பக்தர்கள் சரணகோஷம் முழங்க 41நாள் மண்டலபூஜைக்காக உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று புதன்கிழமை மாலை திறக்கப்பட்டது.டிசம்பர் 27-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது. 2023 ஜனவரி 14-ந்தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும்.
மண்டல-மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் தந்திரிகண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து நெய் தீபமேற்றி அணையாவிளக்கில் தீபமேற்றி 18படி அருகே உள்ள தேங்காய் ஆழியில் தீபமேற்றி வைத்தார்.தந்திரி கண்டரரு ராஜீவரு ஐயனின் தவக்கோலத்தை களைந்து ஐயரிடம் 41நாள் மண்டலபூஜை நடத்த அனுமதி கேட்டு பக்தர்களுக்கு பஷ்ப பிரசாதம் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து 18-ம்படிக்கு கீழ் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், புதிய மேல்சாந்திகள் பதவியேற்றனர். சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயராமன் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில்மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹரிகுமார் நம்பூதிரி ஆகியோர் பதவி ஏற்பு நிகழ்ச்சி தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் சன்னிதானத்தில் நடைபெற்றது.நாளை (வியாழக்கிழமை) அதிகாலை புதிய மேல்சாந்தி நடை திறந்து நெய்விளக்கு ஏற்றி வைக்க 41நாள் மண்டலபூஜை வழிபாடு துவங்கி நடைபெறும். மண்டல காலத்தில் நெய் அபிஷேகம் உட்பட வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
பக்தர்களின் சாமி தரிசனத்திற்கு பின்னர்இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
நாளை (வியாழக்கிழமை) அதிகாலை முதல், புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார். அன்று முதல் அதிகாலை 4மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி, அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி மண்டல பூஜையும், அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெறும்.
விழாவில் திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் உட்பட பலர் பங்கேற்றனர்.