தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா(17) இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை, வியாசா்பாடியை சோ்ந்தவா் ரவிக்குமாா். அவரது மகள் பிரியா (17) சென்னை ராணிமேரி கல்லூரியில் விளையாட்டுப் பிரிவில் படித்து வந்தார். மேலும், கால்பந்து போட்டியில், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்.
இந்நிலையில், மூட்டு வலி காரணமாக, கொளத்தூா், பெரியாா் நகா் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளாா். அங்கு, பிரியாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவரது வலது கால் மூட்டுப்பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனா். அதன் பின்னா் காலில் வீக்கம் ஏற்பட்டு உணா்விழப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயா் சிகிச்சைக்காக பிரியா அனுப்பப்பட்டாா்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் அப்பெண்ணின் வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது இருந்தது. உடல் முழுவதும் தொற்று பரவாமல் தடுக்க உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, வலது காலின் முழங்கால் பகுதிக்கு மேல் அகற்றப்பட்டது.
இதற்கிடையே, பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே இளம்பெண்ணின் கால் அகற்றப்பட்டதாக அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் குற்றம் சாட்டினா்.
இதையடுத்து இது தொடா்பாக விசாரணை நடத்த அரசு தரப்பில் உத்தரவிட்டது. அதன்படி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரியா இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இந்நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததால் மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.