கொண்டு வந்து விட்டார். தி.மு.க. ஆட்சிக்கு வந்து 16 மாதமாகிறது. அப்படி என்ன செய்து விட்டார்கள்? தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம். பிள்ளையார் சுழி போட்டது போல விருதுநகரில் முதல் மருத்துவ கல்லூரி அமைந்தது. அதன் ராசி அடுத்தடுத்து மருத்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டது.

அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் மருத்துவ கல்லூரி அமைய அடிக்கடி என்னை சந்தித்து வலியுறுத்தினார். அதன் பயனாக விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் பிரம்மாண்டமான மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. சென்னையில் தனியார் மருத்துவமனையில் கிடைக்கும் சிகிச்சை விருதுநகரில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்தது அ.தி.மு.க. அரசு. 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பெற்ற பிள்ளைக்கு யாரோ பெயர் வைப்பது போல அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. அரசு தொடங்கி வைத்து வருகிறது. 7 சட்டக்கல்லூரிகள், கால்நடை மருத்துவமனை, ஆராய்ச்சி நிலையங்கள் கொண்டு வந்தோம். 76 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கொண்டு வந்தோம். பள்ளிகளை தரம் உயர்த்தி அதிக மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்கும் சூழ்நிலையை ஏற்படுத்தினோம்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா!

ஒரு நாடு கல்வியில் சிறந்து விளங்கினால் தான் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க முடியும். அதிலும் ஏழை மக்களுக்கு கல்வி வசதிகளை ஏற்படுத்தி தந்த அரசு அம்மா அரசு. அதனால் தான் உயர் கல்வியில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. இந்த சாதனைக்களுக்கெல்லாம் சொந்தம் கொண்டாட வேண்டியது அ.தி.மு.க. அரசு தான். மாணவர்களுக்கு சீருடை, பாடபுத்தகம், மடிக்கணினி உள்ளிட்ட கல்வி உபகரணங்களை தந்தது அ.தி.மு.க. அரசு. யாராலும் கொடுக்க முடியாதததை மாணவர்களுக்கு கொடுத்தது அம்மா அரசு. ஆனால் தி.மு.க. அரசால் இந்த திட்டத்தை நிறுத்த தான் முடிந்தது. தமிழகத்தில் 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி அவர்களது வீடுகளில் விளக்கேற்றியது அ.தி.மு.க. அரசு. அந்த திட்டத்தையும் தி.மு.க. அரசு தற்போது நிறுத்திவிட்டது.

அதை நினைத்தால் வேதனையாக உள்ளது. மாணவ-மாணவிகளின் அறிவுபூர்வ கல்வியை பெருக்குவதற்காக தான் மடிக்கணினி திட்டம் தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தை நிறுத்துவது தான் திராவிட மாடலா? என்பதை மு.க.ஸ்டாலின் எண்ணி பார்க்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியுடன் ஒப்பிடுகையில் கடந்த 1½ ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் மளிகை பொருட்களின் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பல்வேறு வாக்குறுதிககளை அளித்தனர்.

ALSO READ:  தாம்பரம்- கொச்சுவேலி ரயில் மீண்டும் இயக்கம்! முன்பதிவு தொடக்கம்!

ஆனால் அவர்கள் அதனை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டனர். பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்றார்கள். ஆனால் டீசல் விலையை குறைக்கவில்லை. டீசல் விலை உயர்ந்தால் அனைத்து பொருட்ளின் விலையும் உயர்ந்துவிடும். இதுபோல் அவர்கள் அறிவித்த எந்த அறிவிப்பையும் நிறைவேற்றவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் படித்த இளைஞர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வாங்கிய கல்விக்கடனை ரத்து செய்வோம் என்றனர். ஆனால் அதனை செய்யவில்லை. கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்ட பணி நாட்களை 150 ஆக உயர்த்துவோம் என்றனர். மேலும் 100 நாள்வேலை திட்ட தொழிலாளர்கள் ஊதியத்தை உயர்த்துவோம் என்றனர். ஆனால் எதையும் செய்யாமல் ஏழைகளை தி.மு.க. அரசு ஏமாற்றிவிட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவித்ததும் மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில் நடந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் அவ்வாறு நடக்கவில்லை. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொடுக்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை அரசு ஊழியர்களுக்கு வழங்காத தி.மு.க. அரசு இந்த அகவிலைப்படி உயர்வை எப்படி வழங்கப்போகிறார்கள் என்று பார்க்கலாம். படித்தவர்கள், படிக்காதவர்களை ஏமாற்றிய ஒரே அரசு தி.மு.க. அரசு. அதில் கைதேர்ந்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ALSO READ:  நெல்லை: சிறுவன் மீது தாக்குதல்; 8 பிரிவில் வழக்குப் பதிவு! நால்வரைப் பிடித்து விசாரணை!
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version