கர்நாடகா யாத்கிரியில் நடந்த விழாவில் பா.ஜ.க அரசானது ஓட்டு வங்கி அரசியலுக்கானது இல்லை. வளர்ச்சிக்கான அரசு என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதுடன், பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடகா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதுடன், பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் தொடங்கி வைத்தார். கர்நாடகாவின் யாத்கிரி மாவட்டத்திற்கு சென்ற பிரதமர் அங்கு ஜல் ஜீவன் இயக்கத்தின்கீழ் பல கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். குடிநீர், பாசனம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தார்.
கர்நாடக மாநிலம் யாத்கிரி பகுதியில் நடந்த விழாவில், நீர்வழி, அணை, போக்குவரத்து, சாலை, உள்ளிட்ட ரூ.2,050 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி பேசியதாவது:
இந்த திட்டங்களால் விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கும்.சிறந்த நிர்வாகமே பா.ஜ.,வின் இலக்காக இருந்தது. எங்களது அரசு ஓட்டு வங்கி அரசியலுக்கானது இல்லை. வளர்ச்சிக்கான அரசு. அடுத்த 25 ஆண்டுகளானது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும், மாநிலங்களுக்கும் பொற்காலமாக இருக்கும்.
இந்த காலத்தில் நாட்டை வளர்ச்சி பெற செய்ய வேண்டும். நிலத்தில் தரமான பயிரை நடவு செய்யும் போதும், தொழில் விரிவடையும் போது இந்தியா வளரும்.இரட்டை என்ஜீன் அரசு மூலம் இரட்டை நலத்திட்டங்கள் கிடைக்கும். இதன் பலனை கர்நாடக மக்கள் பார்க்கின்றனர்.
யாத்கிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கர்நாடகாவின் வடக்கு பகுதிகளை பின்தங்கிய பகுதிகள் என அறிவித்த முந்தைய அரசுகள், அவர்களின் கடமையை மறந்து விட்டனர். முந்தைய அரசுகள் வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்தவில்லை.
3.5 ஆண்டுகளுக்கு முன்னர் ஜல் ஜீவன் மிஷன் அறிவிக்கப்பட்ட போது, மொத்தம் உள்ள 18 கோடி வீடுகளில் 3.5 கோடி வீடுகள் மட்டுமே குழாய் மூலம் குடிநீர் பெற்றன. ஆனால், இன்று 11 கோடி வீடுகளுக்கு குடிநீர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
கலபுரகி மாவட்டத்திற்கு சென்ற பிரதமர் அங்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கர்நாடக பயணத்தை முடித்துக் கொண்டு மகாராஷ்டிரா செல்லும் பிரதமர் மோடி அங்கு 38,800 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். மாலையில் மும்பை செல்லும் பிரதமர், அங்கு பல்முனை வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மும்பை மெட்ரோவின் இரண்டு வழி ரெயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர், மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்கிறார் என தெரியவந்துள்ளது.