நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து விளக்கம் கேட்டு மத்திய உள்துறை, ஆயுஷ் அமைச்சகம் மூலம் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரி 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதனைத் தொடர்ந்து 2-வது முறையாக தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே விளக்கம் கேட்டு மத்திய அரசு அனுப்பிய கடிதத்துக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் தந்த நிலையில் மறுவிளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டிருக்கிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி ஓரிரு வாரங்களில் மத்திய அரசுக்கு மீண்டும் பதில் அனுப்பி வைக்கப்படும் என கூறியுள்ளார்.