சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிதியில் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில், “கடந்த 2021-ல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.ஆனால் தேர்தல் வேட்பு மனுவில் தவறான மற்றும் பொய்யான தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்,
குறிப்பாக தனது வேட்பு மனுவோடு இணைத்து வழங்கும் படிவம்-26 இல் தன் மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் அந்த தகவல் தவறானது. ஏனெனில் உதயநிதி மீது 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவர் வேட்பு மனுவில் பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது உதயநிதியின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என முறையிட்டு வலியுறுத்தினேன். ஆனால், எந்த பயனும் இல்லை.இந்த விதிமீறல் புகாரை புறந்தள்ளிவிட்டு உதயநிதியின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்றுக் கொண்டார்.
எனவே உதயநிதி வேட்புமனுவை ஏற்றது என்பது மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் கீழ் தவறானது. இதனால் அவர் தேர்தலில் பெற்ற வெற்றியும் முறைகேடானது. எனவே உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்” என்று மனுவில் கோரியுள்ளார். இதே கோரிக்கையுடன் ஏற்கெனவே எம்.எல்.ரவி தாக்கல் செய்திருந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.