
வானில் இன்று சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதை வெறும் கண்களால் பார்க்கலாம் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் எஸ்.சவுந்தர ராஜ பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பூமியின் நிழலில் நிலவு கடந்து செல்லும்போது அது சூரியனிடம் இருந்து நேரடியான ஒளியை பெற முடியாது. நிலவு, பூமி, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது இது நிகழும். அப்போது நிலவின் ஒளி குன்றுவதையே சந்திர கிரகணம் என்கிறோம். சந்திர கிரகணத்தின் போது சூரியனின் எதிர் திசையில் நிலவு வருவதால் சந்திர கிரகணம் பவுர்ணமியின் போதுதான் தெரியும்.
நிலவு முழு நிழல் பகுதியில் மறைவது முழு சந்திர கிரகணம் ஆகும். பூமியின் நிழல் பெரிய பரப்பில் விழுவதால் சந்திர கிரகணத்தை பூமியின் பெரும்பான்மையான பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் காணலாம். சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இன்று பகல் 2.39 மணி முதல் மாலை 6.19 மணி வரை நீடிக்கிறது. இதில் முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணியில் இருந்து மாலை 5.11 மணிவரை நிகழும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் மாலை 5.38 மணிக்கு தான் சந்திரன் உதயமாகிறது.
எனவே முழு கிரகணத்தை காண இயலாது. ஆனால் 5.38 மணியில் இருந்து மாலை 6.11 மணிவரை சுமார் 40 நிமிடங்கள் வரை கிழக்கு தொடுவானில் பகுதி சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். மேலும் இதுபோன்ற பகுதி சந்திர கிரகணத்தை மீண்டும் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந் தேதி தான் தமிழகத்தில் காண முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் சந்திர கிரகணம் இன்று மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.29 மணி வரை நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவின் அனைத்து இடங்களிலும் முழு சந்திர கிரகணத்தை பார்க்க முடியாது. கிரகணத்தை முன்னிட்டு தமிழகம்,கேரளா ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் கோயில்களில் நடை அடைக்கப்படுகிறது.
இன்று காலை முதல் மதியம் வரை வழக்கம்போல் பக்தர்கள் வழிபட பல கோயில்கள் திறந்திருந்தது.இன்று மாலை வழக்கமாக 5 மணிக்கு நடை திறக்க வேண்டியது சந்திரகிரகணம் என்பதால் மாலை 6.30 மணிக்கு மேல் நடை திறக்கும். எனவே மாலை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மாலை 6.30 மணிக்கு மேல் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை,பரிகாரம் செய்யலாம்.
