
உலகில் நடைபெறும் பண்டமாற்று முதல் காகிதங்கள் வரையிலான பணத்தின் பரிணாம வளர்ச்சி குறித்த சில தகவல்கள் வியக்க வைக்கிறது.
உலகில் வாழும் அனைத்து மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது பணம். அத்தகைய பணத்தின் பரிணாம வளர்ச்சி குறித்து தெளிவான தகவல்களுடன் தெரிந்து கொள்ளலாம்.
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு அதாவது ஆதி காலத்து மனிதர்கள் பணம் தோன்றுவதற்கு முன்பு தங்களிடம் இருக்கும் பொருட்களைக் கொடுத்து தங்களுக்குத் தேவையான மற்றொரு பொருளை வாங்கும் வழக்கத்தை வைத்திருந்தார்கள். அதாவது நான் இறைச்சி தருகிறேன் நீங்கள் பழங்களைக் கொடுங்கள் என்று ஒப்பந்தம் போட்டு பண்டமாற்று முறையில் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டார்கள்.

ஒரு பொருள் நமக்குத் தேவைப்படுகிறது என்றால் அதை வைத்திருக்கும் நபரிடம் அதற்கு நிகரான பொருள் ஒன்றை நாம் கொடுத்து விட்டு வாங்கிக் கொள்ளலாம்.
ஆனால் இரண்டு பொருட்களின் மதிப்பும் சமமானதாக இருக்க வேண்டும். தமிழகத்தில் இன்றளவும் சில இடங்களில் பண்டமாற்று முறை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பண்டமாற்று பணம் என்பது பணத்திற்கு நிகராக குறிப்பிட்ட சில பொருட்களைக் கொடுப்பது தான். இந்த முறை பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்துள்ளது. ஆனால் அப்போது சோழிகளைப் பணமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
பண்டமாற்று அல்லது பண்டமாற்று பணம் முறையில் ஒருவருக்குத் தேவையான பொருள் மற்றொருவரிடம் இருக்கும்பட்சத்தில் அவர்கள் தங்களிடம் இருக்கும் பொருளைக் கொடுத்து அதனைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அந்த மற்றொருவருக்கு இவரிடம் இருக்கும் பொருள் தேவை இல்லை என்றால் எப்படி பொருட்களை மாற்றிக் கொள்ள முடியும்.
இதனை சிந்தித்து அதன் விளைவாக மதிப்புக் குறையாத கெட்டுப் போகாத ஒரு பொருளைக் கொடுத்து தேவையான பொருளை வாங்கிக் கொள்ள உருவாக்கப்பட்டது தான் நாணயம். கிமு 600 முதல் 650க்கு இடைப்பட்ட காலத்தில் நாணயங்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் இது ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை.
அரசாங்கம் உலோகங்களை உருக்கி நாணயங்களாக தயார் செய்து பயன்படுத்துவதைக் காட்டிலும் அதற்கு நிகராக பணத்தை அச்சிடலாம் என்று முடிவு செய்தது. இதனால் உலோகங்களை வாங்கிக் கொண்டு அதற்கு நிகராக அரசு அங்கீகாரத்துடன் அச்சிடப்பட்டு கொடுக்கப்பட்டது தான் பணம்.
அதோடு அச்சிடப்பட்ட காகிதங்களைக் கொண்டு வருபவர்களுக்கு அதன் மதிப்பைப் பொறுத்து தங்கம் உலோகம் போன்றவை கொடுக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்தது. இது தான் இன்று நாம் பணத்தைக் கொடுத்து தங்கம் வெள்ளி போன்றவற்றை வாங்குவதற்குக் காரணம்.
நம் நாட்டின் நாணயம் இந்திய ரூபாய் என்று கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியில் 5 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரையிலான தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன. அதே போன்று உலோக நாணயங்கள் ஒரு ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை வெளியிடப்படுகின்றது.
இந்திய ரூபாய் தாள்கள் இரண்டு அம்சங்களில் அமைந்துள்ளது. ஒன்று அசோகா ஸ்தூபி வரிசை மற்றொன்று மகாத்மா காந்தி வரிசை. அசோகா ஸ்தூபி என்பது 1950ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்டு வெளியான ரூபாய் தாள்கள். அசோக ஸ்தூபி சின்னத்தை நீர்க்குறியாகக் கொண்டு அமைந்திருந்தது. பின்னர் 1980 ஆம் வருடம் வாய்மையே வெல்லும் எனும் தேசியத் சின்னத்துடன் வெளியானது தான் இந்த வரிசை.
மகாத்மா காந்தி வரிசை என்பது 1996ஆம் ஆண்டு முதல் மகாத்மா காந்தி வரிசை தாள்கள் அச்சிடப்பட்டன. இந்த ரூபாய் தாள்களில் மகாத்மா காந்தி நீர்க்குறி இடம் பெற்றிருக்கும். அதுபோன்று 2016 ஆம் ஆண்டு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுதான் மகாத்மா காந்தி புதிய வரிசை. இந்த ரூபாய் தாள்களில் முகப்பில் மகாத்மா காந்தியின் படமும் மறுபக்கத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் சின்னமும் அச்சிடப்பட்டிருந்தது.