
காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. இளைஞர்களும் சிறுவர்களும் போதை கலாசாரத்திற்கு அடிமையாகி உள்ளார்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை மதுரையில் தெரிவித்துள்ளார்.
மதுரை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளிடம் கூறியுள்ளதாவது;
அமைச்சர் பொன்முடி சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். 2019 வரை ஹிந்தி கட்டாய பாடமாக இருந்தது. 1986ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாவது கட்டாய கல்விச் சட்டத்தில் இந்தி இருந்தது. திமுக ஆட்சியில் இந்தி கட்டாய பாடமாக தான் இருந்தது. இந்தி திணிப்பு எங்கேயும் இருந்து விடக்கூடாது என்பது பிரதமர் மோடியின் விருப்பம். பாரதிய ஜனதா கட்சியின் விருப்பம் கூட இதுதான்.
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இல்லம் தேடி கல்வி திட்டம் கூட புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதிதான். பேரை மட்டும் மாற்றி வைத்துக் கொள்கிறார்கள்.
அமைச்சர் பொன்முடி ஆரம்பத்தில் ஒன்றுமே வேண்டாம் என்று கூறியவர் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைக்கு நேராக வந்திருக்கிறார்.மருத்துவம் மற்றும் பொறியியல் பாடப்பிரிவு தமிழில் கொண்டுவர பாரதிய ஜனதா கட்சி தான் முதலில் போராடியது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பொறியியல் பாடப்பிரிவை முழுவதுமாக தமிழில் படிக்கக்கூடிய மொத்த மாணவர்கள் எண்ணிக்கை வெறும் 69 தான்… ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் பாடப்பிரிவில் படித்து வரும் நிலையில் தமிழில் வரும் 69 மாணவர் மட்டுமே தான் படித்து வருகிறார்கள்.
கோவை குண்டுவெடிப்பு இந்தியா முழுவதும் பேசும் பொருளாய் ஆனதற்கு காரணம் பாரதிய ஜனதா கட்சி எடுத்த நடவடிக்கை தான் காரணம்.கோவை குண்டுவெடிப்பு வழக்கு வெளிவந்ததற்கு தமிழக அரசு பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது
தமிழகத்தில் போதை கலாச்சாரம் கல்லூரி மாணவர்களிடமும் குழந்தைகளிடமும் அதிகரித்து வருகிறது.
போதை பழக்கத்திற்கு ஆளானவர்கள் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்ற நினைப்பில் இருக்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பீர் பாட்டில் எடுத்துச் செல்லும் அவல நிலை உள்ளது.
கட்டுக்கோப்பாக இருந்த தமிழகத்தின் கலாசாரத்தில் இது மிகவும் புதிதாக உள்ளது. மதுவும் கஞ்சாவும் தமிழக இளைஞர்களை சீரழித்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. போதை கலாசாரத்தை ஒழித்தால் மட்டுமே இளைஞர்கள் சமூகத்துடன் ஒட்டி வருவார்கள். இந்த நிலை மாறவில்லை என்றால் சமூகம் வேறு இளைஞர்கள் வேறு பாதையில் சென்று கொண்டிருப்பார்கள்.
காவல்துறைக்கு சில அதிகாரங்களை நிச்சயம் வழங்க வேண்டும். காவல்துறையினர் கையில் உள்ள லத்தி, வழி தவறிச் செல்லும் இளைஞர்களுக்கு உரிய பாடம்கற்பிக்க வேண்டும்.
காவல்துறை சீரழிந்தது என்றால் சமூகம் நிச்சயம் சீரழியும். சமூகத்திற்கும் காவல்துறைக்கும் ஒரு பிணைப்பு உள்ளது.கஞ்சா, மது கலாசாரம் ஓங்கிய பிறகு ரயில் முன்பாக இளம் பெண்ணை தள்ளி விடுகிறார். இதெல்லாம் தமிழகத்தில் புதிதாக நடைபெற்ற செயல். பாரதிய ஜனதா கட்சி ஆதரவு எப்பொழுதும் காவல்துறைக்கு முழுமையாய் உள்ளது.காவல்துறை நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டிக்கொண்டே இருந்தால் இன்னும் ஐந்து வருடங்களில் தமிழகம் எங்குச் செல்லும் என்று நினைக்கும் பொழுது அச்சமாக உள்ளது.
இம்முறை நடைபெறக்கூடிய தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி இமாலயா வெற்றி பெறும். கடந்த ஏழு முறை நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் ஒருமுறை கூட டெபாசிட் கூட வாங்கவில்லை. இதிலிருந்து காங்கிரஸ் கட்சி எந்த அளவுக்கு பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது.தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள் 1204 இடங்களில் விவசாயிகளுக்காக பால் முகவர்களுக்காக தமிழக மக்களுக்காக பாரதிய ஜனதா கட்சி போராட்டம் நடத்த உள்ளது. இந்தப் போராட்டம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை அல்ல மக்களின் கோபத்தை பறைசாற்றுவதாக நடைபெறும். இந்தப் போராட்டத்திற்குப் பிறகு நிச்சயம் பால் விலையை குறைப்பதற்கு தமிழக அரசுக்கு கட்டாய நிலை ஏற்படும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய அரசு கொடுத்த நிதியை பராமரிப்பது மட்டுமே மாநில அரசின் வேலை. மத்திய அரசு கொடுக்கும் நிதியை முறையாக பணிகளுக்கு ஒரு ஒப்பந்ததாரரை நியமித்து அதன் மூலம் பணிகளை தொடங்க மாநில அரசு தவறிவிட்டது. அமைச்சர் கே.என். நேரு 75 சதவீதம் பணிகள் முடிந்ததாக கூறுகிறார். மற்றொரு அமைச்சர் 85%சதவீதம் பணிகள் முடிந்ததாக கூறுகிறார். மேயர் 95 சதவீதம் வேலை முடிந்ததாக கூறுகிறார்.
மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக கொடுத்த நிதியை முறையாக பயன்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும். இந்த ஆண்டு சென்னையில் அவ்ளோ பெரிய மழை பெய்யவில்லை. குறைந்த அளவு தான் மழை பெய்தது. இதற்கே சென்னை தடுமாறிக் கொண்டிருக்கிறது. தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு கமிட்டி தலைவர் திருப்புகழ் ஐஏஎஸ் பாரத பிரதமர் மோடியிடம் நேரடியாக பாடம் கற்றவர் என அண்ணாமலை கூறியுள்ளார்.