

சபரிமலையில் ஜன 14 இல் நிகழும் மகரஜோதி தரிசனத்துக்கு பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என பத்தணந்திட்டா கலெக்டர் டாக்டர் திவ்யா எஸ். அய்யர் கூறினார்.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை நடந்து வருகிறது. இந்நிலையில், அனைத்துத்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர் மாவட்ட கலெக்டர் திவ்யா கூறியதாவது,
மகரஜோதி தரிசனத்துக்கு வரும் வாகனங்களுக்கு கூடுதல் ‘பார்க்கிங்’ வசதி ஏற்படுத்தப்படும். நிலக்கல்லில் மட்டுமின்றி பத்தணந்திட்டை மாவட்டத்தில் பிற இடங்களிலும் பார்க்கிங் வசதி செய்யப்படும். இங்கிருந்து அரசு பஸ்கள் மூலம் பக்தர்கள் பம்பை அழைத்து செல்லப்படுவர்.இந்த ஆண்டு, ஜோதி தரிசனத்துக்கு அதிக கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்கும்.
அரசு மற்றும் கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கூட்டத்தை ஒழுங்கு படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மகர ஜோதி தெரியும் இடங்களை ஆய்வு செய்து பலமான தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். ஜோதி தரிசனம் முடிந்த உடன் ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் புறப்படுவதால் ஏற்படும் நெரிசலை தடுக்கவும் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.