

கேரளத்தில் 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் இன்று திங்கள்கிழமை காலைக்குள் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அந்த மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் உத்தரவிட்டாா்.ஆளுநர் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் தரப்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை அவசர வழக்காக விசாரிக்க படுகிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவரின் நியமனத்தை அண்மையில் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
அந்த மாநிலத்தில் உள்ள மேலும் சில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், யுஜிசி விதிமுறைகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, அந்தப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் நியமனமும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில், கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி, மாநிலத்தில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் ராஜிநாமா செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தாா்.
அந்தப் பதிவுடன் எந்தெந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற பட்டியலையும் அவா் இணைத்திருந்தாா். அக்.24-ஆம் தேதி காலை 11.30 மணிக்குள் அனைவரும் ராஜிநாமா கடிதங்களை அனுப்ப வேண்டும் என்று அவா் உத்தரவிட்டுள்ளாா்.
கேரளத்தில் சங்க பரிவாருக்காக மாநில உயா்கல்வித் துறையை ஆளுநா் ஆரிஃப் முகமது கான் கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும், அவரைக் கண்டித்து ஆளுநா் மாளிகைக்கு எதிரே நவ.15-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் எம்.வி.கோவிந்தன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தங்களால் ஜனநாயக வழியில் ஆட்சிக்கு வர முடியாது என்பதை உணா்ந்த சில சக்திகள், சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பல்கலைக்கழகங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றன. அதற்கு பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநா் ஆரிஃப் முகமது கானை அந்த சக்திகள் பயன்படுத்துகின்றன. ஆளுநரும் தன்னை ஆா்எஸ்எஸ் ஆதரவாளா் என்று அறிவித்துக் கொள்கிறாா்.
அண்மையில், அவா் கேரள பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினா்களை நீக்கினாா். அந்த இடங்களை ஆா்எஸ்எஸ் ஆதரவாளா்கள் மூலம் நிரப்ப அந்த நடவடிக்கையை அவா் மேற்கொண்டாா். பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை அவா் சீா்குலைத்துள்ளாா். சங்க பரிவாருக்காக மாநில உயா்கல்வித் துறையை அவா் கட்டுப்படுத்த முயற்சிக்கிறாா்.
பல்கலைக்கழங்களின் வேந்தராக தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் ஆளுநருக்கு எதிராக மாநில முழுவதும் போராட்டங்கள் நடத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி தீா்மானித்துள்ளது.
நவம்பா் 15-ஆம் தேதி ஆளுநா் மாளிகைக்கு எதிரிலும், மாவட்ட அளவிலும் போராட்டங்கள் நடத்தப்படும். கல்லூரிகளிலும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தாா்.
இந்த நிலையில் பல்கலை.யின் துணைவேந்தர்கள் இன்றைக்குள் பதவி விலக வேண்டும் என்ற கேரள ஆளுநர் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று பதவி விலக வேண்டும் என்ற கேரள ஆளுநர் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளனர். இம்மனுக்களை அவசர வழக்காக கேரள உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று மாலை 4 மணிக்கு விசாரிக்கிறது.