குமுளி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஐய்யப்ப பக்தர்கள் 8 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமுளி மலைப்பாதையில் 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய பக்தர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் குழுவினர் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். தரிசனம் முடிந்தபிறகு அவர்கள் நேற்று இரவு ஆண்டிப்பட்டி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். காரை ஆண்டிப்பட்டியை அடுத்த பிச்சம்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (40) என்பவர் ஓட்டினார். இந்தநிலையில் கார் வெள்ளி கிழமை இரவு 11.30 மணி அளவில் குமுளி-லோயர்கேம்ப் மலைப்பாதையில் மாதா கோவில் அருகில் வந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது.
ஒருகட்டத்தில் அந்த கார் மலைப்பாதையில் இருந்து 100 அடி பள்ளத்தில் தலைகீழாக பாய்ந்தது. அப்போது அங்குள்ள பெரியாறு அணையில் இருந்து லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்திற்கு செல்லக்கூடிய ராட்சத குழாய்கள் மீது கார் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி, அதில் வந்த ஐய்யப்ப பக்தர்கள் 8 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் சிறுவன், கார் டிரைவர் உள்பட 3 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது