திருவண்ணாமலையில் வரும் 9-ம் தேதி பவுர்ணமி கிரிவலம் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் திரு அண்ணாமலையை பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுகின்றனர். அதன்படி, புரட்டாசி மாத பவுர்ணமி, வரும் 9-ம் தேதி அதிகாலை 4.09 மணிக்கு தொடங்கி, மறுநாள் (10-ம் தேதி) அதிகாலை 3.11 மணிக்கு நிறைவு பெறுகிறது.
மேற்கண்ட நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால், கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.இதனால், கிரிவல பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கு ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
பவுர்ணமி கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வெளி மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
