போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வுக்கு 3½ லட்சம் பேர் திரண்டனர்- 3,552 பணியிடத்துக்கு கடும் போட்டி சென்னையில் ஏராளமான மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றது.
தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு படை வீரர்கள் ஆகிய பதவிகளுக்கு 3,552 காவலர் பணி இடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து 3½ லட்சத்துக்கு அதிகமானோர் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. 295 மையங்களில் காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. மதியம் 12.40 மணி அளவில் தேர்வுகள் முடிவடைகிறது. தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தவர்களில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 887 பேர் இளைஞர்கள் ஆவர். 66 ஆயிரத்து 811 பேர் பெண்கள். 50 பேர் திருநங்கைகள் ஆவர். சென்னையிலும் ஏராளமான மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை தேர்வு வாரிய டி.ஜி.பி. சீமா அகர்வால், ஐ.ஜி.செந்தில் குமார் ஆகியோர் செய்திருந்தனர். மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டுகளும், மாநகர பகுதிகளில் காவல் ஆணையர்களும் தேர்வுக்கான ஏற்பாடுகளையும், பாதுகாப்பு பணிகளையும் மேற்கொண்டிருந்தனர்.