
குஜராத்தில் வந்தே பாரத் ரயில் பத்வா மற்றும் மணிநகர் ரயில் நிலையத்திற்கு இடையே வந்தபோது இன்று விபத்துக்குள்ளானது.
குஜராத் தலைநகா் காந்தி நகரையும் மகாராஷ்டிரத் தலைநகா் மும்பையையும் இணைக்கும் வகையில் நாட்டின் 3-ஆவது ‘வந்தே பாரத்’ ரயில் சேவையைப் பிரதமா் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை (செப்.30) தொடக்கிவைத்தாா்.இந்நிலையில் இந்த ரயில் இன்று காலை 11.15 மணியளவில் பத்வா மற்றும் மணிநகர் ரயில் நிலையத்திற்கு இடையே வந்தபோது விபத்துக்குள்ளானது.
ரயில் செல்லும் பாதையில் குறுக்கே வந்த மாடுகள் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டதாகவும் இதனால் ரயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்ததாகவும் அதேநேரத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரயில் என்ஜினை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, நவீன வசதிகள் கொண்ட ‘வந்தே பாரத்’ ரயிலை இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. முக்கியமாக, வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் ஏற்கெனவே புது தில்லி-வாராணசி, புது தில்லி-ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி காத்ரா ஆகிய இரு வழித்தடங்களில் ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.நாட்டின் 75 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில், அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.