
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் அருகே ஜானகிராம் பகுதியில் மினி வேன்(டாடா ஏஸ்) மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 15-க்கும் மேற்பட்டவர்களுடன் மினி வேன் ஜானகிபுரம் என்ற இடத்தில் சென்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்றுக்கொண்டிருந்த ஈச்சர் லாரி மீது மோதியது.
முன்னால் சென்ற லாரி மீது மினி வேன் மோதிய நிலையில், பின்னால் வந்த கனகர வாகனம் மினி வேன் மீது பயங்கரமாக மோதியது.
இரண்டு வாகனங்களுக்கு இடையே சிக்கிய மினி வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், பயணம் செய்த 6 பேர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.உடனடியாக இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 6 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கோயிலுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
அதிகாலை நடந்த விபத்தால் அப்பகுதி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதிகாலையில் நடைபெற்ற இந்த விபத்தில் உயிரிழந்த
சந்திரசேகர் 70,தாமோதரன் 28,சசிகுமார் 35,சேகர் 55,ஏழுமலை 65
,கோகுல் 33 ஆறு பேரும், சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
விபத்தில் ராமமூர்த்தி வயது 35,சதீஷ்குமார் வயது 27, ரவி வயது 26
,சேகர் வயது 37,அய்யனார் வயது 34 ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் சென்னை பல்லாவரம் பொழிச்சலூர் ஞானாம்பிகை தெரு பகுதி சேர்ந்தவர்கள்.இந்த விபத்து சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- சென்னை பல்லாவரம் பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த பத்து நபர்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு வேன் மூலம் சென்று திரும்புகையில் அவர்கள் வந்த வாகனம் இன்று (7-12-2022) அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம். ஜானகிபுரம் கிராமம் அருகே வந்துகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சந்திரசேகர் (வயது 70), சசிகுமார் (வயது 30), தாமோதரன் (வயது 28), ஏழுமலை (வயது 65). கோகுல் (வயது 33) மற்றும் சேகர் (வயது 55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இச்செய்தியை அறிந்தவுடன் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனை சம்பவ இடத்திற்குச் சென்று, உரிய உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். மேலும், இவ்விபத்தில் காயமுற்று செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 4 நபர்களுக்கு, சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இச்சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.