நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தற்போது வறண்ட வானிலையும், அதிகளவில் பனியின் தாக்கமும் இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓய்ந்தது. பருவமழை ஓய்வதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் இரவில் இருந்து காலை வரை பனி கொட்டியது. அதிலும் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தற்போது வறண்ட வானிலையும், அதிகளவில் பனியின் தாக்கமும் இருந்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது என்றும், குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆய்வுமையம் கூறியிருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில், காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.