சிவகாசியில் எடப்பாடி பழனிசாமியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக சாலையோரம் திரண்டிருந்த முன்னாள் எம்எல்ஏ உட்பட ஓபிஎஸ் அணியை சேர்ந்த பலரை போலீசார் கைதுசெய்தனர்
முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. தற்காலிக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் இன்று காலை சிவகாசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிவகாசி-விருதுநகர் சாலை வழியாக செல்ல இருந்தார். இது பற்றி அறிந்த சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓ.பி.எஸ். அணி கிழக்கு மாவட்ட செயலாளருமான பாலகங்காதரன் உள்ளிட்ட 34 பேர் எடப்பாடி பழனிசாமியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக சாலையோரம் திரண்டிருந்தனர். இந்த போராட்டம் குறித்து அறிந்த போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் எம்.எல்.ஏ. பாலகங்காதரன் உள்பட 34 பேரையும் கைது செய்தனர். இது ஓ.பி.எஸ். அணி பிரமுகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.