
உலக பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் 30 நாட்களில் 19.38 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 21,71,452 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில் 19,38,452 பேர் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.
சபரிமலையில் 18-ம் படி வழியாக ஒரு நிமிடத்துக்கு 80 பக்தர்கள் வீதம் ஒரு மணி நேரத்தில் 4,800 பக்தர்கள் வரை மேலே சென்று சாமி தரிசனம் செய்ய தேவசம்போர்டு ஏற்பாடு செய்துள்ளது. நாள்தோறும் சபரிமலைக்கு 90,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்துக்கு வருவதால் தேவசம்போர்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சபரிமலையில் இன்று 90,827 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்துள்ளதாக தேவசம்போர்டு தகவல் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசித்து மகிழ்வது வழக்கம். கொரோனா காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்து இருந்த நிலையில் தற்போது தளர்வுகள் நீக்கப்பட்டதால் தினசரி பக்தர்களின் வருகை 70 ஆயிரத்தை கடந்து ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. நாளுக்கு நாள் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பக்தர்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் , தேசிய பேரிடர் மீட்பு படையினர் என சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல காலத்துக்கான நடை நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த மாதம் முழுவதும் சராசரியாக தினமும் 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்தனர். இந்த மாதம் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்துள்ளது. தினமும் சராசரியாக 80 முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். சில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்தையும் கடந்தது.
இந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி ஆரன்முலா பார்த்த சாரதி கோவிலில் இருந்து, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தங்க அங்கி ஊர்வலம் நடைபெறும். இந்த ஊர்வலம் டிசம்பர் 26 ம் தேதி பம்பை கணபதி கோவிலை வந்தடையும். பின்னர் அங்கிருந்து அன்று மாலை சன்னிதானம் கொண்டு செல்லப்படும். டிசம்பர் 27 ம் தேதி மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
மண்டல பூஜை நாளில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்யம், அபிஷேகம், கணபதி ஹோமம், உஷ பூஜை, நெய்யபிஷேகம், உச்சிக்கால பூஜை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை என வழக்கமான பூஜைகள் நடத்தப்படும். இவற்றோடு காலை 11 மணிக்கு களபாபிஷேகமும், அதைத் தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் மண்டல பூஜையும் நடத்தப்படும். பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 11 மணிக்கு ஹரிவராசனத்திற்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும். அதன் பிறகு மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 31 ம் தேதி நடைதிறக்கப்படும் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
