
தென்காசியில் பிரமாண்ட விழா- ரூ.182 கோடியில் 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்
அனைத்து துறைகளின் சார்பில் ரூ.34.14 கோடி மதிப்பில் 23 புதிய திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதல்-அமைச்சர் வருகையொட்டி தென்காசி நகர் பகுதி, புறநகர் பகுதி, ராஜபாளையம் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்தார். இதற்காக நேற்று மாலை சென்னை எழும்பூரில் இருந்து பொதிகை ரெயிலில் புறப்பட்டார். அவருக்காக தனியாக சொகுசு பெட்டி ஒன்று இணைக்கப்பட்டது. இன்று காலை 7.30 மணிக்கு தென்காசி ரெயில் நிலையத்தில் வந்திறங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு ஆகியோர் உடன் வந்தனர். அங்கு தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, மாவட்ட கலெக்டர் ஆகாஷ், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மாவட்ட செயலாளர்கள் சிவபத்மநாதன், ராஜா எம்.எல்.ஏ., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து ரெயில் நிலையத்தில் சிறிது தூரம் நடந்து சென்று அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடம் சால்வை உள்ளிட்டவைகளை பெற்றுக்கொண்டார்.
மேலும் பொதுமக்களுடன் கைகுலுக்கி கொண்ட பின்னர் வேனில் குற்றாலம் விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டார். அப்போது வழிநெடுகிலும் மயிலாட்டம், ஒயிலாட்டம், தாரை தப்பட்டை, சென்டைமேளம் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குற்றாலத்தில் சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் கணக்கப்பிள்ளை வலசையில் விழா நடைபெறும் தனியார்பள்ளி மேடைக்கு சென்ற அவர், அங்கு அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை பார்வையிட்டார்.
விழாவில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 508 பயனாளிகளுக்கு ரூ.182.56 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து அனைத்து துறைகளின் சார்பில் ரூ.34.14 கோடி மதிப்பில் 23 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அனைத்து துறை சார்பில் ரூ.22.20 கோடி மதிப்பில் 57 முடிவுற்ற பணிகளை அவர் தொடங்கி வைத்து பேசினார்.
தென்காசியில் இன்று நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தென்காசிக்கு வந்ததுமே இந்த மண்ணைப்போலவே மனமும் குளிர்ந்து வருகிறது. எப்போதும் லேசான தூரல், சாரலாக பெய்து வருவதை பார்க்கும்போது சென்னையை போன்று வெப்பமான இடத்தில் இருந்து வந்த எனக்கு இதமாக இருக்கிறது.
ஆண்டுதோறும் குற்றாலத்தில் சாரல் திருவிழா அரசு சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் அமைந்துள்ளது தென்காசி மாவட்டம். குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகியவற்றை உள்ளடக்கியது தென்காசி மாவட்டம். அதிகமான அருவிகளை கொண்ட மாவட்டம். அணைகள் உள்ள மாவட்டம். மொத்தத்தில் எழில் கொஞ்சும் மாவட்டம் தென்காசி மாவட்டம். வீரத்தின் விளைநிலமாக இருக்கக்கூடிய பூலித்தேவன் மண் இந்த மண். இந்திய விடுதலைக்காக குரல் கொடுத்து ஆங்கிலேயேர்களுக்கு வரி கொடுக்க மறுத்த பூலித்தேவன் மண் இந்த மண். நெற்கட்டான்செவலில் மாவீரன் பூலித்தேவனுக்கு மணிமண்டபம், சிலையுடன் அமைத்து கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியான ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ததும் முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான். வடக்கே ஒரு காசி உள்ளதை போல தெற்கே ஒரு காசி உருவாக்க வேண்டும் என்பதை மன்னர் பராக்கிரம பாண்டியன் நினைத்து உருவாக்கியது தான் தென்காசி கோபுரம்.
500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தென்காசி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட 1960-ம் ஆண்டு நினைத்தபோது திருப்பணிக்குழு தலைவராக நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவராக பி.டி.ராஜன் நியமிக்கப்பட்டார். பின்னர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆட்சிகாலத்தில் தினத்தந்தி அதிபர் பெருமதிப்பிற்குரிய பா.சிவந்தி ஆதித்தன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 25-06-1990-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த தினகரன் கே.பி. கந்தசாமி தலைமையில் ராஜகோபுரம் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.
இப்படி இயற்கைக்கும், ஆன்மீகத்திற்கும், வீரத்திற்கும், விளைச்சலுக்கும் புகழ்பெற்ற தென்காசி மாவட்டத்திற்கு வந்ததற்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். பூரிப்பு அடைகிறேன். இது அரசு விழாவா? அல்லது கட்சியின் மாநில மாநாடா? என்ற அளவிற்கு மிக பிரமாண்டமாக இந்த விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் தொகையும் மிக அதிக அளவில் ஆகும்.

தென்காசி மாவட்டத்தில் இதுவரை 73,491 பயனாளிகளுக்கு பயிர் கடன் மற்றும் நகை கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயம் செழிக்க ரூ.13 கோடி மதிப்பீட்டில் 1,823 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 1,701 குடும்பங்களுக்கு வேளாண் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ரூ.1.95 லட்சம் செலவில் 50 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஓய்வூதிய ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. சங்கரன்கோவிலில் புதிய கோட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. 150 கோவில்களில் 84 அர்ச்சகர்கள், 6 பட்டாச்சாரியார்கள், 60 பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திற்கான முக்கியமான கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து அது தொடர்பாக சற்று முன்னர் அதிகாரிகளிடம் பேசினேன். அதில் முக்கியமான சில கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அறிவிப்பை வெளியிடுகிறேன். முக்கிய போக்குவரத்து மிகுந்த சாலையாக அமைந்துள்ள புளியங்குடி-சங்கரன்கோவில் சாலை மேம்படுத்தப்படும். தென்காசியில் புதிய விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். பனையூர்-கூடலூர் சாலை மேம்படுத்தப்படும். சிவகிரி மற்றும் ஆலங்குளம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆலங்குளத்தில் புதிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்படும். தென்காசி மாவட்டம் இலத்தூர் ஏரி ரூ.10 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சி காலத்தில் ராமநதி, ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்ட பணிக்கு முறையாக அனுமதி பெறவில்லை.
தற்போது நமது தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசிடம் மேல்மட்ட கால்வாய்க்காக அனுமதி கேட்கப்பட்டுள்ளது. விரைவில் அனுமதிக்குப் பின் பணிகள் தொடங்கும். இந்த மாவட்டத்தை சேர்ந்த சண்முகவல்லி என்ற மாணவி இந்திய குடிமை பணி தேர்வில் அகில இந்திய அளவில் 108-வது இடத்தை பிடித்துள்ளார். தமிழக அளவில் 3-வது இடம் பிடித்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். இந்த மாவட்டத்தில் வினைதீர்த்த நாடார்பட்டியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் ஆராதனா என்ற சிறுமி, எங்களது பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் வேண்டும் என்று எனக்கு கடிதம் எழுதி உள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என் மீது குழந்தைகளும் இவ்வளவு நம்பிக்கை வைத்து கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளனர். சிறுமி ஆராதனா வைத்த கோரிக்கையை ஏற்று ரூ.35 லட்சம் மதிப்பில் அந்த பள்ளிக்கு முதல் கட்டமாக 2 வகுப்பறைகள் உடனடியாக கட்ட உத்தரவிட்டுள்ளேன். ஒவ்வொருவருடைய தேவையையும், ஒவ்வொருவரின் பிரச்சினையையும் அறிந்து நமது அரசு செயல்படுகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சி தலைவர் விடுபட்ட சில வாக்குறுதிகளை மட்டும் கூறி புலம்பிக் கொண்டிருக்கிறார்.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் எரிச்சல் வார்த்தைகளுக்கெல்லாம் பதில் அளிக்க விரும்பவில்லை. எங்களை நம்பி வாக்களித்தவர்களுக்கு உண்மையாகவும், உணர்வு பூர்வமாகவும் உள்ளோம். தமிழக மக்கள் இருண்ட காலத்தில் இருந்து உதயசூரியன் காலத்திற்கு வந்துவிட்டனர். இந்தியாவில் தமிழகம் முதலிடம் வரவேண்டும் என்பதே எனது லட்சியம், எனது குறிக்கோள். அனைத்து துறைகளிலும் தமிழகம் உயர்ந்து வருகிறது. இதனை மக்கள் மனதில் நான் கண்டுகொண்டிருக்கிறேன். இந்த ஆட்சி தான் தொடர வேண்டும் என்று கூறி மக்கள் என்னை ஊக்கப்படுத்தி வருகின்றனர். திட்டமிடுவது, திட்டமிட்டதை செயல்படுத்துவது தான் நல்லாட்சிக்கு அடையாளம். அதுதான் எங்கள் இலக்கு. அடுத்தகட்டமாக மாவட்ட வாரியாக சென்று நான் அறிவித்த திட்டப்பணிகள் செயல்படும் விதம் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்ய உள்ளேன்.
எந்த நோக்கத்திற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டது என்பதற்கான நோக்கத்தை கடைநிலை ஊழியர்கள் வரை அறிந்து செயல்பட வேண்டும். அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி தருவோம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கலெக்டர் ஆகாஷ் வரவேற்று பேசினார். பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், எம்.எல்.ஏ.க்கள் ராஜா, பழனி நாடார், சதன் திருமலைக்குமார், நெல்லை மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழா முடிவடைந்ததும் கார் மூலமாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு அவர் புறப்பட்டு சென்றார். அவர் சென்ற சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் வழிநெடுகிலும் நின்று அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
இதனையொட்டி தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், குமரி உள்பட 7 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். முதல்-அமைச்சர் வருகையொட்டி தென்காசி நகர் பகுதி, புறநகர் பகுதி, ராஜபாளையம் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது.
