72பேர் பயணித்த நேபாள விமான விபத்தில் 68 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.நாளை நேபாளத்தில் துக்க தினம் அனுசரிப்பு விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் பயணித்துள்ளனர்.
நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் என மொத்தம் 72 பேருடன் பொக்காரா விமான நிலையத்திற்கு வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம், தரையிறங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. விமானம் தரையிறங்குவதற்கு விமான நிலையத்தை நெருங்கியபோது, சேதி ஆற்றின் கரையில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இதையடுத்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தீப்பற்றி கரும்புகை எழுந்ததால் மீட்பு பணி கடும் சவாலாக உள்ளது. இன்று மாலை நிலவரப்படி 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது. விபத்து பற்றி கேள்விப்பட்டதும் பிரதமர் புஷ்ப கமல் தால் பிரசந்தா அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார்.
விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து நேபாள அரசு நாளை ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கிறது. விபத்தில் இறந்தவர்களுக்கு இந்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா இரங்கல் தெரிவித்துள்ளார். விமானத்தில் பயணித்தவர்களில் 53 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். 6 குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 5 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
எட்டி ஏர்லைன்ஸின் 9N-ANC ATR-72 விமானம் காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்டது. காலை 11 மணியளவில் பொக்ரா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதால் தீப்பிடித்து எரிந்ததாகவும் விமானத்தில் இருந்த 10 வெளிநாட்டவர்களில் ஐந்து இந்தியர்கள் அடங்குவதாக இந்திய தூதரகம் ட்விட் செய்துள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த ஐந்து இந்தியர்கள் அபிசேக் குஷ்வாஹா, பிஷால் சர்மா, அனில் குமார் ராஜ்பர், சோனு ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சயா ஜெய்ஸ்வால் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக எட்டி ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.