பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்று மிக அதிகமாக காணப்பட்டது.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். இந்தநிலையில் கடந்த 14ந் தேதி முதல் பள்ளி,கல்லூரிகளுக்கு பொங்கல் விடுமுறை என்பதால் கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சூரிய உதயத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் குமரியில் குவிந்தனர். அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். மேலும், சபரிமலையில் மகர ஜோதியை தரிசித்த அய்யப்ப பக்தர்களும் குவிந்ததால் கூட்டம் அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருப்பதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.