கேரளாவில் பாலக்காடு அருகே போதைப்பொருள் கொடுத்து 17 வயது மாணவி 3 மாதம் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். இதில் பெண் உள்பட 8 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர் 13 பேரை தேடிவருகின்றனர்.
கேரளாவில் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் பெற்றோரிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். சிறுமியை காணாமல் தவித்த பெற்றோர் இது பற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமியை போலீசார் மீட்டனர். அந்த சிறுமியின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது. மேலும் அவர் போதைக்கு அடிமையாகி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த சிறுமிக்கு கவுன்சிலிங் கொடுத்து விசாரித்தனர்.
இதில் அந்த சிறுமியை கடந்த 3 மாதங்களாக 4 மாவட்டங்களுக்கு கடத்தி சென்று ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதன் விபரம் வருமாறு:- கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, அருகில் உள்ள பஸ் நிலையத்திற்கு சென்று உள்ளார். அங்கு சிறுமியை வாலிபர் ஒருவர் சந்தித்து பேசியுள்ளார். அவர் சிறுமியை அருகில் உள்ள லாட்ஜூக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து அவர் மயக்கத்தில் இருந்த போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை லாட்ஜ் உரிமையாளரும் சீரழித்துள்ளார். மறுநாள் அங்கிருந்து தப்பி வந்த சிறுமியை இன்னொரு நபர், வேலை தருவதாக கூறி அவரது வீட்டுக்கு அழைத்து சென்று கற்பழித்துள்ளார். இப்படி திருச்சூர், வயநாடு, பாலக்காடு உள்பட 4 மாவட்டங்களுக்கு அந்த சிறுமியை கடத்தி சென்று 3 மாதங்கள் செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளனர்.
இவை அனைத்தையும் தெரிந்து கொண்ட போலீசார் அந்த சிறுமி கொடுத்த தகவலின் பேரில் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் ஓட்டல் உரிமையாளர் ஜோசி தாமஸ், லாட்ஜ் உரிமையாளர் சாலாம், மானேஜர் அஜித்குமார், பூந்துறையை சேர்ந்த பெண் கிரிஜா உள்பட 8 பேரை கைது செய்தனர். இதில் 13 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். 17 வயது சிறுமியை கடத்தி போதைக்கு அடிமையாக்கி 3 மாதங்களாக ஒரு கும்பல் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.