சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டத்தால் பம்பையில் புனித நீராட பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் குளித்தால் பக்தர்களின் பாவம் நீங்குவதாக ஐதீகம். பம்பையில் பக்தர்கள் குளிக்கும் பகுதியில் 6 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. மண்டல பூஜையில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 89 ஆயிரம் பக்தர்கள் சபரிமலை செல்ல முன்பதிவு செய்திருந்தனர். இதில் 80 ஆயிரம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை சன்னிதானம் சென்ற பக்தர்கள் காலை 10 மணிக்குத்தான் சாமி தரிசனம் செய்தனர். இதன்மூலம் 18-ம் படி ஏற பக்தர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இதுபோல நெய்யபிஷேகம் செய்வதற்கும், பிரசாதம் வாங்கவும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சபரிமலை செல்லும் பக்தர்கள் பம்பையில் புனித நீராடுவது வழக்கம். பம்பை ஆற்றில் குளித்தால் பக்தர்களின் பாவம் நீங்குவதாக ஐதீகம். இதனால் சபரிமலை செல்லும் பக்தர்கள் அனைவரும் பம்பையில் நீராடிவிட்டுதான் செல்வார்கள். இவ்வாறு பம்பையில் குளிக்கும் பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் விட்டு செல்வது வழக்கம். இதனால் ஆறு மாசடைந்து வந்தது. எனவே பக்தர்கள் ஆற்றில் ஆடைகளை வீசி எறிவது தற்போது தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்கள் சபரிமலையில் குளிக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி பம்பையில் பக்தர்கள் குளிக்கும் பகுதியில் 6 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாயில்கள் வழியாக மட்டும் தான் பக்தர்கள் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டும். ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தால் இந்த பாதைகள் அடைக்கப்படும். மேலும் இந்த பகுதியில்தான் பக்தர்கள் குளிக்க வேண்டும் எனவும் இங்கு தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் தற்போது ஐயப்பன் கோவில் வருவாயும் அதிகரித்து வருகிறது. 10 நாட்களில் கோவில் வருவாய் சுமார் 52.55 கோடியாக இருந்தது. இதுபோல கேரள போக்குவரத்து கழகமும் கடந்த 10 நாட்களில் மட்டும் 4 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.