தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே காட்டுப் பகுதியில் பால் வியாபாரிகள் இரண்டு பேர் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். பைக்கில் சென்ற நபர்களை அடித்துக் கொலை செய்த மர்ம நபர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஊத்துமலை அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் செல்வகுமார் மகன் ஆனந்த் (26) முருகன் மகன் சூரியராஜ் (17). இருவரும் பால் வியாபாரம் செய்து வருகின்றனர். வழக்கமாக ஒரே பைக்கில் சென்று அருகில் உள்ள பலபத்திரராமபுரம், கங்கனா கிணறு உள்ளிட்ட கிராமங்களில் பால் எடுத்துவிட்டு மீண்டும் இரவு 10 மணிக்கு முன்பாக நொச்சிகுளம் திரும்புவராம்.
வியாழக்கிழமை இரவு வெகு நேரமாகியும் இருவரும் ஊர் திரும்பாததால் உறவினர்கள் ஊத்துமலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து விட்டு 12 மணியளவில் அவர்களை தேடி சென்றனர்.
அப்போது பலபத்திராமபுரம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் இருக்கும் தோட்டத்திற்கு பால் எடுக்க செல்லும் வழியில் மர்ம நபர்களால் தலையில் இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு ஊத்துமலை போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் டிஎஸ்பி சகாய ஜோஸ் மற்றும் ஊத்துமலை போலீஸார் சடலங்களை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கொலையாளிகளை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
