பிரிட்டன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக் இன்று மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்தார். அப்போது அவரை பிரதமராக நியமினம் செய்து, புதிய அரசை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார்.மன்னர் மூன்றாம் சார்லஸ் ரிஷி சுனக்கை பிரிட்டிஷ் பிரதமராக நியமினம் செய்து உத்தரவிட்ட நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக இங்கிலாந்து பிரதமராக தேர்வானார்.
பிரிட்டனில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் கடந்த 20-ந்தேதி ராஜினாமா செய்தார். பொருளாதார நெருக்கடியை தீர்க்க அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு சொந்த கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின. இங்கிலாந்தில் ஆளும் கட்சித் தலைவர் தான் பிரதமர் பதவியை வகிக்கமுடியும். இதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், பெண் தலைவரான பென்னி மார்டண்ட் ஆகியோர் போட்டியிட முடிவு செய்து எம்.பி.க்களின் ஆதரவை திரட்டினர்.
357 எம்.பி.க்கள் கொண்ட கன்சர்வேடிவ் கட்சியில் ரிஷி சுனக்குக்கு அமோக ஆதரவு கிடைத்தது. அவருக்கு 140-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு அளித்தனர். இதற்கிடையே கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ரிஷி சுனக் அதிகாரப்பூர்வமாக அறித்தார்.
அதே வேளையில் வேட்பு மனுதாக்கல் கால அவகாசம் முடிய சில மணி நேரங்களுக்கு முன்பு போரிஸ் ஜான்சன், தான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதே போல் 100 எம்.பி.க்களின் ஆதரவை திரட்ட முடியாததால் பென்னி மார்டண்ட்டும் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் அறிவிக்கப்பட்டார். இதன்மூலம் அவர் இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக இங்கிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் ரிஷிசுனக் புதிய வரலாற்று சாதனை படைத்தார். இந்நிலையில், பிரிட்டன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக் இன்று மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்தார். அப்போது அவரை பிரதமராக நியமினம் செய்து, புதிய அரசை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார். புதிய பிரதமராக தேர்வான ரிஷி சுனக்குக்கு உலக தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
