

பிரதமர் மோடி திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைகழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கபதற்காக பெங்களூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலமாக வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைகழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி இசைஞானி இளையராஜா மிருதங்க வித்துவான் உமையாள் புரம் சிவராமன் மற்றும் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார்
பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்திலிருந்து வருகை தந்து பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக சின்னாளபட்டி சென்று அங்கிருந்து காந்தி கிராமம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இடத்திற்குச் சென்றார். மோடி வருகையின் காரணமாக மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு விமானம் நிலையம் முழுவதிலும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் காலோன், மேயர் இந்திராணி, மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் மற்றும் விமான நிலைய அதிகாரிகள், பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ஹெச்.ராஜா, பாஜக மகளிரணி நிர்வாகி மகாலெட்சுமி, பாஜகவினர் ஓபிஎஸ் தலைமையில் எம்பிக்கள் ரவீந்திரநாத், தர்மர், எம்எல்ஏக்கள் மனோஜ்பாண்டியன், ஐயப்பன், முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பிரதமர் மோடி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:- காந்திகிராம பல்கலைக் கழகத்தை மகாத்மா காந்தி திறந்து வைத்தார். கிராமப்புற மேம்பாடு குறித்த அவரது எண்ணங்களின் உணர்வை இங்கு காணலாம். கிராமத்தின் ஆன்மா நகரத்தின் வசதி என்பதே எங்கள் கொள்கை. காந்தியின் கொள்கையே தற்போதைய தற்சார்பு திட்டம். தற்போதைய வளர்ச்சி கிராமத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. கிராமங்கள் சுயமாக செயல்பட்டால் நாடும் சுயமாக செயல்படமுடியும். கிராமங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் பிரச்சனைகளை ஒன்றாக எதிர்கொள்ளலாம். கிராமங்களில் இணையம் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2 லட்சம் கிராமங்களில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. காதி பொருட்கள் உலக அளவில் கவனம் பெற்று வருகிறது, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
தமிழ்நாடு எப்போதும் தேசிய உணர்வுமிக்கதாக இருந்து வருகிறது. காசி தமிழ் சங்கமம் விரைவில் காசியில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழகத்தின் மொழி, கலாச்சாரம் கொண்டாடப்படும். பெண் சக்தியில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
