சபரிமலையில் அப்பம், அரவணை தயாரிப்பு ஆலை உள்பட 5 திட்டங்களை செயல்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ந் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று வரை 16.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நடப்பாண்டில் பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு உடனடி முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் சபரிமலை கோவிலில் பக்தர்கள் வசதிக்காக 5 புதிய திட்டங்களுக்கு கேரளா அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சபரிமலை சன்னிதானத்தில் ரூ.15 கோடி மதிப்பில் அப்பம் மற்றும் அரவணை தயாரிப்பதற்கு தேவையான மாவு ஆலை அமைக்கப்பட உள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க குன்னூர் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர குழாய் பதிக்கும் திட்டம், பம்பை நதி குறுக்கே புதிய பாலம், நிலக்கல் அடிவாரத்தில் ரூ.8 கோடி மதிப்பில் புதிய பாதுகாப்பு வழித்தடம் உள்பட 5 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
