
ஜம்மு-காஷ்மீரில் டிஜிபி கொலை: வீட்டுப் பணியாளரின் டைரி கண்டெடுப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் சிறைத் துறை டிஜிபி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது வீட்டுப் பணியாளரின் டைரி கண்டெடுக்கப்பட்டிருப்பதாக ஜம்மு ஏடிஜிபி தெரிவித்துள்ளார்.
சிறைத் துறை டிஜிபி லோஹியா படுகொலை தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறிய ஜம்மு ஏடிஜிபி முகேஷ் சிங், வீட்டுப் பணியாளர் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படுகிறார். அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. டிஜிபி லோஹியாவைக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொலைக் குற்றவாளியின் டைரி கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், அவர் பல்வேறு மனநிலை பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருக்கும் நிலையில், சிறைத் துறை டிஜிபி லோஹியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
1992ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த டிஜிபி லோஹியா, ஜம்மு நகரில், உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில், அவர் நேற்று வீட்டில் படுகொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவர் சிறைத்துறை டிஜிபியாக பதவி உயர்வுபெற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவரது வீட்டில் வேலை செய்து வந்த பணியாளர் மாயமான நிலையில், அவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடரைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குடும்ப பிரச்னை அல்லது முன்விரேர்தம் காரணமாக நடந்த கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜம்மு – காஷ்மீருக்கு உள்துறை அமைச்சர் வருகை தந்திருக்கும் நிலையில், சிறைத்துறை டிஜிபி மரணம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
