
நாளை அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழாவில் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி நாளை மாலை அணிவிக்கிறார் 51-ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் வகையில் தலைமைக்கழகத்துக்கு நாளை திங்கட்கிழமை காலை 9 மணிக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதிராஜாராம், சத்யா உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள், தொண்டர்களுடன் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அ.தி.மு.க. பொன்விழா ஆண்டை நிறைவு செய்து 51-வது ஆண்டில் நாளை அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகம் மின்னொளியில் ஜொலிக்கிறது.
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. 51-ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் வகையில் தலைமைக்கழகத்துக்கு நாளை காலை 9 மணிக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிறார். அவருக்கு ஆதிராஜாராம், சத்யா உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள், தொண்டர்களுடன் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுக்கிறார்கள். மேள தாளம் முழங்க வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமை கழக வளாகத்தில் உள்ள கட்சியின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை எம்.ஜி.ஆர். இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அனைத்து பிரிவு அணியினரும் பெருந்திரளாக கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.
சென்னையில் அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு தொடக்க விழாவை கோலாகலமாக கொண்டாடுவது போல் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கிளை, வார்டு, வட்ட மாவட்ட அளவிலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க. கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர்.