

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு இன்று வரும் தண்ணீர் அளவு மழையால் அதிகரித்துள்ளது, அணைக்கு நீர்வரத்து நீர் திறப்பும் 1.95 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது.
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இரு அணைகளில் இருந்தும் உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது.மேலும், இரு மாநில எல்லையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று அணைக்கான நீர்வரத்து 1.95 லட்சம் கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியாக நீடிக்கும் நிலையில், அணைக்கு வரும் நீர் முழுமையாக ஆற்றில் திறந்து விடப்படுகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக 21,500 கனஅடி, உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 73,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.அணையின் நீர்மட்டம் கடந்த 12 ஆம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து 8-வது நாளாக இன்றும் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. காவிரியாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தொடர்ந்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.