

ராஜஸ்தானில் விசித்திர வழக்கு ஒன்று நிகழ்ந்தது. காதலி கொலை என சிறைவாசம்; கணவருடன் வாழும் காதலியை 7 ஆண்டுகளுக்கு பின் தேடி, பிடித்த நபரால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் காதலி கொலை என சிறைவாசம் அனுபவித்த நபர், 7 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் வாழும் காதலியை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். தவுசா, ராஜஸ்தானின் மதுரா மாவட்டத்தில் ஜான்சி கிராமத்தில் வசித்து வந்த ஆரத்தி என்ற பெண் 7 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போயுள்ளார். ஆனால், அவரை காதலரான சோனு சைனி திருமணம் செய்து, கொலை செய்து விட்டார் என ஆரத்தியின் பெற்றோர் குற்றச்சாட்டாக கூறினர். போலீசில் அவர்கள் அளித்த புகாரை தொடர்ந்து, 2015-ம் ஆண்டில் சோனு மற்றும் அவரது நண்பர் கோபால் சிங் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன் சிறையில் இருந்து இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இதுபற்றி சோனு கூறும்போது, சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்ததும் ஆரத்தியை நாங்கள் தேட தொடங்கினோம். விஷாலா கிராமத்தில் வசிக்கும் நபர், ஜான்சியில் இருந்து ஒரு பெண் எங்கள் கிராமத்திற்கு வந்துள்ளார் என கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த நான், அது ஆரத்தியாக இருக்க கூடும் என எண்ணினேன். அதனை நிரூபிக்க காய்கறி விற்பவராகவும், ஒட்டகம் வாங்க வந்திருக்கிறேன் என கூறி அந்த கிராமத்திற்கு சென்றேன். இந்த நிலையில், ஆரத்தியை அடையாளம் கண்டு கொண்டு, அதனை உறுதி செய்தேன்.
இதுபற்றி மெகந்திப்பூர் காவல் நிலையத்தில் கூறியபோது, ஆரத்தியின் அடையாளம் எங்களுக்கு வேண்டும் என கூறி உதவி செய்ய மறுத்து விட்டனர். அடையாள அட்டை எனக்கு கிடைக்கவே 2 ஆண்டுகள் ஆகி விட்டன. அதன்பின்பே, போலீசார் விசாரணையில் இறங்கினர் என கூறியுள்ளார். மெகந்திப்பூர் காவல் நிலைய அதிகாரிகள் அளித்த தகவலை தொடர்ந்து, உத்தர பிரதேச போலீசார் ஆரத்தியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி அவரை கண்டுபிடித்தனர். அவர், கணவரான பகவான் சிங் ரேபாரி என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.
ஆரத்தியின் பெற்றோரை தொடர்பு கொண்டபோது, கொலை வழக்கு போலியானது என தெரிய வந்தது. ஆரத்தி உயிருடன் இருப்பது தெரிந்தது. இவ்வளவு நாளும் ஆரத்தி, தனது பெற்றோருடன் தொடர்பில் இருந்ததும், அவரது கொலைக்காக சோனு மற்றும் கோபால் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டது பற்றியும் ஆரத்தி நன்றாக அறிந்து இருந்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. ஆரத்தியை மரபணு சோதனைக்கு உட்படுத்தி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சோனுவின் கைது நடவடிக்கையால் இவரது தந்தை அதிர்ச்சியில் உயிரிழந்து உள்ளார். வழக்கு செலவுக்காக ரூ.20 லட்சம் வரை சோனு செலவிட்டு, கடனாளியாகி உள்ளார். எல்லாவற்றையும் இழந்து விட்டேன் என சோனு வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்து அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் அலிகார் நகரில் 2015-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந்தேதி தனது மகளை காணவில்லை என கூறி ஒருவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். தனது மகள் கோவிலுக்கு போனார். அதன்பின் அவர் திரும்பி வரவில்லை என புகாரில் தெரிவித்துள்ளார். கடைசியாக சிறுமி, விஷ்ணு கவுதம் என்பவருடன் காணப்பட்டார் என சிறுமியின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சில நாட்கள் கழித்து மார்ச் 24-ந்தேதி அடையாளம் தெரியாத சிறுமியின் உடலை போலீசார் கண்டெடுத்து உள்ளனர். அது தங்களின் மகள் என சிறுமியின் குடும்பத்தினர் அடையாளம் காட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து, தந்தவுலி கிராமத்தில் வசித்தவரான விஷ்ணுவை கொலை, தடயங்களை அழிக்க முயற்சித்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். 2 ஆண்டுகளாக சிறையில் இருந்த விஷ்ணு 2017-ல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால், சிறுமியின் பெற்றோர் விஷ்ணுவை சிறைக்கு அனுப்பும்படி கோர்ட்டில் கேட்டு கொண்டனர். இதனால், வழக்கு விசாரணை முடிவில் மீண்டும், விஷ்ணு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், விஷ்ணுவின் தாயார், தனது மகன் நிரபராதி என நிரூபிக்கும் வகையில் ஆவணங்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நீண்ட தேடுதலுக்கு பின்னர் இறுதியாக, ஆக்ராவில் அந்த சிறுமி, திருமணம் செய்து, கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் ஒன்றாக வசிப்பது தெரிந்தது. சிறுமியின் அடையாளம் பற்றி உறுதி செய்து கொண்ட விஷ்ணுவின் தாயார் அலிகாரில் உள்ள இந்து அமைப்புகளின் உதவியுடன் போலீசாரை அணுகியுள்ளார். இதனை கேட்டு ஆச்சரியமடைந்த போலீஸ் சூப்பிரெண்டு கலாநிதி உத்தரவின் பேரில், உடனடியாக போலீசார் செயல்பட்டு, மணமுடித்து தற்போது பெண்ணாக உள்ள, வழக்கில் தொடர்புடைய அந்த சிறுமியை நாக்லா சோக்கா கிராமத்தில் ஹத்ராஸ் கேட் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
அந்த பெண்ணின் மரபணு பரிசோதனை நடத்தி அடையாளம் உறுதி செய்யப்படும் என டி.எஸ்.பி. ராகவேந்திரா கூறியுள்ளார். இந்த நிலையில், பெண்ணின் குடும்பத்தினர் வழக்கில் சமரசம் செய்து கொள்ளும்படி தன்னை கட்டாயப்படுத்தி வருகின்றனர் என விஷ்ணுவின் தாயார் கூறியுள்ளார்.