
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை குறித்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
அவசரச் சட்டத்திற்கு அக்.1 ஆம் தேதியே ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில், அது குறித்து அரசிதழில் வெளியாகியுள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை செ.26-ல் ஒப்புதல் அளித்து இருந்தது.
அமைச்சரவை பரிந்துரை அக்.1-ல் ஆளுநர் மாளிகைக்கு வந்ததாகவும், அன்றைய தினமே ஒப்புதல் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பணத்தை வைத்து சூதாட்டங்களில் ஈடுபடும் விளையாட்டுகள் இந்த அவசரச் சட்டம் மூலம் தடை ஏற்படும்.
ஆன்லைன் விளையாட்டு பற்றி ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சந்துரு தலைமையிலான குழு கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. தமிழக அரசு தடை சட்டத்துக்கு ஓப்புதல் அளித்தது. ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்ததை அடுத்து புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.அக்டோபர் 17 ஆம் தேதி கூடவுள்ள சட்டப்பேரவை தொடரில் நிரந்தர சட்டம் கொண்டுவரப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.