மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய முகமது ஷாரிக் கோவை லாட்ஜில் மூன்று நாட்கள் தங்கி இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஊட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். குண்டு வெடிப்புக்கு முன்னதாக வயர்கள் இணைக்கப்பட்ட குக்கருடன் முகமது ஷாரிக் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி ஆசிரியர் சுரேந்திரன் சிங்காநல்லூர் தனியார் பள்ளியில் கால்பந்து பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார். அவர் காந்திபுரத்தில் உள்ள குறிப்பிட்ட அந்த தங்கும் விடுதியில் தங்கியிருந்தபோது முகமது ஷாரிக் அறிமுகம் ஆகியுள்ளார். அப்போது அவர் மொபைல் போன் சிம் கார்டு வாங்குவதற்கு சுரேந்திரன் உதவியுள்ளார். இப்படி உதவி செய்ய போய் சிக்கலில் மாட்டியுள்ளார் சுரேந்திரன். அவரிடம் ஊட்டி போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கோவை மாநகர போலீஸ் தனிப்படையினர் மங்களூரில் நேரடி விசாரணை நடத்துவதற்காக சென்றுள்ளனர். இதே போல கோவையில் நேரடி விசாரணை நடத்துவதற்காக மங்களூர் போலீஸ் தலைப்படையினரும் இங்கு வந்துள்ளனர். கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ., தனிப்படை அதிகாரிகள் தான் மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பையும் விசாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே குக்கர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய முகமது ஷாரிக், குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்கு முன்னதாக வயர்கள் இணைக்கப்பட்ட குக்கருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளவுதுறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘முகமது ஷாரிக், ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஷாரிக் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிடவில்லை. அவர் பயன்படுத்திய அனைத்து ஆதார் அட்டைகளும் கர்நாடகாவில் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.