

சபரிமலையில் மண்டலபூஜை வழிபாடு தரிசனம் செய்ய அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 1.20 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில் இதற்கு மேலும் பக்தர்கள் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு தற்போது மிக அதிகமாக வருவதால் பம்பை சபரிமலை மற்றும் நிலக்கல் பகுதியில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக உள்ளது.கடந்த இரு நாட்களாக மிக அதிகமாக பக்தர்கள் வருவதால் உடனடி தரிசன முன்பதிவு க்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் சபரிமலை கோயிலுக்கு கடந்த 24 நாளில் ரூ.125 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்வம் போர்டு தலைவர் அனந்தகோபன் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் சபரிமலைக்கு பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது கரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆன்லைன் முன்பதிவு முறையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 1.20 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நேரடியாக வரும் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு, உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு செய்யும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரு நாட்களாக சபரிமலை நடை அடைத்த பின்பும் பக்தர்கள் 18படி நடை வழியாக இருமுடி கட்டி சன்னிதானம் வந்து தரிசனம் செய்ய காத்திருந்தனர்.
இந்த நிலையில், சபரிமலை கோயிலுக்கு கடந்த 24 நாளில் ரூ.125 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்வம் போர்டு தலைவர் அனந்தகோபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, உண்டியல் காணிக்கை, அப்பம், அரவணை பிரசாத விற்பனை மூலம் ரூ.125 கோடி கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் அரவணை பிரசாதம் தேவஸ்வம்போர்டு சார்பில் சொந்தமாக தயாரிக்கப்படும்.சுற்றுச்சூழலுக்கு உகந்த டின்களில் அரவணை பிரசாதம் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
