
14 லட்சம் பேர் நேற்று தமிழகம் வந்த பிரதமரை வரவேற்று நேற்று ட்விட்டரில் பகிர்ந்ததாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை இன்று தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் சென்னையில் பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களுக்கு பாஜக மீது அன்பு பெருகி வருகிறது. கொட்டும் மழையில் பெண்கள் கைக்குழுந்தையுடன் காண வந்தது பிரதமரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
நேற்று ட்விட்டரில் வணக்கம் மோடி என்ற ஹேஷ்டேக் அதிகளவில் பகிரப்பட்டது. 14 லட்சம் பேர் பிரதமரை வரவேற்று ட்விட்டரில் பகிர்ந்தனர். கட்சியில் யாரையும் இன்று இணைக்கவில்லை. பாஜக வளர்ச்சி, தமிழக மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தான் ஆலோசனை செய்தோம். தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை கூட்டத்தில் பேசவில்லை. தமிழக மக்களின் மீது எல்லையற்ற பாசம் வைத்துள்ளவர் பிரதமர் மோடி.
தாய்மொழியான தமிழ் மொழியை மெருகேற்ற வேண்டும் என அமித் ஷா அறிவுறுத்தி உள்ளார்.
ஆனால் 50 மாணவர்கள் மட்டுமே தமிழ் வழியில் பொறியியல் படிக்கின்றனர். தமிழ் வழியில் பொறியியல் படிப்புகளை படிக்க 1350 இடங்கள் உள்ளன. பிரதமர் மோடி, அமித்ஷா வருகை எங்களுக்கு ஊக்கமாக இருந்தது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று திண்டுக்கல் வந்த நிலையில் இன்று அவரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியா சிமெண்டின் 75ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.