சனி பெயர்ச்சி 2023
கணிப்பு – ஜோதிடர் காளிராஜன்,
astroTSK (9843710327)
எல்லாம் சிவமயம். அன்னை வேல்மலை காளி பாதம் போற்றி. அன்னை வராகி பாதம் போற்றி. நவக்கிரகங்கள் பாதம் போற்றி. விதியின் பாதம் போற்றி.
உள்ளடக்கம்
சனிப்பெயர்ச்சி:
திருக்கணித பஞ்சாங்கப்படி ஒரு சனிப்பெயர்ச்சியும் வாக்கிய பஞ்சாங்கப்படி ஒரு சனிப் பெயர்ச்சியுமாக இரு விதங்களில் கடைப்பிடிக்கப் படுகிறது. இருக்கட்டும். இந்த சனிப்பெயர்ச்சியில் 12 ராசிக்கும் பலன்கள் எப்படி இருக்கும்? பரிகாரம் எந்த ராசிக்காரர்கள் செய்ய வேண்டும், எந்த ராசிக்காரர்கள் செய்ய வேண்டாம் . பரிகாரம் செய்தாலும் பலன் பெற முடியுமா? இவற்றை நானறிந்த வகையில் பகிர்கிறேன்.
வருகின்ற 17.1.2023 சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கும்ப ராசி கால புருஷனின் பதினோராவது வீடு. ஸ்திர ராசி, உன்னதமான ராசி. பிறர் மதிக்கக் கூடிய ராசி, நிலையான ராசி, நிலைத்து நிற்கக் கூடிய ராசி, காற்று தத்துவ ராசி, காமத் திரிகோண ராசி.
இந்த ராசியில் ராகுவின் நட்சத்திரம், குருவின் நட்சத்திரம், செவ்வாயின் நட்சத்திரம், அதாவது சதயம், பூரட்டாதி, அவிட்டம் இந்த நட்சத்திரம் கும்ப ராசிக்குள் உள்ளது . இந்த மூன்று கிரகமும் இந்த மூன்று நட்சத்திரமும் நிதியையும் தைரியத்தையும் முன்னோர்களுடைய நிலையையும் காட்டுகின்ற உன்னதமான ராசி கும்பம். அப்படிப்பட்ட இந்த ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியாகி வரப் போகிறார்.
சனிபகவானின் சிறப்பு:
இந்த உலகத்தில் அதிகமாக பேசப்படக்கூடிய ஒரு கிரகம் என்றால் சனி பகவானைப் பற்றிதான் பேசுவார்கள். அதாவது பாமரன் முதல் பணக்காரர் வரை இவரைப் பற்றி ஒரு கணமாவது பேசி விடுவார்கள். நன்மையான காலங்களில் பேசுவது கிடையாது. துன்பம் நேருகின்ற பொழுது எல்லாம் சனி படுத்துற பாடு இருக்கே அப்பப்பா என்று அலுத்துக்கொள்பவரே அதிகம்.
ஆனால் சனி எவரையும் கெடுக்கமாட்டார்! பாடத்தைக் கற்றுக் கொடுப்பவர் குரு. கல்வி என்று வரும்பொழுது புதனையும் சேர்த்துச் சொல்லலாம்.ஆனால் அனுபவத்தை, அதாவது வாழ்க்கைப் பாடத்தை, கஷ்டமோ நஷ்டமோ அனுபவப் பாடத்தை போதிப்பவர் சனி பகவானே.
அத்தகைய சனி பகவான் எப்படிப்பட்டவர், எப்படியெல்லாம் செயல்படுவார். இவருக்கென்று ஒரு கொள்கை. நவக்கிரக சட்ட திட்டம். விதிமுறை மாறாத கிரகம். பிரபஞ்சத்தில் அனைவரையும் ஒன்றாகப் பார்க்கக்கூடிய கிரகம் சனிபகவான் மட்டுமே. பரிகாரம் செய்தாலும் சரி பரிகாரம் செய்யாவிட்டாலும் சரி, அவர் ஒரு ராசிக்கு செய்யக்கூடிய நன்மையாக இருக்கட்டும்; தீமையாக இருக்கட்டும்; ஜயமுடன் செய்துவிடுவார். அவர் காரகத்துவத்தில் இருந்தும் கடமையில் இருந்தும் ஒருபொழுதும் மாறவே மாட்டார்.
சனி பகவான் நீதிமான். நேர்மையானவர். நீதி யைநிலைநாட்டுபவர். நீதி+மான்; நீதி சொல்லும்பொழுது, துலாம் ராசியைக் காட்டும். தராசுக் கோல் சின்னம் கொண்ட ராசியில் சனிபகவான் உச்சம் அடைகிறார். மான் என்றால் மகரம். இங்கே ஆட்சிபெறுகிறார். இந்த மகர ராசி காலபுருஷனுக்கு 10ஆமிடம். கர்மத்தைக் குறிக்கக்கூடிய இடம். ஒருவர் செய்கின்ற நல்லதையும் கெட்டதையும் பொறுத்து லாப மேன்மையை அடையக்கூடிய வீடு, கும்பம் சனிபகவானின் மூலத்திரிகோணத்தில் அமருகிறார். அடுத்து இவர் இருக்கும் வீட்டை விருத்தி செய்வார். பார்க்கும் வீட்டை பாழாக்குவார்.
நவகிரகங்களில் சனிபகவானுடைய தயவு அனைவருக்கும் தேவை. காரணம் எவ்வளவு பெரிய யோகங்கள் இருந்தாலும் அதை அனுபவிக்க ஆயுள் தேவை. நீண்டஆயுளுடன் வாழ வேண்டுமானால் சகல சுகத்தையும் பெற ஆயுள் தேவை. ஆயுளுக்கும் சனியே காரகர். மனிதன் நீண்டநாள் வாழ்ந்தாலும் செளகரிகமாக வாழ பணம் சம்பாதிக்க வேலை தேவை. ஒருவருக்கு நல்லவேலை வேண்டுமென்றாலும் சனியின் தயவு அவசியமாகிறது. அப்படிப் பார்க்கும்போது ஜீவனகாரகன் ஆகிவிடுகிறார்.
சனிபகவான் ஒருவருடைய ஜாதகத்தில் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று பலமாக இருந்தால் தலைமைப் பொறுப்பை வகிக்க வைத்து அழகு பார்ப்பவர் சனி பகவானே. இவர் தயவு இருந்தால் உணவுப் பஞ்சம் இல்லாமல் வளமாக வாழ வைக்கக் கூடியவர். இவருக்கு நீதியுடனும் நேர்மையுடனும் வாழக் கூடியவரை அதிகமாக வளரச் செய்யக் கூடியவர். நீதியுடன் வாழவில்லையென்றால் நிதியை (பொருளாதரம்) சீர்குலைத்து விடுவதும் உண்டு.
இவர் ஒரு ராசிக்கு 3-6-11 மிடங்களில் இருந்தால் சிறப்பான பலனை செய்வார். என்பது ஜோதிடவிதி. அதைப் போல் 3-7-10பார்க்கும் அஇடத்தை பாழாக்கிவிடுவதும் உண்டு.மேல்சொன்னமாதிரி பார்வை பலன் குறைவுதான்.
கோள்சாரம் (பெயர்ச்சி) : பலன்கள் பரிகாரங்கள்
சனிபகவான் ஒரு ராசியைக் கடக்க இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார். இப்படி 12 ராசியைக் கடக்க 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். அதான் 30 ஆண்டுகள் வாழ்ந்தவரும் இல்லை; வீழ்ந்தவரும் இல்லை என்கிறார்கள். ஒரு ராசிக்கு ஒன்றாமிடமோ இரண்டாமிடமோ பனிரெண்டாமிடமோ இருந்தால் 7 1/2 ச் சனி காலகட்டம். இதே சனிபகவான் ராசிக்கு 4மிடத்தில் இருந்தால் அர்த்தாஷ்டம சனி என்றும் 8மிடத்தில் இருந்தால் அஷ்டமச்சனி என்றும் கூறுவர்.
அஷ்டமச் சனி காலகட்டங்களில் அதாவது சனி 8ல் இருக்கும்பொழுது ஜாதகரை படாதபாடுபடுத்தி பிரச்னைகளை சந்திக்க வைத்து ஒரு அனுபவ பாடத்தை பட்டு தெளிய வைத்து விடுவார். நண்பர்களே அனுபவம். அர்த்தாஷ்டமசனி காலகட்டத்தில் அஷ்டமச்சனி நடக்கும் கெடுபலனை பாதியாக தருவார். அடுத்து ஜென்மச்சனி காலகட்டத்தில் பாதி நன்மையும் தீமையும் கலந்து கொடுப்பார். ஏனென்றால் சனி இருக்கின்ற இடத்தை விருத்தி செய்வார் என்பதை மேலே பார்த்துவிட்டோம். நியாமான பலனைக் கொடுப்பார். அதிகமாக எதிர்பார்க்க முடியாது. விருத்தி செய்வார் என்று நற்பலனை அதிகம் எதிர்பார்த்துவிடக்கூடாதல்வா.
இருக்கும் ராசியை ஒழுங்கு படுத்துவார். அடுத்து 2ல் இருக்கும் சனி வாக்குச்சனி. எதைப் பேச வேண்டும் எதைப் பேசக்கூடது என்று பேசவும் வைக்கும். ஜாதகரை புரியவைத்துவிடும். 12ல் இருக்கும் சனி விரயச் சனி. விரயம் என்றாலே அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் இந்தக் காலகட்டத்தில் வீண் விரயத்தை செய்யவைப்பார்.
சரி அதையெல்லாம் சரி செய்ய முடியுமா என்று கூர்ந்து கவனிக்கும் போது சனிபகவான் அவர் கணக்கில் சரியான முறையில் நடந்து கொள்வார். அவருக்கென்று ரூல்ஸ் அதிலிருந்து மாற வழியில்லை. இனி 12 ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை சுருக்கமாகக் காண்போம்.
மேஷம்:-
காலபுருஷனின் முதல் ராசி. இந்த ராசிக்கு 10மிடத்தில் இருந்த சனி பகவான் பெயர்ச்சிக்கு பிறகு 11மிடம் சென்று பலனை வாரி வழங்குவார் என்பதும், அதே சமயம் கும்பத்திலிருந்து 3ம் பார்வையாகப் பார்க்கும்போது பாழாக்குவரா என்ற கேள்வியும் உண்டு. பாதி நல்லதும் கெட்டதும் இணைந்தே கிடைக்கும். பரிகாரமாக நினைக்காமல் வினைகள் தீர்க்கும் மகா கணபதியை அருகம்புல் சாற்றி வழிபடுவதால் நன்மையும் நடக்கும். இறைவனுக்கு செய்தோம் என்ற ஒரு ஆத்ம திருப்தியும் கிடைக்கும்.
ரிஷபம்:-
காலபுருஷனுக்கு இரண்டாமிடம் ரிஷப ராசி. இதுவரை ராசிக்கு 9ம் இடத்தில் இருந்த சனி பகவான் பெயர்ச்சிக்கு பிறகு 10மிடம் செல்வது உகந்தது அல்ல. ஏற்கனவே மேலே பார்த்தோம், ஜீவனஸ்தானம் என்றும் தொழில் ஸ்தானம் என்றும் பார்த்தோம். உத்யோகத்தில் இருப்பவர்கள் வேறு தனியார் உத்யோகத்தில் இருப்பவர்கள் ஆனாலும் கவனமாக செயல்படவேண்டும். தன்னுடைய வேலையை மட்டும் கவனிக்கவேண்டும். தேவை இல்லாமல் தலையிடுவது சஞ்சலத்தைக் கொடுக்கும். இந்த ராசிக்காரர்கள் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் ஆடை தானம் செய்வது உத்தமம். ஏழைகளுக்கு ஒருவர் கருனை காட்டினால் அவர் மீது சனிபகவான் அதிகமாக பாசம் காட்டுவார்.
மிதுனம்:-
கால புருஷனுக்கு 3மிடம் மிதுனம். ராசிக்கு இதுவரை 8மிடத்தில் அஷ்டமச் சனியாக இருந்து கண்ணீரை வரவழைத்த. சனிபகவான் பெயர்ச்சிக்கு பிறகு 9மிடத்திற்கு வருவது சுமாரான பலன்தான். இந்த ராசிக்காரர்கள் தந்தையின் மீது கவனமும் அக்கறையும் எடுத்துக் கொள்ள வேண்டும். தந்தையுள்ளவர்கள் தந்தைக்கும் தந்தையில்லாதவர்கள் தந்தையின் வயதுக்கு நிகரானவர்களுக்கும் ஆடைதானம் அன்னதானம் கொடுத்து பராமரிப்பது உத்தமம்.
கடகம்:-
காலபுருஷனுக்கு நான்காமிடம் கடகராசி. இதுவரை7ம் இடத்தில் இருந்த சனி, பெயர்ச்சிக்கு பிறகு 8மிடம் சென்று அஷ்டமச் சனியாக இருந்து கெடுபலனை கொடுப்பார். அதைத் தவிர்க்க ஊனமுற்றவர்களுக்கு உதவுதல், உணவும் ஆடையும் வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்விப்பதால். சனிபகவானே சந்தோஷம் கொள்வார்.
சிம்மம்:-
காலபுருஷனுக்கு 5வது ராசி சிம்மராசி. இதுவரை ஆறாமிடத்தில் இருந்த சனிபகவான் பெயர்ச்சிக்கு பிறகு 7மிடம் சென்று கண்டக சனியாகிறார். பலன் கிடைக்குமா? பலன்குறைவு சுமார்தான். மருத்துதுவமனைகளில் உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு உணவு, மருந்து, ஆடை வாங்கி கொடுத்து உதவலாம்.
கன்னி:-
காலபுருஷனுக்கு 6வது கன்னிராசி . ராசிக்கு 5லிருந்த சனிபகவான் குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் கொடுத்தவர் ஆறாமிடம் சென்று சிறந்தபலனைகொடுப்பார்.
துலாம்:-
காலபுருஷனுக்கு 7மிடம் துலாராசி. ராசிக்கு இதுவரை நான்காமிடத்தில் இருந்து வந்த சனிபகவான் பெயர்ச்சிக்கு பிறகு 5மிடம் செல்வது உகந்தது அல்ல. இந்த ராசிக்காரர்கள் சிறுவர் சிறுமியர்களுக்கு படிப்பிற்கு உதவுதல் அருமையான பரிகாரம் செய்வது உத்தமம்.
விருச்சிகம்:-
காலபுருஷனுக்கு 8மிடம் விருச்சிகராசி. ராசிக்கு இதுவரை 3லிருந்த சனி பெயர்ச்சிக்கு பிறகு 4மிடம்சென்று அர்த்தாஷ்டம சனியாகிப் போகிறார். அஷ்டமச்சனியின் பாதிப்பு எவ்வளவோ அதில் பாதி பாதிப்புக்குள்ளாக்கும். தாயின் மீது பாசம் காட்டவேண்டும். தாயாரை பராமரிக்கவேண்டும். இல்லாதவர்கள் தாய்க்கு நிகரானவர்களுக்கு மருத்துவ உதவி, அன்னம்தானம் ஆடை தானம் போன்றவை செய்துவர உத்தமம்.
தனுசு:-
காலபுருஷனுக்கு 9வது ராசி தனுசுராசி. ராசிக்கு இதுவரை 2லிருந்த சனி பகவான் பெயர்ச்சிக்கு பிறகு 3மிடம் சென்று சிறப்பான பலனை வாரி வழங்குவார்.
மகரம்:-
காலபுருஷனுக்கு 10மிடம் மகரராசி. ராசிக்கு இதுவரை 1லிருந்த சனிபகவான் பெயர்ச்சிக்கு பிறகு இரண்டாமிடம் சென்று வாக்குச் சனியாக மாறுவதால் பேச்சில் கவனம் தேவை. பாடும் கலைஞர்களுக்கு உதவி செய்வது உத்தமம்.
கும்பம்:-
காலபுருஷனுக்கு 11ம்வீடு கும்பராசி. ராசிக்கு இதுவரை 12லிருந்த சனிபகவான் பெயர்ச்சிக்கு பிறகு 1மிடம் வந்து ஜென்மச் சனியாக இருந்து சிரமத்தையும் சிந்தையை சிதற வைப்பதும் வேலையாக இருக்கும். முன்னோர் வழிபாடு, குறிப்பாக சொல்ல வேண்டுமானால் எவரொருவர் சிவனைப் பிடித்து வழிபடுகிறாரோ அவர் மேன்மையை பெறலாம்.
மீனம்:-
காலபுருஷனுக்கு 12ம் வீடு மீனராசி. ராசிக்கு இதுவரை 11மிடத்தில்இருந்து வந்த சனிபகவான் பெயர்ச்சிக்கு பிறகு 12மிடம் வந்து பலனை விரயம் செய்ய வந்ததுபோல் இருக்கும். வீண் விரயத்தை தவிர்க்க ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் ஆடைதானம் செய்வதும் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவுதலும் நலிந்த கூலி விவசாய தொழிலார்களுக்கு உதவுதலும் சிறப்பு.
அதோடு மட்டுமல்ல, ஒருவருடைய ஜாதகத்தில் சனிபகவான் நல்ல நிலைமையில் இருந்தால் நல்ல பலனை வாரி வழங்குவார். நடைபெறுகின்ற தசா காலமும் புத்தி காலமும் சிறப்பாக இருக்கவேண்டும். ஜாதகாத்தில் தசா புத்தி சரி இல்லையென்றால் பலனும் குறையத்தான் செய்யும். எல்லாம் சனி கிரகம் நன்றாக இருந்தால்தான் சிறப்பு.