தமிழகம்-தமிழ்நாடு இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை என கவர்னர் தமிழிசை கூறினார்.
ஆரோவில் வளர்ச்சி குழு கூட்டம், அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா மற்றும் காணும் பொங்கல் விழா புதுவை கவர்னர் மாளிகையில் நடந்தது. ஆரோவில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து காணொலி காட்சி மூலம் விளக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கவர்னர் தமிழிசை பேசியதாவது:- சுதந்திரத்திற்காக போராடிய அரவிந்தர், பாரதியார் கனவுகளை நாம் நிறைவேற்ற வேண்டியது அவசியம். விடுதலை போராட்ட காலத்தில் புதுவை ஒரு தாயின் மடியைபோல பலரை அரவணைத்து, அரவிந்தர், பாரதியார், வாஞ்சிநாதன் போன்றோருக்கு புகலிடமாக இருந்தது.
ஆரோவில் நகரத்தில் 5 ஆயிரம் குடும்பங்கள் இருக்க வேண்டும் என்று அன்னை கனவு கண்டார். இத்தனை ஆண்டுகள் கடந்தும் 3 ஆயிரம் குடும்பங்கள் மட்டுமே உள்ளது. இதையெல்லாம் சரிசெய்வதற்கு தொடர்ந்து கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. கவர்னருக்கு அதிகாரம் இல்லை என கூறும் முதல்வர்கள், கவர்னரின் பொறுப்பு என்ன என்பதை புரிந்து செயல்பட வேண்டும். தமிழகம், தமிழ்நாடு இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
தமிழ்நாடு என்ற பெயருக்கு மிகப்பெரிய சரித்திரம் இருக்கிறது. மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு அந்த பெயர் கிடைத்தது. அவ்வளவு எளிதாக அந்த பெயரை புறம் தள்ளிவிட முடியாது. நான் மக்களுக்காகத் தான் செயல்படுகிறேன். கோப்புகளை கோப்புகளாக பார்க்காமல் மக்கள் முகங்களாக பார்க்கிறேன். தமிழகத்தில் ரூ.1000 அறிவிக்கப்பட்டு இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் புதுவையில் அதை முதலமைச்சருடன் சேர்ந்து வழங்க உள்ளோம்.
மக்களுக்காக செய்வதில் எந்த பாரபட்சமும் புதுவையில் இல்லை. இவ்வாறு அவர் பேசினார். ஆரோவில் மாணவிகள் கவர்னர் தமிழிசைக்கு நினைவு பரிசு வழங்கினர். ஆரோவில் அமைப்பின் செயலாளர் ஜெயந்தி ரவி தலைமையில் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.