தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாள் இன்று அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது.
எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பலரும் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
மேலும், எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாளையொட்டி, அதிமுக தலைமை அலுவலகத்தில் 106 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 106-ஆவது பிறந்த நாளை, அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு வகைகளில் சிறப்பாகக் கொண்டாடிய கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. 35 ஆண்டுகளுக்கு முன்பு இப்பூவுலகை விட்டு மறைந்தும், இன்றுவரை பல கோடிக்கணக்கானவர்களின் உள்ளங்களில் மறையாமல் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ‘பொன்மனச் செம்மல்’ இதய தெய்வம், புரட்சித் தலைவரின் 106-வது பிறந்த நாளான இன்று, அ.தி.மு.க.வின் சார்பில், என்னால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று உலகெங்கும் வாழும் புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகள், பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர் என்ற செய்தி அறிந்து மிகவும் மகிழ்ச்சியுற்றேன்.
குறிப்பாக, தமிழகம் முழுவதும், பட்டி தொட்டியெங்கும் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து அளிக்கும் உத்வேகத்துடன் அவரது பிறந்த நாள், எழுச்சித் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு, கழக முன்னோடிகள் நலத் திட்டங்களை வழங்கி வருகிறார்கள். குறிப்பாகவும், சிறப்பாகவும், நமது தலைமைக் கழகமாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையிலும், அதனைச் சுற்றியுள்ள சாலைகளிலும் பல்லாயிரக்கணக்கான தாய்மார்களும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் ஆர்ப்பரித்து நின்று புரட்சித் தலைவர் புகழ் பாடியது கண்டு, உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் வாழ்வும், எங்கள் வளமும், மங்காத எம்.ஜி.ஆர். புகழ் என்று துந்துபி முழங்கி, அராஜக திமுக ஆட்சியை அகற்ற ஆர்ப்பரித்து நிற்கும் அனைத்து தீரர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். உறுதி, உழைப்பு, உயர்வு என்ற எண்ணத்துடன், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், மீண்டும் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவோம்; ஏழை, எளியவர்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என்று இந்த நன்னாளில் வீரசபதம் ஏற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதேபோல, ஓ.பன்னீர்செல்வம், தனது இல்லத்தில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி சென்னையில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘நான் மரியாதையுடன் பார்க்கக் கூடிய தலைவர் எம்ஜிஆர். கட்சி எல்லைகள் கடந்து அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. காமராஜர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தை விரிவுபடுத்தியவர். குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து இன்று பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த காலத்திலேயே குழந்தைகளுக்கு சத்துருண்டை கொடுத்தவர். மாணவர்களுக்கு படிப்புடன் சத்துணவும் கொடுத்தார். சிறந்த ஆட்சியாளராக இருந்தவர். எங்களது திருமணத்தை நடத்தி வைத்தவர். அந்த நன்றியுணர்வோடு இன்று எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்துவதில் பெருமைகொள்கிறேன்’ என்றார். எம்ஜிஆர் நல்ல கனவோடு கட்சி நடத்தி வந்தார். அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்றுவது சிறப்பாக இருக்கும் என்பது தமிழகத்தில் ஒருவராக எனது தனிப்பட்ட கருத்து’ என்றார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினர் எம்ஜிஆரின் பிறந்தநாளை இன்று கொண்டாடினர்.